×

காஞ்சியில் சித்திரை உத்திர பெருவிழாவையொட்டி கச்சபேஸ்வரர் – சுந்தராம்பிகை திருக்கல்யாணம் கோலாகலம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

காஞ்சிபுரம், ஏப்.23: காஞ்சிபுரத்தில் கச்சபேஸ்வரர் கோயிலில் சித்திரை உத்திர பெருவிழாவை முன்னிட்டு கச்சபேஸ்வரர் சுவாமிக்கும், சுந்தராம்பிகை அம்மனுக்கும் திருக்கல்யாண வைபவம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் கோயில், ஆமை வடிவில் சிவனை பெருமாள் வழிபட்டது உள்பட பல்வேறு வரலாற்று சிறப்புகளை கொண்ட இக்கோயிலின் சித்திரை உத்திர பெருவிழா கடந்த 16ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

கடந்த சனிக்கிழமை அன்று மாலை சுந்தராம்பிகை பவளக்கால் சப்பரத்தில் பிள்ளையார்பாளையம் திருமேற்றளிநாதர் கோயிலுக்கு எழுந்தருளினார். அக்கோயிலில் உள்ள கன்னியம்மனுக்கும், உற்சவர் சுந்தராம்பிகைக்கும் சிறப்பு அபிஷேக, அலங்காரத்துடன் மாலை மாற்றல் வைபவம் நடைபெற்றது. இதையடுத்து, பிள்ளையார் பாளையத்திலிருந்து சுந்தராம்பிகை அம்மனை, கச்சபேசுவரர் கோயிலுக்கு கன்னியம்மன் கொண்டு வந்து விட்டுவிட்டு திரும்பிச்சென்றார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கோயில் வளாகத்தில் சுந்தராம்பிகைக்கும், கச்சபேஸ்வரருக்கும் ஆகம விதிகளின்படி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதையடுத்து, நேற்று காலை சுவாமியும், அம்மனும் ரிஷப வாகனத்தில் திருமண கோலத்துடன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

ஏழாம் நாளான மகாரதம் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில், சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் கச்சபேஸ்வரர், சுந்தராம்பிகை அம்மனும் தேரில், வீரியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதனையடுத்து, வரும் 25ம்தேதி வெள்ளி தேரோட்டமும், 27ம்தேதி பஞ்சமூர்த்திகள் உற்சவமும், மே மாதம் 3ம்தேதி புஷ்பப்பல்லக்கில் சுவாமி வீதியுலாவுடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை காஞ்சிபுரம் நகர செங்குந்த மகாஜன சங்கத்தின் தலைவர் எம்.சிவகுரு, கோயில் செயல் அலுவலர் எஸ்.நடராஜன், கோயில் திருப்பணி குழுவின் தலைவர் எஸ்.பெருமாள், செயலாளர் சுப்பராயன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

வரதராஜபெருமாள் திரு அவதார உற்சவம் சித்திரை மாத அஸ்த நட்சத்திரத்தில் காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் அவதரித்த தினமாகும். இதனையொட்டி, அத்திகிரி மலையில் அமைந்துள்ள வரதராஜபெருமாள் கோயிலில் மூலவர் கருவறையில் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நேற்று நடைபெற்றது. பின்னர், தேவி – பூதேவி சமேதராக உற்சவர் தேவராஜபெருமாள் மற்றும் கண்ணன், செல்வர், மணவாளன், பிராணதார்த்தி ஹரவரதர் உட்பட பஞ்சபேரர்களும் ஆபரணங்கள் அணிந்த சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

பின்னர், புண்ணியகோடி விமானத்தில் புறப்பாடாகி கோயிலின் அருகே வடக்கு மாடவீதியில் உள்ள மண்டபத்துக்கு எழுந்தருளினார். அப்போது, உற்சவர் வரதராஜ பெருமாளுக்கு, கோயிலின் தலைமை பட்டாச்சாரியார் தலைமையில் சிறப்பு திருமஞ்சனமும், அலங்கார தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. இதனையடுத்து, சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி – பூதேவியுடன் உற்சவர் வரதராஜபெருமாள் கோயிலின் மாடவீதிகளில் புறப்பாடாகி கோயிலுக்கு வந்து சேர்ந்தார். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் எஸ்.சீனிவாசன் தலைமையில், கோயில் மணியக்காரர் கிருஷ்ணன் மற்றும் பட்டாச்சாரியார்கள், கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

The post காஞ்சியில் சித்திரை உத்திர பெருவிழாவையொட்டி கச்சபேஸ்வரர் – சுந்தராம்பிகை திருக்கல்யாணம் கோலாகலம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Kachabeswarar – ,Sundarambikai Thirukalyanam Kolakalam ,Chitrai Uthra festival ,Kanchi ,Kanchipuram ,Thirukalyana Vaibhavam ,Kachabeswarar ,Swami ,Sundarambikai Amman ,Kachabeswarar temple ,Sami ,Sundarambigai ,Kachabeswarar - Sundarambigai Thirukalyanam Kolagalam ,Sami Darshanam ,
× RELATED காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில்...