×

கடந்த 10 வருடங்களில் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றினார் என்று மோடியால் கூற முடியுமா? பினராயி விஜயன் கேள்வி

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 10 வருடங்களில் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார் என்று மோடியால் கூறமுடியுமா? என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கேள்வி எழுப்பி உள்ளார். கேரள மாநிலம் பாலக்காடு தொகுதியில் போட்டியிடும் இடதுசாரி கூட்டணி வேட்பாளர் விஜயராகவனை ஆதரித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரசாரம் செய்தார். கோட்டை மைதானத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: “பாலக்காடு மக்களுக்கு எத்தனையோ பிரச்னைகள் உள்ளன.

ஒன்றிய அரசு அதையெல்லாம் கண்டு கொள்வது இல்லை. பாலக்காட்டில் எய்ம்ஸ் கொண்டு வருவோம் என்று கூறி பல வருடங்களாக மக்களை ஏமாற்றி வருகின்றனர். ரயில் பெட்டி தொழிற்சாலை அமைக்கப்படும் என்றும் நீண்ட காலமாக கூறி வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெமல் உள்பட பாலக்காட்டில் இயங்கி வரும் நிறுவனங்களை தனியார் மயமாக்க முயற்சிக்கின்றனர். அதை கேரள அரசிடம் ஒப்படைக்க மறுக்கின்றனர். இந்த நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது என்று இடதுசாரி கூட்டணி மட்டும் தான் போராட்டம் நடத்தியது.

கேரளா எந்த வகையிலும் முன்னேறக் கூடாது என்பதுதான் மோடியின் திட்டமாகும். பிரதமர் மோடி கேரளாவுக்கு வரும்போது எல்லாம் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றினார் என்று அவரால் கூற முடியுமா? கேரளாவில் கூட்டுறவுத்துறை இந்தியாவுக்கே முன்மாதிரியாக விளங்குகிறது. ஆனால் அதை குறை கூறி கூட்டுறவுத் துறையின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை கெடுக்க மோடி முயற்சிக்கிறார். யார் நினைத்தாலும் கேரள மக்களுக்கு கூட்டுறவுத் துறையின் மீது இருக்கும் நம்பிக்கையை தகர்க்க முடியாது” என்று தெரிவித்தார்.

The post கடந்த 10 வருடங்களில் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றினார் என்று மோடியால் கூற முடியுமா? பினராயி விஜயன் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Modi ,Pinarayi Vijayan ,Thiruvananthapuram ,Kerala ,Chief Minister ,Vijayaraghavan ,Left Alliance ,Palakkad, Kerala ,
× RELATED கேரளாவை பிரதமர் மோடி...