×

தூங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன் செல்போனை ‘OFF’செய்யுங்க!

நன்றி குங்குமம் தோழி

‘‘வரும் முன் காப்போம்… எல்லோரும் பின்பற்ற வேண்டியது. இன்றைய காலக்கட்டத்தில் யாருக்கு என்ன நோய் எப்போது ஏற்படும் என்று கணிக்கவே முடிவதில்லை. அதன் அடிப்படையில் அந்தந்த வயதில் அதற்கான ஆய்வுகளை மேற்கொண்டால், நோயின் தாக்கத்தினை ஆரம்பநிலையில் கண்டறிந்து அதனை முற்றிலும் குணப்படுத்த முடியும்’’ என்கிறார் நியுபர்க் ஆய்வு மையத்தில் கன்சல்டன்ட் மருத்துவரான டாக்டர் அகிலா. இவர் நம் உடலை எவ்வாறு ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விவரித்தார்.

‘‘எந்த ஒரு நோயும் முன்கூட்டியே கண்டறிந்தால் அதற்கான சிகிச்சையினை மேற்கொள்ள முடியும். நீரிழிவு 25 வயதிலுள்ளவர்களை கூட தாக்குகிறது. 30 வயதினை கடந்தவர்கள் ரத்தப் பரிசோதனை செய்தால் அவர்களுக்கு நீரிழிவு நோயின் பாதிப்பு ஏற்படுமா அல்லது பாதிக்கப்பட்டுள்ளார்களா என கண்டறிந்து அதற்கு ஏற்ப சிகிச்சை அளிக்க முடியும். அவர்களுக்கு நீரிழிவு நோயின் பாதிப்பு வரும் காலத்தில் ஏற்படும் என்று ஆய்வில் கண்டறிந்தால் அதற்கான உணவு மற்றும் உடற்பயிற்சி செய்வதை அன்றே துவங்க வேண்டும்.

இதன் மூலம் நீரிழிவு நோயின் தாக்கம் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளலாம். திரெட் மில் செய்தால், இதய பிரச்னையினை கண்டறியலாம். இ.சி.ஜியில் கண்டறியாத சின்ன மாற்றங்களும் திரெட்மில்லில் தெரியும்’’ என்றவர் தற்போது பெரும்பாலானவர்கள் ஃபேட்டி லிவர் பிரச்னையால்
அவதிப்படுவதாக கூறினார்.

‘‘ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இதய பிரச்னை இல்லாமல், பெரும்பாலான இளைஞர்கள் சந்திப்பது, ஃபேட்டி லிவர் பிரச்னை. கணையம் இன்சுலினை சுரக்கும். அது நம் உடலில் உள்ள குளுக்கோஸை கட்டுப்பாட்டில் வைக்கும். இன்சுலின் சரியாக சுரக்கவில்லை என்றால், அதற்கு முதல் முக்கிய காரணம் உடல் பருமன். இந்த ஃபேட்டி லிவர் பிரச்னை இளைத்தவர்களையும் பாதிக்கிறது. அதற்கு பாடி காம்போசிஷன் அனாலிசஸ் செய்ய வேண்டும்.

இதன் மூலம் நம் வயிற்றில் உள்ள கண்களுக்கு தெரியாத கிருமிகளை கண்டறிந்து சிகிச்சை பெறலாம். பொதுவாக மண்ணீரலை சுற்றி ெகாழுப்பு இருக்கும். அது ஃபேட்டி லிவர் உள்ளவர்களுக்கு அதிகமாக இருக்கும். அதனால் தான் ஒல்லியாக இருப்பவர்களுக்கு தொப்பை பெரியதாக தெரியும். இதனை விசரல் கொழுப்பு என்று குறிப்பிடுவோம். இது நீரிழிவு, இதய பிரச்னை மற்றும் மண்ணீரலில் அதிக அளவு கொழுப்பு தேக்கத்தை ஏற்படுத்தும்.

