×

மக்களிடம் பயமுறுத்தும் வகையில் பாஜ தலைவர்கள் பேச்சு; காங். தேர்தல் அறிக்கையால் பாஜவின் அஸ்திவாரம் ஆடிப்போய் விட்டதா?

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையால் தேசிய அளவில் பாஜவின் அஸ்திவாரம் ஆடி போய் விட்டதோ என்று எண்ண தோன்றுகிறது. ஏனென்றால் இந்த முறை தேர்தல் பிரசாரத்தில் பாஜக முக்கியமான அஸ்திரம் ஒன்றை எடுத்துள்ளது. அந்த பயத்தில்தான் அக்கட்சி தலைவர்கள் பேசி வருகிறார்களோ என்று மக்கள் பேச தொடங்கியுள்ளனர். நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு கடந்த சில வாரங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டது. அதில் சில அதிரடியான அறிவிப்புகளும் இடம் பெற்றிருந்தன. குறிப்பாக நாடு முழுவதும் சமூக, பொருளாதார, சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்படும். இடஒதுக்கீடு உச்ச வரம்பு 50 சதவீதம் என்பதை உயர்த்த சட்டத்திருத்தம் செய்யப்படும்.

எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான காலி பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரட்டிப்பாக்கப்படும். ஒரேநாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தப்படாது. தேர்தலில் பழைய முறையே தொடரும். பாஜ அரசு கொண்டு வந்த மக்கள் விரோத சட்டங்கள் மறு ஆய்வு செய்யப்படும். மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் நடைமுறை ஒழிக்கப்படும். ஒன்றிய அரசு பணிகளில் 50 சதவீதம் வரை பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும். மாணவர்கள் பிரச்னைகளை தீர்க்க ரோஹித் வெமுலா சட்டம் இயற்றப்படும். தனியார் கல்வி நிறுவனங்களில் பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் இடஒதுக்கீடு வழங்க தனி சட்டம் கொண்டு வரப்படும்.

பெண்களுக்கு வருடத்திற்கு 1 லட்சம் ரூபாய் கொடுக்கப்படும் என்றெல்லாம் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இந்த அறிவிப்புகள் மக்களிடையே பெரிய தாக்கத்தை பெற்றது. பலரது கவனத்தையும் ஈர்த்தது என்றே சொல்லலாம். ஆனால் பாஜவின் தேர்தல் அறிக்கை மக்களிடையே கவனம் பெறவில்லை. அதோடு பாரத் ஜோடோ யாத்திரை, நியாய யாத்திரை என்று ராகுல் காந்தியின் யாத்திரை, இந்தியா கூட்டணி, ராஜ்புத் பிரிவினரின் எதிர்ப்பு என்று தேசிய அளவில் நடக்கும் விஷயங்களும் பாஜவிற்கு எதிராக திரும்பியுள்ளன. இப்படிப்பட்ட நிலையில்தான் தேர்தல் பிரசாரத்தில் பாஜ முக்கியமான அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளது. அதாவது தேர்தல் பிரசாரத்தில் பயமுறுத்த கூடிய ஒன்றை பாஜ கையில் எடுத்துள்ளது.

மோடி அஸ்திரம்;
உதாரணமாக இஸ்லாமியர்களுக்கு இந்துக்களின் சொத்துக்களை காங்கிரஸ் கொடுக்கும் என்று மோடி கூறினார். இந்துக்களின் சொத்துக்களை அவர்கள் எடுத்து கொள்வார்கள். இந்துக்களின் தாலியை கூட எடுத்து கொள்வார்கள்.
இந்துக்களின் தங்கத்தை தேடி அவர்கள் வருகிறார்கள். விட மாட்டார்கள் என்று மோடி கூறினார். ஆனால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அப்படி எந்த ஒரு அறிவிப்பும் இல்லை.

யோகி அஸ்திரம்
ஷரியத் சட்டத்தை அமல்படுத்துவோம் என்று காங்கிரஸ் கூறியதாக யோகி ஆதித்யநாத் உத்தர பிரதேச பிரசாரத்தில் பீதி கிளப்பினார். அதாவது ஷரியத் சட்டத்தை கொண்டு வருவோம் என்று காங்கிரஸ் சொல்கிறது. அந்த சட்டம் வந்தால் இந்தியாவிற்கே சிக்கலாகும். இந்தியா இஸ்லாமிய நாடாகும் என்றார். ஆனால் காங்கிரஸ் கட்சி அறிவிப்பில் அப்படி எதுவும் இல்லை.

அமித் ஷா அஸ்திரம்
பணக்காரர்களுக்கு சொத்து வரி போடப்படும். சாதாரண சொத்து வரி அல்ல பரம்பரை சொத்து வரி. அதாவது பரம்பரையாக உள்ள சொத்திற்கு தனி வரி போடப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சொன்னதாக அமித் ஷா பயமுறுத்தினார். ஆனால் அப்படி எதுவும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இல்லை. மாறாக அமித் மால்வியா போன்ற பாஜ நிர்வாகிகள்தான் இதை ஆதரித்து இதற்கு முன் பேசி வந்துள்ளனர். இந்த 3 தலைவர்களும் காங்கிரசுக்கு எதிராக மேற்கண்ட 3 விஷயங்களை அஸ்திரங்களாக எடுத்துள்ளனர். ஆனால் மூன்றுமே பொய்யான விஷயங்கள். மூன்றும் காங்கிரஸ் மூலம் அறிவிக்கப்படாத அறிவிப்புகள். பாஜவினர் அச்சத்தில் இருக்கிறார்களோ… அதனால்தான் திடீரென இப்படி எல்லாம் தீவிரமான விஷயங்களை பயமுறுத்தும் வகையில் மக்களிடம் பேச தொடங்கி உள்ளதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

The post மக்களிடம் பயமுறுத்தும் வகையில் பாஜ தலைவர்கள் பேச்சு; காங். தேர்தல் அறிக்கையால் பாஜவின் அஸ்திவாரம் ஆடிப்போய் விட்டதா? appeared first on Dinakaran.

Tags : BJP ,Kong ,New Delhi ,Congress party ,Dinakaran ,
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக கையெழுத்து பிரசாரம்