×

கொளுத்திய கடும் வெயிலுக்கு இடையிலும் தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு: காலை 7 மணி முதல் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்

சென்னை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் விறுவிறுப்புடன், அதேநேரம் அமைதியாக வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்தது. சென்னையில் வரிசையில் நின்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார். சேலத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், வேட்பாளர்கள், திரை பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். தமிழகத்தில் மொத்தம் 72 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. 17வது இந்திய நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் வரும் ஜூன் 16ம் தேதியுடன் முடிகிறது. இதையொட்டி 18வது மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பை கடந்த மார்ச் 16ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

அதன்படி, நாடு முழுவதும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. முதற்கட்டமாக, 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் தேர்தல் நேற்று நடந்தது. அதன்டி, தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகள், விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. முன்னதாக, காலை 6 மணிக்கு அனைத்துக்கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்கள் முன் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் 50 வாக்குகள் செலுத்த அனுமதிக்கப்பட்டு, வாக்குகள் முறையாக பதிவாகிறதா என்று சோதனை செய்யப்பட்டது. பின்னர் அனைத்தும் அழிக்கப்பட்டு பொதுமக்களின் வாக்குப்பதிவுக்கு இயந்திரங்கள் சீலிடப்பட்டு வைக்கப்பட்டன.

சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும் என்பதால் நேற்று காலை 6.30 மணிக்கெல்லாம் வாக்குச்சாவடி மையங்களுக்கு பொதுமக்கள் வந்து நீண்ட வரிசையில் காத்து நின்றனர். 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும், வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து வாக்களிக்க ஆர்வம் காட்டினர். குறிப்பாக முதல்முறை வாக்காளர்கள் மற்றும் வயதானவர்கள் காலையிலேயே வாக்களித்தனர். சென்னை லயோலா கல்லூரி, திருவாரூர், திருச்சி உள்ளிட்ட சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து மண்டல குழுவினர் வந்து வாக்கு இயந்திரங்களை சரி செய்தபின் வாக்குப்பதிவு தொடங்கியது. லயோலா கல்லூரியில் சுமார் 2 மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

வாக்குப்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் ஆர்வமாக வரிசையில் நின்று வாக்களித்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் வரிசையில் நின்று வாக்களித்தார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சேலம் சிலுவம்பாளையத்தில் வாக்களித்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது மனைவியுடன் தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐஇடி கல்லூரியில் வாக்கு செலுத்தினார். இதேபோல், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் அவரவர் சொந்த ஊரில் வாக்குகளை பதிவு செய்தனர்.

இதேபோல், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், பிரபு, தனுஷ், விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், கார்த்திக், கவுதம் கார்த்திக், பிரசன்னா, சுந்தர்.சி, டி.ராஜேந்தர், நடிகைகள் கவுதமி, சினேகா, குஷ்பு ஆகியோர் தங்களது வாக்கை செலுத்தினர். சென்னை நந்தனத்தில் மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். மயிலாப்பூரில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி ஓட்டு போட்டார். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை இடைவிடாமல் நடந்தது. 6 மணிக்குள் வாக்குச்சாவடி மையத்திற்குள் வந்தவர்களை தேர்தல் அலுவலர்கள் வாக்களிக்க அனுமதித்தனர். மாலை 6 மணிக்கு பிறகு வந்தவர்களை வாக்களிக்க அனுமதி அளிக்கவில்லை. மேலும், தமிழகத்தில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இல்லாமல், மிகவும் அமைதியாகவும், விறுவிறுப்பாகவும் தேர்தல் நடந்து முடிந்தது.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் போரூர், திருச்சி, தர்மபுரி என 10 அல்லது 11 இடத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்தது. அது உடனடியாக சரி செய்யப்பட்டு விட்டது. தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாகவும், அதேநேரம் மிகவும் அமைதியான முறையிலும் நடந்து முடிந்துள்ளது.
தமிழகம் முழுவதும் 10 வாக்குச்சாவடி மையங்களுக்கு ஒரு மண்டல குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் வாகனங்களில் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருந்தனர்.

பழுது ஏற்பட்ட இடங்களில் உடனடியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றி வைக்கப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள மின்சார கேபிள் உள்ளிட்ட சில பகுதிகளில் லேசான பிரச்னை இருந்தது. உடனடியாக பெல் நிறுவன இன்ஜினியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று அதையெல்லாம் சரிசெய்தனர்.தமிழகத்தில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இல்லாமல் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. தமிழகத்தில் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தண்ணீர் வசதி, சாமியானா பந்தல், சேர், மாற்றுத்திறனாளிகளுக்கு வீல் சேர் வசதி செய்யப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதும் மொத்தமுள்ள 68,321 வாக்குச்சாவடிகளிலும் மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடி மையத்துக்குள் வந்த அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். 6 மணிக்கு பிறகு அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு கடைசியாக வந்த நபர்கூட ஓட்டு போட அனுமதிக்கப்பட்டது. ஆனால் மாலை 6 மணிக்கு மேல் வாக்குச்சாவடி மையத்துக்கு வந்தால் அவர்கள் ஓட்டுப்போட அனுமதிக்கப்படவில்லை.