மண்ணீரலை சுற்றி கொழுப்பு தங்க காரணம் நம்முடைய உணவு பழக்கவழக்கம் மற்றும் முறையற்ற சாப்பாடு. இரவு எட்டு மணிக்குள் சாப்பிட்டு முடித்திட வேண்டும். சரியான நேரத்தில் முறையாக சாப்பிட்டால்தான் சாப்பிட்ட உணவுகள் சரிவிகித குளுக்கோஸாக மாற்றக்கூடிய வேலையினை உடல் மேற்கொள்ளும்’’ என்றவர் சாப்பிடும் முறைகளை சரியாக கடைபிடித்தாலும், உடற்பயிற்சி மற்றும் தூக்கமும் அவசியம் என்று குறிப்பிட்டார்.

‘‘சிலர் ஒரு மணி நேரம் கடுமையான உடற்பயிற்சி செய்வார்கள். அதற்கு பதில் 20 நிமிடம் பிரிஸ்க் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். பிறகு 10 நிமிடம் யோகாசனம். அதில் சூரிய நமஸ்காரம் மற்றும் பிராணாயாமம் காலை இளம் வெயில் நேரத்தில் செய்தால், சூரியக் கதிரில் இருந்து வெளியாகும் விட்டமின் டி எலும்பினை வலுவாக்கும். குறிப்பாக புற்றுநோய் வராமல் பாதுகாக்கும். இன்றைய சூழலில் பெண்கள் தங்களுக்காக சில மணி நேரம் ஒதுக்க தவறுகிறார்கள்.

அப்போதுதான் நீங்கள் நலமாக இருக்க முடியும். உடற்பயிற்சி ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் நிம்மதியான தூக்கம் அவசியம். தூங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன் உங்களின் செல்போன் மற்றும் தொலைக்காட்சி பார்ப்பதை தவிருங்கள். தூக்கத்திற்கு தேவையான மெலோனின் சுரப்பி செல்போன் மற்றும் தொலைக்காட்சியில் இருந்து வெளியாகும் வெளிச்சத்தினால் தடைபடும். இருட்டான சூழலில்தான் இது சுரக்கும். அந்த நேரத்தில் மனதுக்கு இதமான பாடல்களை கேட்கலாம். கார்டிசால் என்ற ஹார்மோன் அதிகமாக உற்பத்தியானால், தூக்கம் சரியாக இருக்காது. இது நீரிழிவுக்கு வழிவகுக்கும். நம்முடைய மூளைக்கும் ஆரோக்கியம் அவசியம். அது நன்றாக ஓய்வு எடுத்தால்தான் சுறுசுறுப்பாக இயங்க முடியும்.

பொதுவாக மாஸ்டர் செக்கப் 50 வயதிற்கு மேல் தான் செய்ய சொல்வார்கள். ஆனால் இன்றைய சூழலில் 25 வயதிற்கு மேல் இருபாலினர்களும் செய்து கொள்வது அவசியமாகிறது. குறிப்பாக பெண்கள் பேப்ஸ்மியர் ஆய்வு செய்ய வேண்டும். இதன் மூலம் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உள்ளதா என்று கண்டறியலாம். 40 வயதிற்கு மேல் உள்ள பெண்கள் மார்பக புற்றுநோய்க்கான மோமோகிராம் டெஸ்ட் செய்யலாம். குடும்பத்தில் யாருக்காவது இந்த புற்றுநோயின் தாக்கம் இருந்தால், அவர்கள் வருடத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக இதனை செய்து கொள்வது அவசியம். இல்லாத பட்சத்தில் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை செய்யலாம். கருமுட்டையை ஆய்வு செய்ய அல்ட்ரா சவுண்ட் அவசியம்.

50 வயதிற்கு மேல் உள்ள பெண்கள் போன் டென்சிட்டி ஆய்வு செய்வதன் மூலம் அவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்னை உள்ளதா என்று கண்டறியலாம். இந்த ஆய்வுகள் மூலம் முன்கூட்டியே பிரச்னைகளை கண்டறிந்து அதற்கான சிகிச்சை மேற்கொண்டால் ஆரம்ப நிலையிலேயே இதற்கான தீர்வினை காண முடியும். ஆனால் இவை செய்து கொள்ள பெண்கள் முன்வருவதில்லை. அதை உடைத்து அவர்களுக்கு இவை எல்லாம் அவசியம் என்ற விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும்.

