×

முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் எங்கே வாக்களிக்கிறார்கள்?

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையிலும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும் வாக்களிக்க உள்ளனர். தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என 40 தொகுதிகளுக்காக தேர்தல் இன்று நடக்கிறது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் முடிந்ததை தொடர்ந்து தலைவர்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு சென்றனர். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அவர்கள் தங்கள் சொந்த ஊரில் இன்று வாக்களிக்க உள்ளனர். தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி. கல்லூரி வளாகத்தில் காலை 9 மணிக்கு வாக்களிக்கிறார். அவருடன் திமுக இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர் வாக்களிக்க உள்ளனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை காலை 10 மணியளவில் திரும்பெரும்புதூர் தொகுதி மணிமங்கலம், அரசு இசேவை மையம், மேற்கு முகம், கிழக்கு பகுதி வாக்குச்சாவடி 272ல் தனது வாக்கை பதிவு செய்கிறார். மதிமுக பொது செயலாளர் வைகோ தூத்துக்குடி மாவட்டம், கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்களிக்கிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அங்கனூர் கிராமம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்களிக்கிறார்.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ அரும்பாக்கம் ஜெகானந்தா நகர் மெயின் ரோடு தெருவில் உள்ள குட் ஹோப் பள்ளிக்கூடத்தில் காலை 7.30 மணியளவில் வாக்களிக்கிறார். திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி சென்னை மயிலாப்பூரில் உள்ள செயின்ட் எப்பாஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் காலை 8.30 மணியளவில் வாக்களிக்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் திருத்துறைப்பூண்டி வேளூர் கிராம தொடக்கப்பள்ளியில் காலை 7 மணிக்கும்,

மார்க்சிஸ்ட் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிதம்பரத்தில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளி, மேற்கு பார்த்த கட்டிடத்தில் காலை 7.30 மணியளவிலும் வாக்களிக்கின்றனர். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அடையாறு காமராஜர் அவனெ்யூ, அரசு உயர்நிலைப்பள்ளியில் காலை 8.30 மணிக்கு வாக்களிக்கிறார். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் காலை 8 மணியளவில் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டில் உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளியில் வாக்கு பதிவு செய்கிறார்.

அதிமுக கூட்டணி: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சிலுவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் இன்று காலை 8 மணியளவில் வாக்களிக்கிறார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மகன்கள் விருதுநகர் தொகுதி வேட்பாளர் விஜய் பிரபாகரன், நடிகர் சண்முகபாண்டியன் ஆகியோர் சென்னை சாலிகிராமம் கே.கே.சாலையில் உள்ள காவேரி மேல்நிலைப்பள்ளியில் காலை 7 மணியளவில் வாக்களிக்கின்றனர்.

பாஜக கூட்டணி: பாஜ தலைவர் அண்ணாமலை கரூர் சூடாமணி ஊத்துப்பட்டி தொடக்கப்பள்ளியில் காலை 8 மணிக்கு வாக்களிக்கிறார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பெரிய குளத்தில் உள்ள ெசவன்த் டே அட்வென்டிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வாக்களிக்கிறார். பாமக நிறுவனர் ராமதாஸ் தனது சொந்த ஊரான திண்டிவனம் ஸ்ரீமரகதாம்பிகை உயர்நிலைப்பள்ளியில் வாக்களிக்கிறார். அதே பள்ளியில் பாமக தலைவர் அன்புமணியும் வாக்களிக்கிறார்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆழ்வார்பேட்டை பீமண்ண கார்டன் தெரு சென்னை மேல்நிலைப்பள்ளியில் காலை 9 மணியளவில் வாக்களிக்கிறார். அமமுக பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் அடையாறு தாமோதரபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் வாக்களிக்கிறார். நாம் தமிழர் கட்சி: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வளசரவாக்கம் அஷ்டலட்சுமி நகர் வேளாங்கண்ணி பள்ளியில் காலை 8 மணிக்கு வாக்களிக்கிறார்.

* ஆளுநர் ஆர்.என்.ரவி வாக்களிப்பு
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கிண்டி வேளச்சேரி சாலையில் உள்ள அட்வென்ட் கிறிஸ்துவ நடுநிலைப்பள்ளியில் காலை 11 மணியளவில் தனது வாக்கை பதிவு செய்கிறார். மேலும் ஆளுநருடன், அவரது துணைவியார் லட்சுமி ரவியும் வாக்களிக்கிறார்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் எங்கே வாக்களிக்கிறார்கள்? appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Edappadi ,Chennai ,Thenampet ,Edappadi Palaniswami ,Salem ,Tamil Nadu ,Puducherry ,
× RELATED கடந்த மூன்றாண்டுகளில் தொழிலாளர்களின்...