×

வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் பட்டியலில் பெயர் இல்லாததால் பலரும் வாக்களிக்க முடியாத நிலை: பொதுமக்கள் முதல் நடிகர் வரை ஏமாற்றம்

சென்னை: வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் பல இடங்களில் மக்கள் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் முதல் நடிகர் வரை வாக்களிக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர். தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிக்கான தேர்தல் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக நடந்தது. சென்னை உள்பட பல்வேறு இடங்களில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆர்வமுடன் வாக்களிக்க சென்றவர்களுக்கு அதிர்ச்சியும் காத்திருந்தது.

அதாவது, கையில் வாக்காளர் அட்டை இருந்தது. ஆனால், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத நிலை. ஒரே வீட்டில் கணவருக்கு ஓட்டு உள்ளது. மனைவிக்கு ஓட்டு இல்லாத நிலை பல வாக்குச்சாவடிகளில் காணப்பட்டது. இதனால், வாக்களிக்க வந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சில வாக்காளர்கள் பெயர் இல்லாததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். மேலும் கணவருக்கு ஒரு வாக்குச்சாவடியிலும், மனைவிக்கு ஒரு வாக்குச்சாவடியிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்ததால், ஜோடியாக வந்தவர்கள் பிரிந்து சென்று வாக்களித்தனர்.

மேலும் பல லட்சம் ரூபாய் செலவு செய்து வாக்களிப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து வந்த பலரின் வாக்குரிமை மறுக்கப்பட்டது. சென்னை சைதாப்பேட்டையில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத காரணத்தால் சுமார் 500 பேர் வாக்களிக்க முடியாமல் போராட்டம் நடத்தினர். அவர்கள் அனைவரும் அரசு ஊழியர்கள் என்று கூறப்படுகிறது. இதேபோல, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வாக்காளர் அட்டை இருந்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் ஜனநாயக கடமையை ஆற்ற முடியவில்லையே என்று பலரும் வருந்தினர். பல முறை தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா? என்று செக் பண்ணி கொள்ளுங்கள் என்று கூறியிருந்தது. அப்போதே பார்த்து இருந்தால் விடுபட்டிருப்பதை கண்டுபிடித்து சேர்த்து இருக்கலாம் என்பது தேர்தல் அதிகாரிகளின் கருத்து.

* ரூ.1.5 லட்சம் செலவு செய்து வந்த வாக்காளர் பெயர் பட்டியலில் மாயம்
தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி நடந்தது. சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு உள்ளிட்ட சிறிய பிரச்னைகள் இருந்தாலும், பெரும்பாலும் வாக்குப்பதிவு தடைபடாமல் நடந்தது. இந்நிலையில் சர்கார் படத்தில் நடிகர் விஜய் வாக்கு செலுத்துவதற்கு பல லட்சம் செலவு செய்து அமெரிக்காவிலிருந்து தமிழகத்திற்கு வருவதை போல சென்னை சூளைமேட்டில் சம்பவம் ஒன்று அரங்கேறியது. சென்னை சூளைமேட்டை சேர்ந்த பால்ராஜ் (67) என்பவர், பணி நிமித்தமாக லண்டனில் உள்ளார்.

அவர் தனது வாக்கை பதிவு செய்வதற்காக லண்டனிலிருந்து ரூ.1.5 லட்சம் செலவு செய்து சென்னை வந்துள்ளார். ஆனால் அவரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால் முறையான பதில் தெரிவிக்காமல் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து லண்டனிலிருந்து வந்த பால்ராஜ் கூறுகையில், ‘‘எனது ஜனநாயக கடமையை செலுத்துவதற்காக லண்டனிலிருந்து ரூ.1.5 லட்சம் செலவு செய்து சென்னை வந்தேன். ஆனால் வாக்காளர் பட்டியலில் எனது பெயர் இல்லை. தேர்தல் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களிடம் கேட்டால் முறையாக பதில் அளிக்காமல் அலைக்கழித்தனர்’’ என்று வேதனை தெரிவித்தார்.

