×

கேரளாவில் ராகுல் போட்டியிடும் வயநாடு உள்பட 20 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் பிரசாரம் ஓய்கிறது: இறுதிக்கட்ட பிரசாரத்தில் வேட்பாளர்கள் தீவிரம் வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு

திருவனந்தபுரம்: கேரளாவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ளன. நாளை மறுநாளுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இதனால் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிர இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் 20 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 26ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மார்ச் 28ம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 4ம் தேதியுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது. மொத்தம் 290 பேர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் 86 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

வேட்பு மனுக்களை வாபஸ் பெற வேண்டிய கடைசி நாளன்று 10 பேர் தங்களது மனுக்களை வாபஸ் பெற்றனர். இதனால் 20 தொகுதிகளில் 194 பேர் போட்டியிடுகின்றனர். கோட்டயம் தொகுதியில் அதிகமாக 14 பேரும், ஆலத்தூரில் குறைவாக 5 பேரும் போட்டியிடுகின்றனர். மொத்தமுள்ள 194 பேரில் 25 பேர் பெண் வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளிலும், முஸ்லிம் லீக் 2 தொகுதிகளிலும், புரட்சி சோசலிஸ்ட் ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது. அதேபோல் இடதுசாரி கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 15 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4 தொகுதிகளிலும், கேரளா காங்கிரஸ் (எம்) ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜ 16 தொகுதிகளிலும், கூட்டணி கட்சியான பிடிஜேஎஸ் 4 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 19 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. இடதுசாரி கூட்டணிக்கு ஆலப்புழா தொகுதி மட்டுமே கிடைத்தது. கேரளாவில் கடந்த தேர்தலில் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டது தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது.

கேரளாவில் ஒரு தேசிய தலைவர் நாடாளுமன்ற தேர்தல் போட்டியிடுவது மிகவும் அபூர்வமாகும். வயநாட்டில் ராகுல் காந்தி 4.37 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். இந்த தேர்தலிலும் வயநாட்டில் அவர் போட்டியிடுவது காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த முறை கைநழுவிப் போன ஒரு தொகுதியையும் சேர்த்து இம்முறை 20 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று காங்கிரஸ் கூட்டணியினர் கூறுகின்றனர். ஆனால் இந்த முறை அவ்வளவு எளிதில் வெற்றி கிடைக்காது என்று இடதுசாரி கூட்டணியினர் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

இதனால்தான் இந்த முறை அமைச்சர், எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், பொலிட் பீரோ உறுப்பினர்கள் உட்பட மக்களிடையே செல்வாக்கு பெற்ற முக்கிய தலைவர்களை இடதுசாரி கூட்டணி களம் இறக்கியுள்ளது. இதனால் பெரும்பாலான தொகுதிகளில் கடும் போட்டி நிலவுகிறது. தற்போதைய அமைச்சர் ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர்கள் ஷைலஜா, சுனில் குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், பொலிட் பீரோ உறுப்பினருமான எளமரம் கரீம், கொல்லம் தொகுதி எம்எல்ஏவும், நடிகருமான முகேஷ் உள்பட இடதுசாரி கூட்டணியில் முக்கிய தலைவர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு, சசி தரூர் மற்றும் ஒன்றிய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோர் போட்டியிடும் திருவனந்தபுரம், நடிகரும், முன்னாள் ராஜ்யசபா எம்பியுமான சுரேஷ் கோபி போட்டியிடும் திருச்சூர் ஆகிய தொகுதிகள் தான் நட்சத்திரத் தொகுதிகளாக கருதப்படுகிறது. இந்த தொகுதிகளின் முடிவு அனைவராலும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

பிரசாரம் நாளை மறுநாளுடன் முடிவதால் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர ஓட்டு வேட்டையில் இறங்கி உள்ளனர். 26ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராகி விட்டதாக கேரள தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சய் கவுல் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,77,49,159 ஆகும். இதில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் தான் அதிகமாகும். 1,43,33,499 பெண் வாக்காளர்களும், 1,34,15,293 ஆண் வாக்காளர்களும் உள்ளனர். ஆண், பெண் வாக்காளர்கள் சதவீதம் 1000:1068 ஆகும். திருநங்கைகள் எண்ணிக்கை 367 ஆகும். கடந்த ஜனவரி 22ஆம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர்கள் பட்டியலை விட தற்போது 6,49,833 பேர் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். 18 முதல் 19 வயதுக்குட்பட்ட இளம் வாக்காளர்கள் எண்ணிக்கை 5,34,394 ஆகும். இவர்கள் அனைவரும் முதன் முதலாக வாக்களிக்க உள்ளனர்.

மலப்புரம் மாவட்டத்தில் அதிகமாக 33,93,884 வாக்காளர்களும், வயநாடு மாவட்டத்தில் குறைவாக 6,35,930 வாக்காளர்களும் உள்ளனர். 80 வயதுக்கு மேல் ஆன வாக்காளர்கள் எண்ணிக்கை 6,27,045 ஆகும். வெளிநாடுகளில் 89,839 வாக்காளர்கள் வசிக்கின்றனர்.

The post கேரளாவில் ராகுல் போட்டியிடும் வயநாடு உள்பட 20 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் பிரசாரம் ஓய்கிறது: இறுதிக்கட்ட பிரசாரத்தில் வேட்பாளர்கள் தீவிரம் வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Wayanad ,Rahul ,Kerala ,Thiruvananthapuram ,Dinakaran ,
× RELATED வயநாட்டில் மாவோயிஸ்ட்- போலீசார் துப்பாக்கி சண்டை