×

கல்லிலும் செம்பிலும் கழுமலத்தார் பதிகங்கள்

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், நம்பியாரூரர் எனப்பெறும் மூவர் முதலிகளும் தலங்கள் தோறும் பாடிய பாடல்கள் ஏட்டுச்சுவடிகள் வாயிலாகக் கிடைக்கப்பெற்று அவற்றை ஏழு திருமுறைகளாகத் தொகுத்துள்ளனர். மூவர்தம் பாடல்களை ஆழ்ந்துநோக்கும்போது அவர்கள் பெற்ற அநுபூதி அப்படியே அவர்கள்தம் பாடல்களில் பதிவு பெற்றுள்ளமையைக் காணலாம். எனவே, அவர்கள் பண்ணோடு பாடும்போது உடனிருந்த அடியார்களில் சிலரே அவற்றை ஏட்டில் எழுதியுள்ளனர். இதனைச் சேக் கிழார் பெருமானின் வாக்கால் அறியலாம். அடியார்களால் எழுதப்பெற்ற திருப்பதிகச் சுவடிக்கட்டுக்களை அவர்களோடு சென்ற அவ்வடியார்களே உடன் எடுத்துச் சென்றனர் என்பதும் திருத்தொண்டர் புராணம் பகரும் செய்தியாகும்.

மதுரையில் அமணரோடு நிகழ்ந்த அனல்வாதத்தின்போது ஆளுடைய பிள்ளையார் தாம் கையோடு எடுத்துச்சென்ற பதிகங்கள் எழுதப்பெற்ற திருமுறையாம் ஏட்டுச்சுவடியினை எடுத்து, தம் கையாலேயே கட்டவிழ்த்து கயிறு சார்த்தி நள்ளாற்றுப் பதிகப்பாடல் அடங்கிய ஏட்டினை எடுத்து தீயில் இட்டார் என்பதும் சேக்கிழார் பெருமானார் திருவாக்கேயாகும். பின்பு புனல்வாதின்போது தாமே பாடி எழுதிய திருப்பதிக ஏட்டினை ஆற்றிலிட்டார் என்பதும் பெரியபுராணம் பகரும் செய்தியாகும்.

சீகாழி திருக்கோயிலில் உள்ள ஆளுடைய பிள்ளையார் கோயிலில் காணப்பெறும் அனபாயன் எனும் இரண்டாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டுச் சாசனங்களில் ஒன்றில் ஆளுடைய பிள்ளையார் கோயிலின் முன்பு நிறுவப்பெற்ற திருவுருவங்கள் சிதைவு பெற்றமையால் புதிய உருவங்கள் எடுப்பதற்கும், மேலும் அத்திருக்கோயிலில் ஏட்டில் எழுதி வைக்கப்பெற்றிருந்த திருமுறைச் சுவடிகளைப் பூசித்துக் கண்காணிக்கத் ‘தமிழ் விரகர்’ ஒருவர் நியமிக்கப்பெற்றதாகவும், அவர் திருமுறை ஏடுகளைப் பழுதடையாமல் பாதுகாத்துக் கொள்ளவும், பழுதடையின் அவற்றை எழுதிப் புதுப்பிக்கவும், அவற்றைப் பூசிப்பதுமாகிய கடமைகளைச் செய்ய நிலம் அளிக்கப்பெற்றமை குறிக்கப்பெற்றுள்ளது. எனவே, திருக்கோயில்களில் திருமுறை ஏடுகளைக் காப்பதும், பூசிப்பதும், புதுப்பிப்பதுமாகிய பணிகளை மேற்கொண்டொழுகினர் என்பதறிகிறோம்.

திருமுறைச் சுவடிகளைப் பாதுகாப்புடன் மரபுவழி காத்துவந்தபோதும் ஒருசில திருக்கோயில்களில் பாடப்பெற்ற சில பதிகங்களோ அல்லது அப்பதிகங்களின் சில பாடல்களோ காலவெள்ளத்தில் மறைந்தன. சேக்கிழார் காலத்திற்கு முன்பே அவ்வாறு சில பதிகங்கள் கிடைக்காமற்போயின.திருத்தவத்துறை எனப்பெறும் இலால்குடி சிவாலயத்தில் திருஞானசம்பந்தர் திருப்பதிகம் பாடினார் எனச் சேக்கிழார் பெருமான் குறிப்பிட்டிருந்தும் பின்னாளில் அப்பதிகம் நமக்குக் கிடைக்கவில்லை. சேக்கிழார் பெருமான் காலத்துக்கு முன்பே மறைந்தவை திருவிடைவாயில் மற்றும் திருக்கினியன்னவூர் தலத்துத் திருஞானசம்பந்தரின் பதிகங்களாகும். அவை கிடைக்காததால்தான் சேக்கிழார் அவை பற்றிக் குறிப்பிடவில்லை.

பனை ஓலையில் எழுதப்பெறும் சாசனங்களோ அல்லது பிற வகையான எழுத்துப் படைப்புகளோ செல்லரித்து, மடிந்து அழிந்துவிடும் என்பதால், பண்டு சோழப் பெருவேந்தர்கள் முக்கிய ஆவணங்களைப் ‘படியாகக் கல்லிலும் செம்பிலும் வெட்டுக’ எனத் திருவாய்மொழிந்து ஆணையிட்டதைக் குறிப்பிடும் பல சான்றுகள் உள்ளன.முதற் குலோத்துங்கனின் படைத்தலைவனாய் விளங்கிய அரும்பாக்கிழான் மணவிற்கூத்தன் காளிங்கராயன் என்பான் தொண்டை மண்டலத்து மணவில் என்ற ஊரினன். பொன்னம்பலக்கூத்தன் நலலோகவீரன் என்ற சிறப்புப் பெயர்களைப் பெற்றவன். இவன் தில்லைப் பெருங்கோயிலுக்கு ஆற்றிய பணிகளை முப்பத்தேழு பாடல்களில் கூறி அவற்றை அக்கோயிலில் கல்வெட்டாகப் பதிவு செய்துள்ளான்.

