×

கேரளாவில் மாதிரி வாக்குப்பதிவில் குளறுபடி ஒருமுறை பட்டனை அழுத்தினால் பா.ஜ.வுக்கு 2 ஓட்டு பதிவு: காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் புகார்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் காசர்கோடு தொகுதியில் நடந்த மாதிரி வாக்குப்பதிவில் ஒரு முறை பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு 2 ஓட்டுகள் விழுந்தது. இது தொடர்பாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளன. கேரள மாநிலம் காசர்கோடு தொகுதியில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் தற்போதைய எம்பி ராஜ்மோகன் உண்ணித்தானும், இடதுசாரி கூட்டணி சார்பில் எம்.வி. பாலகிருஷ்ணனும், பாஜ கூட்டணி சார்பில் எம்.எல்.அஷ்வினியும் போட்டியிடுகின்றனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாதிரி வாக்குப்பதிவு நடந்தது. பொதுமக்கள் மற்றும் அனைத்துக் கட்சி வேட்பாளர்களின் ஏஜென்டுகள் இதில் கலந்து கொண்டனர். முதலில் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் 190 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் பரிசோதிக்கப்பட்டன. பின்னர் முதல் கட்டமாக 20 இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. அதில் 4 இயந்திரங்களில் ஒவ்வொரு முறை பரிசோதித்த போதும் பாஜ சின்னத்துக்கு எதிரான பட்டனை ஒரு முறை அழுத்தினாலும் விவிபேட் இயந்திரத்தில் 2 ஓட்டுகள் விழுந்ததாக ஒப்புகை சீட்டு வந்துள்ளது.

இது குறித்து கம்யூனிஸ்ட், காங்கிரஸ் வேட்பாளர்களின் ஏஜென்டுகள் கூறினர். மேலும் இது குறித்து காசர்கோடு மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான இன்பசேகருக்கு புகாரும் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், தேர்தல் அதிகாரி இன்பசேகர் வெளியிட்ட அறிக்கையில், பொறியாளர்கள் சில வாக்குப்பதிவு இயந்திரங்களை சோதனை செய்துள்ளனர். அந்த சோதனை முடிவடைவதற்கு முன்பே சில இயந்திரங்கள் ஊழியர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். அந்த இயந்திரங்களில மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டுள்ளது.

இதனால், ஏற்கனவே பொறியாளர்கள் பதிவு செய்த வாக்கும் சேர்ந்து பிரின்ட் வந்துள்ளது. பின்னர் இது சரிசெய்யப்பட்டு, மீண்டும் நடந்த மாதிரிவாக்கெடுப்பில் ஒரு இயந்திரத்தில் மட்டும் ஆயிரம் வாக்குகள் பதிவு செய்யப்பட்டு, விவிபேட் சீட்டுக்களுடன் சரிபார்க்கப்பட்டது. இதில், எல்லாம் சரியாக இருந்தது. 2 இயந்திரங்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மாற்றப்பட்டன என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே உச்ச நீதிமன்றத்தில் விவிபேட் சீட்டுகளை முழுமையாக எண்ண வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கு விசாரணையின் போது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மனீந்தர் சிங், \”கேரளாவின் காசர்கோடு பகுதியில் செய்யப்பட்ட மாதிரி வாக்குப்பதிவில் பாஜவுக்கு அதிகமாக ஓட்டு பதிவானது என்ற செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று கூறியிருந்தார். இந்த விவகாரத்தில், குளறுபடி நடந்தது உண்மைதான் என்று தொகுதியின் தேர்தல் அதிகாரி விளக்கம் அளிக்க, அது உண்மைக்கு புறம்பான செய்தி என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

The post கேரளாவில் மாதிரி வாக்குப்பதிவில் குளறுபடி ஒருமுறை பட்டனை அழுத்தினால் பா.ஜ.வுக்கு 2 ஓட்டு பதிவு: காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் புகார் appeared first on Dinakaran.

Tags : BJP ,Kerala ,Congress ,Communist ,Thiruvananthapuram ,Kasargod ,Election Commission ,Kasaragod ,Dinakaran ,
× RELATED பாஜக, காங்கிரஸ் கட்சிகள் கேரள...