இன்றைய காலக்கட்டத்தில் உடல் பருமன் என்பது ஒரு நோய் தான். அதை கட்டுப்பாட்டில் வைத்தாலே ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். இதனை முறையான உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம் கட்டுப்பாட்டில் வைக்க முடியும். யோகாவும் இதற்கு பெரிய அளவில் உதவி செய்யும்’’ என்ற டாக்டர் அகிலாவை தொடர்ந்தார் ஆய்வகத்தின் தலைவரான டாக்டர் பிரீத்தி. இவர் எந்த ஆய்வு எவ்வாறு செய்யப்படுகிறது என்பதைப் பற்றி விவரித்தார்.

‘‘ரத்தப் பரிசோதனைதான் பெரும்பாலான நோய்களுக்கு செய்யப்படும் முக்கிய ஆய்வுகள். ஒவ்வொரு சாம்பிள்களிலும் என்ன ஆய்வுகள் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கும். மேலும் அதனை சேகரிக்கப்படும் டியூப்கள் மற்றும் அதன் மேல் உள்ள வண்ண மூடிகளும் ஆய்வுக்கு ஏற்ப மாறுபடும். அதற்கு ஏற்ப அவைகள் ஆய்வு இயந்திரங்களுள் செலுத்தப்படும். இயந்திரங்கள் ஆட்டோமெட்டிக் என்பதால், நாம் எந்த ஒரு சாம்பில்களையும் கைகளால் கையாள வேண்டும் என்ற அவசியம் இல்லை.

இயந்திரமே முழு ஆய்வுகளை செய்து, அதற்கான ரிசல்டையும் கொடுத்திடும். குறைந்தபட்சம் 15,000 ஆய்வுகளை ஒரு மணி நேரத்தில் செய்ய முடியும். இதில் நீரிழிவு நோய், கருவில் இருக்கும் குழந்தைக்கு டவுன்சிண்ட்ரோம் மற்றும் குரோமோசோம்கள் எண்ணிக்கையை கணக்கிடலாம். மேலும் பிறந்த குழந்தைக்கு தாலசீமியா உள்ளதா என்றும் கண்டுபிடிக்கலாம். சில பெண்களுக்கு குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படும். அதற்கான காரணங்களும் ஆய்வு மூலம் கண்டறிய முடியும். ரத்தம் மட்டுமில்லாமல் சிறுநீர் குறித்த ஆய்வுகளும் முழுக்க முழுக்க ஆட்ேடாமெட்டிக் முறையில் செய்ய முடியும்.

சிலாரஜி, நம் உடலில் தோன்றும் தொற்றுகளான மலேரியா, டைபாய்ட், ஹெபடைட்டிசினால் ஏற்படும் நோய்களின் தன்மை குறித்த ஆய்வுகள். அதாவது, நம் உடலில் உள்ள ஆன்டிபாடிகளின் தன்மை எவ்வாறு உள்ளது என்பதை கணிப்பது. இதன் மூலம் பாக்டீரியா, ஃபங்கஸ், பாராசைட்ஸ் அல்லது வைரஸ் தொற்று இருக்கிறதா என்று பார்க்கலாம். டெங்கு, சிக்குன் குனியா, ஆட்டோ இம்யூன் கூட கண்டறியலாம்.

இதைத் தவிர ருபெல்லா உள்ளதா என்று கண்டறிந்து, அது கருவில் உள்ள குழந்தையை பாதிக்குமா என்று தெரிந்து கொள்ளலாம். சிலருக்கு குறிப்பிட்ட சில காரணங்களால் ஒவ்வாமை ஏற்படும். அதற்கான ஆய்வுகளும் தனிப்பட்ட முறையில் செய்ய முடியும். இவை எல்லாம் நாம் சிறப்பு காரணங்களுக்காக கண்டறியப்படும் ஆய்வுகள் என்பதால் தொற்று நோய்களை துல்லியமாக கண்டறியலாம். வைரசால் ஏற்படக்கூடிய கோவிட், ப்ளூ, எச்.ஐ.வி நோய்த் தொற்றுக்கான ஆய்வுகளும் உள்ளன. ஒரு ரத்த சாம்பிள்கள் கொடுத்தால் போதும், அதில் இருந்து பல வகையான ஆய்வுகளை நாம் முழுமையாக கண்டறிய முடியும்.