அப்பதிவில் 31ஆம் பாடலில்
முத்திறத்தாரீசன் முதற்றிறத்தைப் பாடியவா
றொத்தமைத்த செப்பேட்டி னுள் எழுதி –
இத்தலத்தி
எனல்லைக் கிரிவா யிசையெழுதினான்
கூத்தன்
தில்லைச் சிற்றம் பலத்தே சென்று

என்று கூறி மணவிற்கூத்தன் மூவர் தேவாரப் பாடல்களான முதலேழு திருமுறைகளையும் செப்பேடுகளில் எழுதி வைத்ததோடு, அத்தலத்தின் பதிகங்களுக்குரிய இசையமைதியையும் பதிவு செய்தான் என்ற அரிய தகவலைப் பதிவு செய்துள்ளது.கி.பி. 1190 – 1218 வரை தென்பாண்டி நாட்டில் அரசோச்சியவன் சடையவர்மன் குலசேகர பாண்டியனாவான். ‘பூவின் கிழத்தி’ என்ற மெய்க்கீர்த்தியோடு இப்பாண்டியனின் கல்லெழுத்துச் சாசனங்கள் காணப்பெறுகின்றன. திருச்செந்தூருக்கு அருகே திகழும் ஆற்றூரில் உள்ள இம்மன்னவனின் கல்வெட்டு கி.பி. 1206ஆம் ஆண்டு எழுதப்பெற்றதாகும். அக்கல்வெட்டுச் சாசனத்தில் ஏழாம் வரி பின்வருமாறு உள்ளது.

‘‘ஸ்ரீ கோச்சடைபன்மரான திரிபுவனச் சக்ரவர்த்திகள் குலசேகர தேவர்க்கு யாண்டு 13வதின் எதிர் மூவாமாண்டு குடநாட்டு பிரமதேயம் ஆற்றூர் சேந்தமங்கலமான அவணிப சேகர மங்கலத்து மகா சபையோமும் இவ்வூர் காரண்மை குடிகளோம் உடையார் ஸ்ரீ சோமநாத தேவர்க்கு திருமடைவிளாகமாக பிள்ளை பஞ்சவன் பிரமாதிராஜன் பிள்ளையார் திருமுறை செப்பேடு கண்ட பெருமாள் திருநாமத்தால் திருவிழா வீதி ஆக்கித்தர வேண்டுமென்று அருளிச் செய்தபடி…’’ (ARE 431 of 1930)இக்கல்வெட்டுச் சாசனத்தை வைத்து நோக்கும்போது சடையவர்மன் குலசேகர பாண்டியனின் பதினாறாம் ஆட்சியாண்டில் பிள்ளை பஞ்சவன் பிரமாதிராஜன் எனும் அந்தண அலுவலர் ஒருவர் திருஞானசம்பந்தரின் (பிள்ளையார்) திருப்பதிகங்கள் அடங்கிய முதல் மூன்று திருமுறைகளையும் செப்பேட்டில் எழுதி ஆற்றூர் திருக்கோயிலில் காத்தவர் என்பது அறிய முடிகிறது. பஞ்சவன் பிரமாதிராஜன் பெற்ற சிறப்புப் பெயரான ‘‘பிள்ளையார் திருமுறை செப்பேடு கண்ட பெருமாள்’’ என்ற பெயரில் ஆற்றூரில் திருவிழா எடுக்கும் திருவீதி அமைப்பதற்காக ஊர்சபைதோறும், வேளாண்மை செய்யும் வேளாளர்களும் நிலம் அளித்தனர் என்பது இச்சாசனச் செய்தியாகும்.

திருக்களர் மு. சுவாமிநாத மாதவராயர் என்பார் திருவிடைவாய் சிவாலயத்தில் திருஞானசம்பந்தரின் தேவாரப் பதிகமொன்று கல்வெட்டு வடிவில் இருப்பதை 1911ஆம் ஆண்டில் கண்டு உலகுக்கு வெளிப்படுத்தினார். பின்பு 1918ஆம் ஆண்டில் இந்தியத் தொல்லியல் துறையினர் அச்சாசனத்தைப் படி எடுத்து 1918ஆம் ஆண்டுக்குரிய 8ஆம் எண் சாசனமாகப் பதிவு செய்தனர். அது கி.பி. 12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர்கால சாசனம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அப்பதிகத்தினை 1968ஆம் ஆண்டில் காசி மடம் தேவாரம் தலமுறை (அடங்கன் முறை) எனும் நூலிலும், பாண்டிச்சேரி பிரெஞ்சுக் கழகம் தி.வை. கோபாலய்யரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு வெளியிட்ட தேவாரம் எனும் நூலிலும் வெளியிட்டுள்ளன.அண்மையில் கழுமலம் எனும் சீகாழி கோயில் வளாகத்தில் தேவாரம் எழுதப்பெற்ற 400க்கும் மேற்பட்ட செப்பேடுகள் புதையுண்டு வெளிப்பட்டன. இது சைவ சமயம் செய்த பாக்கியம்.

முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

The post கல்லிலும் செம்பிலும் கழுமலத்தார் பதிகங்கள் appeared first on Dinakaran.

Tags : Thirunnasambandar ,Thirunavukarasar ,Nambiarurar ,Moovardham ,Anubhuti ,
× RELATED சரணம்… சரணம்… சரணம் காணும் சரணாலய புகலூர்