×

ஸ்டொய்னிஸ் 124, கெய்க்வாட் 108* ரன் விளாசல் வீண்: சென்னையை வீழ்த்தியது லக்னோ

சென்னை: சூப்பர் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். ரகானே, கெய்க்வாட் இணைந்து சிஎஸ்கே இன்னிங்சை தொடங்கினர். ரகானே 1 ரன் எடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த மிட்செல் 11 ரன், ஜடேஜா 16 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். அதிரடியாக விளையாடிய கெய்க்வாட் 28 பந்தில் அரை சதம் அடித்தார். சூப்பர் கிங்ஸ் 11.5 ஓவரில் 101 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து சரிவை சந்தித்த நிலையில், கெய்க்வாட் – ஷிவம் துபே ஜோடி அமர்க்களமாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட்ட இருவரும் 4வது விக்கெட்டுக்கு 104 ரன் சேர்த்து அசத்தினர். துபே 22 பந்தில் அரை சதம் அடிக்க, மறு முனையில் கெய்க்வாட் 44 பந்தில் சதத்தை நிறைவு செய்தார்.

நடப்பு தொடரில் கெய்க்வாட் அடித்த 2வது சதம் இது. துபே 66 ரன் (27 பந்து, 3 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசி கடைசி ஓவரில் ரன் அவுட்டானார். கடைசி பந்தை எதிர்கொண்ட தோனி அதை பவுண்டரிக்கு விரட்ட, சேப்பாக்கம் அரங்கம் ரசிகர்களின் ஆரவாரத்தில் அதிர்ந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 210 ரன் குவித்தது. கெய்க்வாட் 108 ரன் (60 பந்து, 12 பவுண்டரி, 3 சிக்சர்), தோனி 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

லக்னோ பந்துவீச்சில் ஹென்றி, மோஷின், யாஷ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய லக்னோ அணி 19.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 213 ரன் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது. ஸ்டொய்னிஸ் அதிகபட்சமாக 124 ரன் (63 பந்து, 13 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசினார். பூரன் 34 ரன், ஹூடா 17 ரன் எடுத்தனர். சென்னை பந்துவீச்சில் பதிரனா 2 விக்கெட் வீழ்த்தினார். லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் 8 போட்டியில் 5வது வெற்றியை பதிவு செய்து அசத்தியது.

The post ஸ்டொய்னிஸ் 124, கெய்க்வாட் 108* ரன் விளாசல் வீண்: சென்னையை வீழ்த்தியது லக்னோ appeared first on Dinakaran.

Tags : Stoinis ,Gaekwad ,Lucknow ,Chennai ,IPL league ,Super Kings ,Lucknow Supergiants ,MA Chidambaram Arena ,Chepakkam ,KL Rahul ,
× RELATED தோனியுடன் இணைந்து ஆட்டத்தை முடித்தது...