×

தேர்தல் அமைதியாக நடக்க வேண்டி வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சிறப்பு பூஜை

அணைக்கட்டு: தேர்தல் அமைதியான முறையில் நடக்கவும், 100 சதவீதம் வாக்குப்பதிவு நடக்கவும் வேண்டி வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சிறப்பு பூஜை செய்தனர். தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது. இதையொட்டி வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் இருந்து வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

அதன்படி, அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் உள்ள 268 வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான 536 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 268 கண்ட்ரோல் யூனிட் இயந்திரங்கள், 268 விவிபேட் இயந்திரங்கள், 268 ஸ்டேஷனரி பொருட்கள் பேக்கிங் செய்யப்பட்டு மண்டலம் வாரியாக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இந்த தொகுதிக்குட்பட்ட பென்னாத்தூர் பேரூராட்சியில் உள்ள வாக்குச்சாவடிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவி பேட் இயந்திரங்கள், கண்ட்ரோல் யூனிட் இயந்திரங்கள், பேக்கிங் செய்யப்பட்ட பொருட்கள் ஆகியவற்றை மண்டல அலுவலர்கள் நேற்று மாலை எடுத்து வந்தனர்.

அப்போது, பேரூராட்சிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் அமைதியான முறையில் நடைபெறவும், 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெறவும் வேண்டி பேரூராட்சி செயல் அலுவலர் அர்ச்சுனன் தலைமையில் சிறப்பு பூஜை நடந்தது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவைகளுக்கு வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் வைத்து கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து பூஜை செய்தனர். இதேபோல் தமிழ்நாட்டின் பல இடங்களில் தேர்தல் அமைதியாக நடக்க வேண்டி வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு பூசணிக்காய் சுற்றி போடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

The post தேர்தல் அமைதியாக நடக்க வேண்டி வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சிறப்பு பூஜை appeared first on Dinakaran.

Tags : Damkadu ,Lok Sabha elections ,Tamil Nadu ,Damaktu taluka ,Vellore district ,
× RELATED மக்களவை தேர்தல்: திரிபுராவில் 54.47% வாக்குப்பதிவு