×

மக்களவை தேர்தலில் சூரத் பா.ஜ வேட்பாளர் போட்டியின்றி தேர்வு: பகுஜன் சமாஜ் உள்பட 8 பேர் கடைசிநாளில் வாபஸ்

சூரத்: மக்களவை தேர்தலில் சூரத் பா.ஜ வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் மனு தள்ளுபடி செய்யப்பட்டதுடன், பகுஜன் சமாஜ் உள்பட 8 பேர் மனுவை வாபஸ் பெற்றதால் அங்கு பா.ஜ வேட்பாளர் எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 543 மக்களவை தொகுதிகளுக்கு ஏப்.19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்ட தேர்தல் நடக்கிறது. குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3ம் கட்டமாக மே 7ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடக்கிறது.

இங்கு சூரத் தொகுதியில் பா.ஜ வேட்பாளராக முகேஷ் தலால், காங்கிரஸ் வேட்பாளராக நிலேஷ் கும்பானி, மாற்று காங்கிரஸ் வேட்பாளராக சுரேஷ் பட்சாலா, பகுஜன் சமாஜ் வேட்பாளராக பியாரே லால் பாரதி மற்றும் சிறிய கட்சி வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்து இருந்தனர். 21ம் தேதி நடந்த வேட்பு மனு பரிசீலனையின் போது காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானி பெயரை முன்மொழிந்து வேட்பு மனுவில் கையெழுத்து போட்டவர்கள் வேட்புமனுவில் உள்ள கையொப்பம் தங்களுடையது இல்லை என தெரிவித்தனர். அதே போல் மாற்று வேட்பாளர் சுரேஷ் பட்சாலாவின் மனுவை முன்மொழிந்தவர்களும் அது தங்களின் கையெழுத்து இல்லை என கூறி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர்.

இது தொடர்பாக தேர்தல் அதிகாரி விசாரணை நடத்தி காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானி, மாற்று வேட்பாளர் சுரேஷ் பட்சாலா ஆகியோரிடம் விளக்கங்களை கேட்டார். இதை தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ். மாற்று வேட்பாளர் ஆகியோரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார். தேர்தல் அதிகாரியின் முடிவை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தை நாடப் போவதாக காங்கிரஸ் அறிவித்தது. இந்த சூழலில் நேற்று திடீர் திருப்பமாக பகுஜன் சமாஜ் வேட்பாளர் பியாரே லால் பாரதி, 4 சுயேச்சைகள், 3 சிறிய கட்சி வேட்பாளர்கள் கடைசி நாளில் தங்கள் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர்.

இதையடுத்து பா.ஜ வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றுவிட்டதாக தேர்தல் அதிகாரி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். முகேஷ் தலாலுக்கு அவர் வெற்றிச்சான்றிதழ் வழங்கினார். இதுகுறித்து தேர்தல் அதிகாரி சவுரப் பர்தி கூறுகையில், ‘சூரத் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜ வேட்பாளர் முகேஷ்குமார் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்’ என்று அறிவித்தார். இதை தொடர்ந்து குஜராத் மாநில பா.ஜ தலைவர் சிஆர் பாட்டீல் தனது எக்ஸ் தளத்தில்,’ பிரதமர் மோடிக்கு சூரத் தொகுதி முதல் தாமரையை பரிசாக அளித்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் 543 தொகுதியில் இனி 542 தொகுதிகளுக்குத்தான் தேர்தல் நடத்தப்படும்.

* சர்வாதிகாரியின் உண்மை முகம் மீண்டும் வெளிப்பட்டுள்ளது
சூரத் பா.ஜ. வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டது குறித்து ராகுல் காந்தி, ‘சர்வாதிகாரியின் உண்மையான முகம் மீண்டும் நாட்டின் முன் அப்பட்டமாக காட்டப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் தலைவரை தேர்ந்தெடுக்கும் உரிமையை பறிப்பது பாபாசாகேப் அம்பேத்கரின் அரசியலமைப்பை அழிக்கும் மற்றொரு படியாகும். நான் மீண்டும் சொல்கிறேன். இது ஆட்சி அமைப்பதற்கான தேர்தல் மட்டுமல்ல, நாட்டைக் காப்பாற்றும் தேர்தல் ’ என்று பதிவிட்டுள்ளார்.

* ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்
சூரத் தொகுதி பா.ஜ வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டது ஜனநாயகத்திற்கு கடும் அச்சுறுத்தல் என்று காங்கிரஸ் விமர்சனம் செய்து உள்ளது. இதுபற்றி காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
அதன் காலவரிசை பின்வருமாறு:
1. சூரத் மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்புமனுவை சூரத் மாவட்ட தேர்தல் அதிகாரி நிராகரிக்கிறார். நிலேஷ் கும்பானியின் வேட்புமனுவில் உள்ள மூன்று முன்மொழிபவர்களின் கையொப்பங்களை சரிபார்ப்பதில் உள்ள முரண்பாடுகளை அவர் காரணமாக கூறினார்.
2. இதே அடிப்படையில், சூரத்தில் காங்கிரஸ் கட்சியின் மாற்று வேட்பாளரான சுரேஷ் பத்சலாவின் வேட்புமனுவையும் தேர்தல் அதிகாரிகள் நிராகரிக்கின்றனர். இதனால் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இல்லாமல் அங்கு தவித்து வருகிறது.
3. திடீரென பா.ஜ வேட்பாளர் முகேஷ் தலால் தவிர மற்ற அனைத்து வேட்பாளர்களும் தங்கள் வேட்புமனுவை வாபஸ் பெறுகின்றனர்.
4. ஏப்.22ம் தேதி அன்று பா.ஜ வேட்பாளர் முகேஷ் தலால் சூரத் மக்களவைத் தொகுதியில் இருந்து போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். மே 7 அன்று, அதாவது வாக்குப்பதிவுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு இவை எல்லாம் நடக்கிறது.

* மோடியின் ஆட்சியில் சிறுகுறு தொழில் நிறுவன உரிமையாளர்கள், வணிகர்கள் எதிர்கொள்ளும் துயரமும், கோபமும் 1984 மக்களவை தேர்தலில் இருந்து பா.ஜ தொடர்ந்து வெற்றி பெற்று வரும் சூரத் தொகுதியை ‘மேட்ச் பிக்ஸ்’ செய்ய முயற்சிக்கும் அளவிற்கு பா.ஜவை மிகவும் மோசமாகப் பயமுறுத்தியுள்ளது. நமது தேர்தல்கள், நமது ஜனநாயகம், பாபாசாகேப் அம்பேத்கரின் அரசியலமைப்பு அனைத்தும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன. ஏனெனில் இது நம் வாழ்நாளில் மிக முக்கியமான தேர்தல். இவ்வாறு அவர் குறிப்பிட்டு உள்ளார்.

The post மக்களவை தேர்தலில் சூரத் பா.ஜ வேட்பாளர் போட்டியின்றி தேர்வு: பகுஜன் சமாஜ் உள்பட 8 பேர் கடைசிநாளில் வாபஸ் appeared first on Dinakaran.

Tags : Surat BJP ,Lok Sabha elections ,Bahujan Samaj ,Surat ,Election Commission ,Mukesh Dalal ,Lok Sabha ,Congress ,BJP ,
× RELATED மக்களவை தேர்தல்: திரிபுராவில் 54.47% வாக்குப்பதிவு