×

ஆர்.கே.நகர் தொகுதியில் ஒரு சில இடங்களில் ஓட்டு இயந்திரம் பழுது காரணமாக வாக்குப்பதிவு 1 மணிநேரம் தாமதம்: எம்பி, எம்எல்ஏக்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்

தண்டையார்பேட்டை, ஏப்.20: வடசென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணியளவில் தொடங்கியது. ஏராளமான பொதுமக்கள், இளம் வாக்காளர்கள் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்போது ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை கருவாலி நகரில் உள்ள வாக்குச்சாவடி (எண்:8) மையத்தில் ஓட்டுபோடும் இயந்திரம் திடீரென பழுதானது. உடனடியாக, தேர்தல் பிரிவு அதிகாரிகள் பழுதடைந்த ஓட்டுபோடும் இயந்திரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக வாக்குப்பதிவு தாமதமானது.

அதேபோல், கொருக்குப்பேட்டை இளைய முதலி தெருவில் உள்ள கேசிஎஸ் கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி (எண்:180) மையத்தில் ஓட்டு இயந்திரம் பழுது காரணமாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. பின்னர், பழுதான இயந்திரம் உடனடியாக சீரமைக்கப்பட்டு வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது. அதே தொகுதிக்கு உட்பட்ட 50வது வாக்குச்சாவடியில் காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், 7.30 மணியளவில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. அப்போது, 16 வாக்குகள் பதிவான நிலையில், மாற்று இயந்திரம் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது.

துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட மண்ணடி, சவுகார்பேட்டை, கொத்தவால்சாவடி, யானைகவுனி உள்ளிட்ட பகுதிகளிளும் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு ஏற்பட்டு பின்னர், சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் தங்களது வாக்குகளை அளித்தனர். வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, அண்ணாநகர் ரவுண்டானா பகுதியில் உள்ள கந்தசாமி கலை கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில் தனது குடும்பத்துடன் சென்று வாக்குப்பதிவு செய்தார். வடசென்னை அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ வண்ணாரப்பேட்டை சஞ்சீவிராயன் கோயில் தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெரம்பூரில் உள்ள நூர்தி பெண்கள் பள்ளியில் குடும்பத்துடன் சென்று தனது வாக்கை செலுத்தினார். ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி வண்ணாரப்பேட்டை பிஏகே பள்ளியில் மனைவியுடன் சென்று தனது வாக்கை செலுத்தினார். ஆர்கே நகர் சட்டமன்ற உறுப்பினர் எபினேசர் காசிமேடு விநாயகபுரத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியில் தனது வாக்கை செலுத்தினார்.

250 பேரின் பெயர்கள் பட்டியலில் இல்லாததால் அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை
ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள நாம்மையா மேஸ்திரி தெரு, ஆரணி ரங்கன் தெரு, டிஎச் ரோடு 3வது சந்து, திருவள்ளுவர் குடியிருப்பு, அஜிஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 250 பேர் நேற்று வாக்களிக்க வந்தனர். அப்போது, அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை என வாக்குப்பதிவு மையத்தில் இருந்த தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்திற்கு சென்று செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணனை முற்றுகையிட்டு கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், வாக்காளர் பெயர் சேர்ப்பு நடந்தபோது கவனக்குறைவாக இருந்துவிட்டு, இப்போது வந்து முறையிட்டால் எந்த பயனும் இல்லை, என்று கூறினார். இதையடுத்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

The post ஆர்.கே.நகர் தொகுதியில் ஒரு சில இடங்களில் ஓட்டு இயந்திரம் பழுது காரணமாக வாக்குப்பதிவு 1 மணிநேரம் தாமதம்: எம்பி, எம்எல்ஏக்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர் appeared first on Dinakaran.

Tags : RK Nagar ,Thandaiyarpet ,North Chennai parliamentary ,RK Nagar Constituency ,Karuvali Nagar ,RK ,Nagar ,Constituency ,Dinakaran ,
× RELATED வாக்கு பெட்டி தவறி விழுந்ததில் காவலரின் கை எலும்பு முறிந்தது