×

தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 102 மக்களவை தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது: அனைவரும் தவறாமல் வாக்களியுங்கள்..!

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. தேர்தல் பாதுகாப்பு பணியில் 1.50 லட்சம் போலீஸ் மற்றும் துணை ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு முழுவதையும் வெப்கேமரா மூலம் கண்காணிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்களவைக்கு முதல் கட்டத் தேர்தல் இன்று நடக்கிறது. 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது.

அதன்படி, முதல் கட்டத்திலேயே தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றம், விளவங்கோடு சட்டமன்றத்துக்கான இடைத்தேர்தல் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜ இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. மக்களவைக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ம் தேதி நடைபெறும். இதைதொடர்ந்து வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் இன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் அளித்த பேட்டி: தமிழகத்தில் இன்று நடைபெறும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும். வாக்கு எண்ணிக்கைக்கு 39 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். மாலை 6 மணிக்கு பிறகும் வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கள் வழங்கப்பட்டு எவ்வளவு நேரமானாலும் வாக்களிக்க அனுமதி வழங்கப்படும். ஆனால், 6 மணிக்கு மேல் வாக்குச்சாவடிக்கு வருபவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3.06 கோடி ஆண் வாக்காளர்களும், 3.17 கோடி பெண் வாக்காளர்களும், 8,267 மூன்றாம் பாலினத்தவர்களும் உள்ளனர். இந்த தேர்தலில் 18 முதல் 19 வயது வரை உள்ள 10.92 லட்சம் இளம்வாக்காளர்கள் முதன் முதலாக வாக்களிக்க உள்ளனர்.

மாற்றுத்திறனாளிகள் 4,61,771 பேரும், 85 வயதுக்கு மேல் 6,14,002 பேரும் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் 1,08,804 பேர் தபால் வாக்களித்துள்ளனர். தமிழகத்தில் மொத்தமுள்ள 68,321 வாக்குச்சாவடி மையங்களில் 3.23 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கு 3 கட்ட பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் 874 ஆண்களும், 76 பெண்களும் உள்ளனர்.

தேர்தலை கண்காணிக்க 39 பொது பார்வையாளர்கள், 20 போலீஸ் பார்வையாளர்கள், 58 தேர்தல் செலவின பார்வையாளர்கள், மாநிலம் முழுவதும் கண்காணிக்க சிறப்பு தேர்தல் செலவின பார்வையாளர் ஒருவரை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்து, அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்து வந்தனர். தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 190 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் தமிழகத்தில் முகாமிட்டுள்ளனர். வாக்குப்பதிவு முடிந்த பிறகு 50 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் மட்டுமே தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை பணியில் இருப்பார்கள்.

மீதமுள்ள துணை ராணுவ வீரர்கள் மற்ற மாநிலங்களில் நடைபெறும் தேர்தல் பணிக்காக அனுப்பி வைக்கப்படுவார்கள். வாக்குப்பதிவு முடிந்ததும், ஒவ்வொரு தொகுதிக்கான சென்டரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும். அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படும். முதல் பகுதியில் துணை ராணுவ வீரர்களும், 2, 3 கட்ட பாதுகாப்பில் உள்ளூர் போலீசார் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பில் ஈடுபடுவார்கள். தமிழகத்தில் 8,050 பதற்றமான வாக்குச்சாவடிகள், 181 மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது.

இங்கு கூடுதல் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். அங்கு வெப்கேமரா பொருத்தப்பட்டு தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் கண்காணிக்கப்படும். மொத்தமுள்ள 68,321 வாக்குச்சாவடி மையங்களில் 44,801 மையங்களில் வெப்கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இங்கு நடைபெறும் வாக்குப்பதிவை சென்னை, தலைமை செயலகம் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து நேரடியாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முறையான ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச்சென்ற ரூ.173.85 கோடி ரொக்கம் மற்றும் ரூ.1,084 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள், ரூ.35 கோடி பரிசு பொருட்கள், ரூ.1.80 கோடி மதுபான வகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 27ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க விண்ணப்பம் அளித்தவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை விரைவு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி 26,50,943 கார்டு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 90 சதவீதம் பேருக்கு வீடு வீடாக பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது. பூத் சிலிப் கிடைக்காதவர்கள் voterhelpline app மூலம் தங்கள் வாக்குச்சாவடி எங்கு உள்ளது என்பதை தெரிந்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2009ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 73.02 சதவீதம், 2014 தேர்தலில் 73.74 சதவீதம், 2019 தேர்தலில் 72.47 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.

The post தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 102 மக்களவை தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது: அனைவரும் தவறாமல் வாக்களியுங்கள்..! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Puducherry ,Chennai ,
× RELATED எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞர்...