×

வாரிசு வரி விதிக்க திட்டமா? காங்கிரசின் ஆபத்தான நோக்கங்கள் வெளிவர தொடங்கியுள்ளன: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

அம்பிகாபூர்: சாம் பித்ரோடாவின் வாரிசு வரி கருத்துக்கள் மூலம் மக்களின் சொத்துக்கள் மற்றும் உரிமைகளை பறிக்கும் காங்கிரசின் ஆபத்தான நோக்கங்கள் வெளிவர தொடங்கியுள்ளன என பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பித்ரோடா தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், அமெரிக்காவில் பரம்பரை அல்லது வாரிசு வரி சட்டம் உள்ளது. ஒருவர் 100 மில்லியன் அமெரிக்க டாலரை வருவாயாக ஈட்டிய போது அவரது மறைவுக்கு பின் அவரால் முழு சொத்துகளையும் தனது வாரிசுகளுக்கு வழங்க முடியாது.அவர் ஈட்டிய சொத்துகளில் 45 சதவீதத்தை மட்டும் தனது வாரிகளுக்கு வழங்க முடியும், மீதமுள்ள 55 சதவீத சொத்துகளை அரசு எடுத்து கொள்ளும்’’ என்றார். அவருடைய இந்த பேச்சு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சட்டீஸ்கரில் உள்ள சர்குஜா மாவட்டம், அம்பிகாபூரில் நேற்று நடந்த பேரணியில் பேசிய பிரமர் மோடி,‘‘ காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மக்களின் சம்பாத்தியம் மற்றும் சொத்துக்களை காங்கிரஸ் கொள்ளையடித்து சமமாக பங்கிடும். காங்கிரசின் ஆபத்தான நோக்கங்கள் ஒவ்வொன்றாக வெளிவருகின்றன. இப்போது அது பரம்பரை வரி விதிக்கப்படும் என்று சொல்கிறது. காங்கிரஸ் கட்சியின் இளவரசரின் தந்தையிடம் ஆலோசகராக இருந்தவர், அதிக வரி நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் கடினமாக உழைத்து சம்பாதிப்பவர்கள் மீது திணிக்கப்பட வேண்டும் என்று பேசியுள்ளார்.

இதை அவர் பகிரங்கமாக கூறினார். இப்போது அவர்கள் ஒரு படி மேலே சென்று வாரிசு வரி விதிக்கிறோம் என்று காங்கிரஸ் கூறுகிறது. பெற்றோரிடமிருந்து மக்கள் பெற்ற சொத்துக்களுக்கு வரி விதிக்கும். இப்போது, அந்த கட்சி உங்கள் பிள்ளைகளிடம் இருந்து சொத்துக்களை பறித்துவிடும் என்று பெயர் எதுவும் குறிப்பிடாமல் கூறினார்.மேலும் அவர் பேசுகையில் ‘‘ நீங்கள் உயிருடன் இருக்கும் வரையும், உங்கள் ஆயுள் முடிந்த பிறகும், அது உங்கள் மீது வாரிசு வரியைச் சுமத்தும். அவர்கள் உங்கள் சொத்துக்களையும் உங்கள் குழந்தைகளின் உரிமைகளையும் பறிக்க விரும்புகிறார்கள்’’ என்றார். பாஜ தேசிய செய்தி தொடர்பாளர் சுதான்சு திரிவேதி, இது போன்ற சொத்து பறிப்பாளர்களிடம் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.

காங். மறுப்பு
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாம் பித்ரோடா இந்தியாவின் வளர்ச்சிக்காக ஏராளமான மற்றும் நீடித்த பங்களிப்புகளை செய்துள்ளார். அவர் இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரசின் தலைவராக உள்ளார். அவர் தனது கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்துகிறார். ஒரு ஜனநாயகத்தில், ஒரு நபர் தனது தனிப்பட்ட கருத்துக்களை பற்றி விவாதிக்கவும், வெளிப்படுத்தவும், சுதந்திரமாக செயல்படவும் முடியும். அதேநேரம் அவரின் கருத்துக்கள் எப்போதும் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை பிரதிபலிக்காது என்றார்.

சாம் பித்ரோடா விளக்கம்
இது பற்றி சாம் பித்ரோடா அளித்த விளக்கம்: அமெரிக்காவில் பரம்பரை வரி குறித்த என்னுடைய கருத்துகளை திரித்து சில மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளது துரதிர்ஷ்டவசமாகும். ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அமெரிக்காவில் விதிக்கப்படும் பரம்பரை வரி பற்றி பேசினேன். அதற்கும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கொள்கைகளுக்கும் சம்மந்தம் இல்லை. 55 சதவீத சொத்துக்களை எடுப்பது பற்றி யார் பேசினார்கள். இதே போல் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் என்று யார் பேசினார்கள். எதற்காக பாஜவும்,மீடியாவும் இது பற்றி பீதி அடைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முஸ்லிம் இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு
பிரதமர் மோடி நேற்று காலை சட்டீஸ்கரில் நடந்த பேரணியின் போது, மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது என்று குற்றம் சாட்டினார். பின்னர் மத்திய பிரதேச மாநிலம்,சாகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசும்போது,‘‘ கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசு பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டு பிரிவில் முஸ்லிம்களையும் சேர்த்துள்ளது. இதே மாதிரியான இடஒதுக்கீட்டை நாடு முழுவதும் கொண்டு வர அக்கட்சி திட்டமிட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டோர்,தலித்,பழங்குடியினரின் இடஒதுக்கீட்டு உரிமையை காப்பதற்கு பாஜ கட்சி 400 இடங்களுக்கு மேல் வெல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

The post வாரிசு வரி விதிக்க திட்டமா? காங்கிரசின் ஆபத்தான நோக்கங்கள் வெளிவர தொடங்கியுள்ளன: பிரதமர் மோடி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Congress' ,PM ,Modi ,Ambikapur ,Congress ,Sam Pidrota ,Indian Overseas ,president ,Sam Pitroda ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…