×

ஜனநாயக கடமையாற்றிட ஆர்வமுடன் வந்து வாக்களித்த முதியோர்-முதல் தலைமுறையினர்

ஈரோடு : ஈரோடு நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயக கடமையாற்றிட வாக்குச்சாவடிக்கு முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், முதல் தலைமுறையினர் ஆர்வமுடன் வந்து வாக்களித்து சென்றனர்.ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு, காலை 8 மணி வரை கூட்டமின்றி காணப்பட்டது. காலை 9 மணிக்கு பிறகு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. இதில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மூதாட்டிகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், முதல் முறை வாக்களிக்கும் இளம் தலைமுறையினர் உட்பட அனைத்து தரப்பு வாக்காளர்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து சென்றனர்.

இதில், மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து வாக்குச்சாவடி மையத்திலும் நகரும் சக்கர நாற்காலியும், வாக்குச்சாவடி மையத்திற்குள் செல்ல சாய்வு தள வசதியும் ஏற்படுத்தப்பட்டிருந்தது. மேலும், மாற்றுத்திறனாளிகளை வாக்குச்சாவடிக்குள் அழைத்து செல்ல பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களே மாற்றுத்திறனாளிகளை வாக்குச்சாவடி வரை அழைத்து சென்று, வாக்களித்த பின், அவர்களை வெளியே அழைத்து வந்தனர். அதேபோல், வயதான, நடக்க முடியாத முதியவர்கள், மூதாட்டிகளுக்கும் நகரும் சக்கர நற்காலியில் அமர வைத்து வாக்குச்சாவடிக்குள் அழைத்து செல்லப்பட்டனர்.

சிறப்பு வாகன வசதி: ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகள் 3,001 பேர் தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்ததன்பேரில், 12டி படிவம் வழங்கப்பட்டது. இவர்களிடம் அதிகாரிகள் குழுவினர் நேரடியாக சென்று விதிமுறைகளின் படி வாக்கினை பெற்றனர். இதன்மூலம் மாவட்டத்தில் 2,866 பேர் தபால் மூலம் தங்களது ஓட்டுகளை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று துவங்கிய வாக்குப்பதிவில், 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்பேரில், மாவட்ட நிர்வாகம் சிறப்பு வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்காக கட்டணமில்லா தொலைபேசி எண்கள், சக்‌ஷம் இசிஐ செயலி மூலம் பதிவு செய்த முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களை அவர்களது வீட்டிற்கே சென்று அவர்களது வாக்குச்சாவடிக்கு அழைத்து வந்து, அவர்கள் ஜனநாயக கடமையை பதிவு செய்த உடன், மீண்டும் அதே வாகனத்தில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை பத்திரமாக அழைத்து சென்றனர்.

The post ஜனநாயக கடமையாற்றிட ஆர்வமுடன் வந்து வாக்களித்த முதியோர்-முதல் தலைமுறையினர் appeared first on Dinakaran.

Tags : democrats ,Erode ,Erode Parliamentary Constituency ,Dinakaran ,
× RELATED ஈரோட்டில் வாக்கு இயந்திரங்கள்...