×

தமிழகத்தில் நாளை முதலே நடத்தை விதிமுறைகளை ஆணையம் நீக்க வேண்டும்: காங்கிரஸ் சார்பில் தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் நாளை முதலே தேர்தல் நடத்தை விதிமுறைகளை நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் தலைமை தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் டி.செல்வம் தலைமையில், செயற்குழு உறுப்பினர் ஏ.பி.சூரியபிரகாசம், சட்டத்துறை துணைத்தலைவர் எஸ்.கே.நவாஸ் உள்ளிட்டோர் நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் செல்வம் கூறியதாவது: தமிழகத்தில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. அதற்கு பின்னரும் இந்திய தேர்தல் ஆணையம் வரும் ஜூன் 4ம் தேதி வரை கட்டுப்பாடுகள் தொடரும் என்று தெரிவித்துள்ளது. இது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. சாமானிய மக்கள் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு செல்வதற்கு தடை தொடரும் என்று தெரிவித்துள்ளனர். தேர்தல் ஆணையம் மக்களை பாதிக்கும் செயலில் ஈடுபடுவதால், இதை மறுபரிசீலனை செய்து வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.

இதனால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள், சிறிய, நடுத்தர வர்த்தகர்கள், சுய தொழில் செய்யும் பெண்கள், திருமண வீட்டினர், சுற்றுலா பயணிகளும் பாதிக்கப்படுவார்கள் என்பதால், கோரிக்கையாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் வழங்கியுள்ளோம். பரிசீலிப்பதாக அவரும் தெரிவித்துள்ளார் என்றார்.

ழக்கறிஞர் சூரியபிரகாசம் கூறும்போது, ‘‘தேர்தல் முடிந்து, வாக்கு எண்ணிக்கை நடைபெற 45 நாள் அவகாசம் உள்ளது. இந்த நாட்களில் அரசு இயந்திரம் முற்றிலும் முடக்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் இயங்க முடிவதில்லை. இது மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி. எனவே, தேர்தல் ஆணையம் 20ம் தேதி முதலே தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் காங்கிரஸ் சார்பில் பொது நல வழக்கு தொடரப்படும்’’ என்றார்.

The post தமிழகத்தில் நாளை முதலே நடத்தை விதிமுறைகளை ஆணையம் நீக்க வேண்டும்: காங்கிரஸ் சார்பில் தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Congress ,CHENNAI ,Chief Electoral Officer ,General Secretary ,D. Selvam led ,AP ,Suriyaprakasam ,Vice President ,SK Nawaz ,
× RELATED பொதுமக்களுக்கு உதவும் வகையில்...