தமிழகம் முழுவதும் 72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. துல்லியமான விவரம் இன்று பகல் 12 மணிக்கு வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலிலும் 64.54 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி இடைவிடாமல் மாலை 6 மணி வரை நடந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும், 68,321 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்கு இயந்திரங்களுக்கு வேட்பாளர்களின் ஏஜென்ட்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. பின்னர், வாக்குச்சாவடி மையங்களில் இருந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு லாரியில் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பணிகள் நேற்று இரவு வரை நடந்தது.

வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள ஸ்ராங்க் ரூமில் சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குப்பெட்டி இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அந்த அறை முழுவதும் உள்ள ஜன்னல்கள் அடைக்கப்பட்டு கதவுக்கு சீல் வைக்கப்பட்டது. அந்த மையம் முழுவதும் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு மையங்களில் உள்ள வாக்கு இயந்திரங்களை கட்சி ஏஜென்ட்கள் வெளியே இருந்து 24 மணி நேரமும் கண்காணிக்க வெப்கேமரா வசதியும் செய்யப்பட்டுள்ளது. சுமார் 45 நாட்கள் அந்த அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை நாளான வருகிற ஜூன் 4ம் தேதி காலை 8 மணிக்கு சீல் உடைக்கப்பட்டு, வாக்குகள் எண்ணப்படும்.

* புதுச்சேரியில் 79% வாக்குப்பதிவு
புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், பாஜ, அதிமுக வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 26 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர். இந்த தொகுதிக்காக வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இதற்காக மாநிலம் முழுவதும் 967 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதலே பெண்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். மொத்தம் 79% வாக்குகள் பதிவானது. கடந்த 2009 நாடாளுமன்ற தேர்தலில் 79.74 சதவீத வாக்குபதிவும், 2014ல் 82.10 சதவீதமும், 2019ல் 81.25 சதவீதம் வாக்குபதிவு பதிவாகி இருந்த நிலையில் 2024ல் அதைவிட குறைவாகவே வாக்குப்பதிவு இருக்கும் என்றே தெரிகிறது.

* பட்டியலில் பெயர் இல்லாவிட்டால் கடைசியில் ஒன்றும் செய்ய முடியாது
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறுகையில், வாக்காளர் அடையாள அட்டை இருக்கிறது, ஆனால் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என புகார்கள் தொடர்ந்து வந்துள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே ஒருவர் வாக்களிக்க முடியும். அதனால்தான், கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்தே வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இருக்கிறதா என்று சோதனை செய்து கொள்ளுங்கள், இல்லையென்றால் புதிதாக பெயர் சேர்க்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து வந்தது. தற்போது கடைசி நேரத்தில் ஒன்றும் செய்ய முடியாது. ஒரே பகுதியில் பலரது பெயர் நீக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து விசாரணை நடத்தப்படும். வாக்குப்பதிவு அலுவலர் வீட்டில் வந்து சோதனை செய்தபோது, அந்த நபர் இல்லாமல் இருந்திருக்கலாம் அல்லது வீடு ஷிப்டு செய்திருக்கலாம். அதேபோன்று ஒரு வாக்குச்சாவடியில் 1500 மேல் மக்கள் இருந்தால், கூடுதல் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அதனால், பொதுமக்கள் வழக்கமான பூத்தில் தங்களது பெயர் இல்லையென்றால், ஓட்டர் ஹெல்ப் லைன் அப்பில் சென்று பார்த்தால், பக்கத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் பெயர் இருக்க வாய்ப்புள்ளது. சட்டம்-ஒழுங்கு தொடர்பாக இதுவரை எந்தவித புகாரும் வரவில்லை. இந்தியா ஜனநாயக நாடு. அதனால் யாரையும் கண்டிப்பாக ஓட்டுப்போட வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. நடிகர்கள் ஓட்டுப்போட வரும்போது கூட்டம் அதிகமாவதால் முதியோர்கள் பாதிக்கப்படுவதாக கேட்கிறீர்கள். அந்த வாக்குச்சாவடிகள் முன்கூட்டியே கண்டறிந்து, கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக கூறினார்.

The post கொளுத்திய கடும் வெயிலுக்கு இடையிலும் தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு: காலை 7 மணி முதல் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Puducherry ,Chief Minister ,M. K. Stalin ,Edappadi Palaniswami ,Salem ,
× RELATED எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞர்...