×

கண்ணமங்கலம் அருகே தம்டகோடி மலையில் தீ

*லட்சக்கணக்கான மரங்கள் எரிந்து சாம்பல்

கண்ணமங்கலம் : கண்ணமங்கலம் அடுத்த தம்டகோடி திருமலையில் நேற்று சமூக விரோதிகள் வைத்த தீயால் ஜல்சக்தி அபியான் திட்டத்தில் நடப்பட்ட லட்சக்கணக்கான மரங்கள் எரிந்து சாம்பலான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கண்ணமங்கலம் அடுத்த தம்டகோடி திருமலையில் மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்டத்தின கீழ் லட்சக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று மதியம் மலையடிவாரத்தில் மர்ம நபர்கள் வைத்த தீயால் மலை முழுவதும் தீ பரவி அந்த மரங்கள் எரிந்து நாசமாயின. இதை பார்த்த சமூக ஆர்வலர்கள் கண்ணமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதற்கு தீயணைப்பு வண்டி தேர்தல் வாக்கு பெட்டிகள் பாதுகாப்பிற்காக திருவண்ணாமலை சென்றிருப்பதாகவும் தீயணைப்பு வண்டி இல்லை எனவும் கூறப்பட்டது.பல்வேறு நீண்டகால போராட்டங்களுக்கு பிறகு கண்ணமங்கலத்தில் கடந்த வருடம்தான் தீயணைப்பு நிலையம் திறக்கப்பட்டது. ஆனால் அதுவும் இப்போது பயனில்லாமல் இருக்கிறது என சமூக ஆர்வலர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர். கோடை காலம் தொடங்கி விட்டாலே சமூக விரோதிகளால் மலைகளில் தீ வைப்பது என்பது தொடர்கதையாகி விட்டது.

எனவே கோடைகாலங்களில் சமூக விரோதிகளிடமிருந்து மலைகளை பாதுகாக்கவும், கண்ணமங்கலம் தீயணைப்பு நிலையம் செயல்படவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கண்ணமங்கலம் அருகே தம்டகோடி மலையில் தீ appeared first on Dinakaran.

Tags : Tamtakodi Hill ,Kannamangalam ,Tamtakodi Tirumala ,Jalshakti Abhiyan ,Tamtagodi Tirumala ,Tamtagodi Hill ,Dinakaran ,
× RELATED ஆரணி அருகே அத்தியூர் மலையில் கள்ளச்சாராயம் விற்றவர் கைது..!!