தமிழகத்தில் தொகுதி வாரியாக வாக்குப்பதிவு விவரம்
தொகுதி 9 மணி
நிலவரம் 11 மணி
நிலவரம் 1 மணி
நிலவரம் 3 மணி
நிலவரம் 5 மணி
நிலவரம் இறுதி
நிலவரம் கடந்த
ஆண்டு
(2019)
கள்ளக்குறிச்சி 15.10 26.58 44.00 57.34 67.23 75.67 76.36
தர்மபுரி 15.04 25.66 44.08 57.86 67.52 75.44 75.92
நாமக்கல் 14.36 26.07 43.66 57.67 67.37 74.29 71.75
ஆரணி 12.69 25.53 43.62 56.73 67.34 73.77 76.44
கரூர் 14.41 26.07 43.60 56.65 66.91 74.05 78.96
சிதம்பரம் 12.90 25.35 42.09 55.23 66.64 74.87 78.43
பெரம்பலூர் 14.35 25.62 43.32 56.34 66.56 74.46 76.55
திருவண்ணாமலை 12.80 24.92 41.46 53.72 65.91 73.35 71.27
சேலம் 14.79 25.97 43.13 55.53 65.86 73.55 74.94
அரக்கோணம் 12.64 24.71 41.92 53.83 65.61 73.92 75.45
வேலூர் 12.76 24.67 41.24 53.17 65.12 73.04 71.32
விழுப்புரம் 13.97 25.69 42.49 54.43 64.83 73.49 74.96
கிருஷ்ணகிரி 12.57 24.82 41.55 53.37 64.65 72.96 73.89
ஈரோடு 13.37 25.37 42.23 54.13 64.50 71.42 71.15
திண்டுக்கல் 13.16 26.34 41.97 53.43 64.34 71.37 71.13
நாகப்பட்டினம் 12.98 24.92 41.43 52.72 64.21 72.21 77.28
கடலூர் 12.22 24.66 40.32 52.13 64.10 72.40 74.42
நீலகிரி 12.18 24.00 40.14 52.49 63.88 71.07 70.79
விருதுநகர் 13.05 25.39 42.34 53.45 63.85 72.29 70.27
மயிலாடுதுறை 12.08 24.76 40.77 52.00 63.77 71.45 73.13
பொள்ளாச்சி 13.36 25.02 41.34 53.14 63.53 72.22 69.98
தேனி 13.15 24.99 41.24 52.52 63.41 71.74 75.28
தென்காசி 11.82 24.51 40.15 51.45 63.10 71.06 71.60
தூத்துக்குடி 11.62 24.16 39.06 50.41 63.03 70.93 69.41
ராமநாதபுரம் 11.79 23.89 39.60 51.16 63.02 71.05 68.26
தஞ்சாவூர் 12.91 24.96 40.81 52.02 63.00 69.82 70.68
கன்னியாகுமரி 11.92 24.68 40.24 51.12 62.82 70.15 62.32
சிவகங்கை 12.06 24.47 40.15 51.79 62.50 71.05 71.55
திருச்சி 11.82 24.70 39.91 50.71 62.30 71.20 71.89
காஞ்சிபுரம் 12.25 24.65 39.41 49.94 61.74 72.99 71.94
திருவள்ளூர் 12.31% 24.93 40.12 49.82 61.59 71.87 72.02
கோவை 12.16 24.54 39.51 50.33 61.45 71.17 63.67
திருப்பூர் 13.13 25.47 40.96 51.07 61.43 72.02 64.56
திருநெல்வேலி 11.39 23.78 38.27 48.58 61.29 70.46 68.09
மதுரை 11.00 22.73 37.11 47.38 60.00 68.98 62.01
ஸ்ரீ பெரும்புதூர் 11.18 23.53 37.40 45.96 59.82 69.79 60.61
வடசென்னை 9.73 22.05 35.09 44.84 59.16 69.26 61.76
மத்திய சென்னை 8.59 24.37 32.31 41.47 57.25 67.35 57.86
தென்சென்னை 10.08 21.97 33.93 42.10 57.04 67.82 57.43
மொத்த சதவீதம் 12.55 24.37 40.05 51.41 63.20 72.09 70.90
விளவங்கோடு 10.30 17.09 35.14 45.43 56.68 65.40 67.72

The post வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் பட்டியலில் பெயர் இல்லாததால் பலரும் வாக்களிக்க முடியாத நிலை: பொதுமக்கள் முதல் நடிகர் வரை ஏமாற்றம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Lok ,Sabha ,Tamil Nadu ,
× RELATED தேர்தலில் பணப்பட்டுவாடா, போஸ்டர்...