×

இனிப்பு வகைகளை வேண்டுமென்றே சாப்பிட்டு தனது சர்க்கரை அளவை அதிகரிக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்: அமலாக்கத்துறை குற்றசாட்டு

டெல்லி: இனிப்பு வகைகளை வேண்டுமென்றே சாப்பிட்டு தனது சர்க்கரை அளவை அதிகரிக்கிறார் கெஜ்ரிவால் என அமலாக்கத்துறை புகார் தெரிவித்துள்ளது. தனது சர்க்கரை அளவை அதிகரித்து அதன் மூலம் ஜாமீன் பெற முயற்சிக்கிறார் என கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. மருத்துவர்களின் பரிந்துரைப்படியே கெஜ்ரிவால் உணவுகளை உட்கொள்கிறார் என அவரது வழக்கறிஞர் தகவல் தெரிவித்தார்.

டெல்லி மதுபான ஊழல் வழக்கில் சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் சர்க்கரை அளவு குறித்து ஆம் ஆத்மி கட்சி ