×

தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் : அமலாக்கத்துறை அலுவலகத்தில் 5 மாவட்ட கலெக்டர்கள் நேரில் ஆஜர்!!

சென்னை: தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் தொடர்பாக 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளன்ர். தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதல் அளவுக்கு சட்டவிரோதமாக மணல் அள்ளியதாக குவாரி ஒப்பந்ததாரர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதை தொடர்ந்து மணல் குவாரி அதிபர்களான திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன், கரிகாலன், ஆடிட்டர் சண்முகராஜ் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்கள், குவாரிகளில் கடந்த ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் 34 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் பல கோடி ரூபாய் சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட ஆவணங்கள், அரசு விதிகளை மீறி மணல் அள்ளியது, விற்பனை செய்தது உள்ளிட்ட ரசீதுகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து முறைகேடுகள் நடந்ததாக கரூர், வேலூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாநில நீர்வளத்துறையின் மூத்த அதிகாரிகள், ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர்கள் உள்ளிட்ட பலருக்கு நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதை எதிர்த்து 5 மாவட்ட கலெக்டர்கள் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அமலாக்கத்துறையின் சம்மனுக்கு இடைக்கால தடை விதித்தது. இதற்கு எதிராக அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அப்போது இன்று (25ம் தேதி) அமலாக்கத்துறை முன்பாக 5 மாவட்ட கலெக்டர்கள் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி கரூர், திருச்சி, தஞ்சை, அரியலூர், வேலூர் என 5 மாவட்ட கலெக்டர்கள் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

இதைத் தொடர்ந்து வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி, அரியலூர் ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா, கரூர் ஆட்சியர் தங்கவேல், திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார், தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் அமலாக்கத்துறை முன் நேரில் ஆஜராகினர். 5 பேரிடமும் தனித்தனியாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மணல் அள்ளப்பட்ட விவகாரம் தொடர்பான கேள்விகளுக்கு ஆட்சியர்கள் அளிக்கும் பதில்கள் வாக்குமூலமாக வீடியோ பதிவாகிறது. சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரத்தில் ஆட்சியர்களுக்கு தொடர்பு உள்ளதா அல்லது அவர்களுக்கு தெரியாமல் மணல் அள்ளப்பட்டதா தொடர்பான விவரங்கள் இந்த விசாரணையில் சேகரிக்கப்பட உள்ளது.

The post தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் : அமலாக்கத்துறை அலுவலகத்தில் 5 மாவட்ட கலெக்டர்கள் நேரில் ஆஜர்!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Dinakaran ,
× RELATED வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்; சரும...