உறுப்பு தானம் செய்யும் போது, இம்யுனோ ஜெனிடிக்ஸ், டிரான்ஸ்பிளான்ட் டெக்னாலஜி ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். சிறுநீரகம், இதயம், கல்லீரல் போன்ற உறுப்புகளை உறுப்பு தானம் செய்யும் போது செய்யக்கூடிய ஆய்வு இம்யுனோ ஜெனிடிக்ஸ். நோயாளிகள் மற்றும் டோனர் இருவருக்கும் ஆன்டிபாடிஸ் எவ்வாறு உள்ளது என்பதை கண்டறிய டிரான்ஸ்பிளான்ட் டெக்னாலஜி செய்ய வேண்டும். ஒரு குறிப்பிட்ட ஜீன் எல்லோருடைய அணுக்களிலும் இருக்கும்.

அந்த ஜீன் உறுப்பு மாற்றம் செய்பவர் மற்றும் உறுப்பு தானம் கொடுப்பவர் இருவருக்கும் ஒன்று சேர வேண்டும். ஒருவரின் உறுப்பை ேநாயாளிக்குள் வைக்கும் போது அது ஏற்றுக் கொள்ளப்படுகிறதா என்று பார்க்கவேண்டும். அதற்கான ஆன்டிபாடியினை ஆய்வு செய்ய வேண்டும். டோனரோட அணுக்களில் நோயாளியின் சீரம் எடுத்து அதில் உள்ள ஆன்டிபாடிஸ் இணைந்து செயல்பட்டால்தான் உறுப்பு மாற்றம் செய்ய முடியும்.

ஹார்மோன்ஸ் சம்பந்தப்பட்ட ஆய்வுகள் குறிப்பாக பெண்களுக்கு செய்வது அவசியம். ஒவ்வொரு உறுப்புகளிலும் புற்றுநோய் உள்ளதா என்றும் கணிக்கலாம். புற்றுநோய் எந்த உறுப்பினை தாக்கியுள்ளது என்பதையும் கண்டறிய முடியும். அதன் பிறகு அந்தப் பகுதியினை ஸ்கேன் செய்து சிகிச்சை அளிக்கலாம். அடுத்து மெட்டர்னல் மார்க்கர். கரு உண்டான பத்து வாரத்தில் கருவின் வளர்ச்சியை கண்டறியலாம்.

அதாவது, குழந்தைக்கு டவுன்சிண்ட்ரோம், குரோமோசோம்களின் அளவு, ஸ்கேன் செய்து இதய பாதிப்பு என அனைத்தும் ஒரு ரத்த ஆய்வில் பிறக்கப் போகும் குழந்தைக்கு பாதிப்பு உள்ளதா என்று எளிதாக கண்டறியலாம். இது தவிர்த்து குழந்தை பிறந்த பிறகு உடனே சில குழந்தைகளின் செயல்பாட்டில் மாற்றம் தென்படும். அவர்கள் அழமாட்டார்கள். அதற்கு கால் பாதங்களில் ரத்தத் துளிகளை சேகரித்து, காயவைத்து, அதனை ஆய்வு செய்தால், அவங்களுக்கு தைராய்டு, என்சைம் மற்றும் லாக்டோஸ் குறைபாடு உள்ளதா என்று ஆரம்ப நிலையில் அறிந்து அதற்கான சிகிச்சையினை அளிக்கலாம்.

தொகுப்பு: ஷன்மதி

The post தூங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன் செல்போனை ‘OFF’செய்யுங்க! appeared first on Dinakaran.

Tags : kumkum ,Dinakaran ,
× RELATED சருமப் பாதுகாப்புக்கு வைட்டமின் தரும் பயன்கள்!