×

வாக்களிக்க மினி வேன்களில் ஆபத்தான முறையில் மக்கள் பயணம்

செங்கல்பட்டு: மக்களவை தேர்தலை முன்னிட்டு இன்று (19ம் தேதி) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இதையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக, தமிழக அரசின் சார்பில் கூடுதல் அரசு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் கடந்த 2 நாட்களாக ரயில், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் கூட்டம் அலைமோதியது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேற்று காலை முதல் நள்ளிரவு வரை கடலூர், சிதம்பரம் உள்பட பல்வேறு தென்மாவட்ட பகுதிகளில் போதிய அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் பரிதவித்தனர். இதனால் குடும்பத்துடன் வெளியூர் செல்ல வேண்டிய பயணிகளில் பலர், நேற்று நள்ளிரவில் தங்கள் சொந்த ஊர்களில் வாக்களிப்பதற்காக செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலை வழியாக திருச்சி, கடலூர், சிதம்பரம் பகுதிகளுக்கு செல்லும் சரக்கு லாரிகள், மினி வேன்கள் மூலமாக ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர்.

சரக்கு வேனின் பின்பக்கத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் நின்ற நிலையிலும் அமர்ந்தபடியும் பயணித்தனர். இதனால் அந்த வாகனத்தின் பின்னால் வந்த சக வாகன ஓட்டிகள், சரக்கு வேனின் பின்பக்கத்தில் அதிகளவு பயணிகள் ஏற்றி செல்லப்படுவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். வழிநெடுகிலும் ரோந்து பணியில் ஈடுபட வேண்டிய போலீசார், வாக்குச்சாவடி பணிகளுக்கு சென்றுவிட்டதால், மினி சரக்கு வேன்களில் வெளியூர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இதுபோன்ற ஆபத்தான செயல்கள் நடைபெறுவதை தடுக்க, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

The post வாக்களிக்க மினி வேன்களில் ஆபத்தான முறையில் மக்கள் பயணம் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Lok Sabha elections ,Tamil Nadu government ,Chennai ,
× RELATED மக்களவை தேர்தல்: திரிபுராவில் 54.47% வாக்குப்பதிவு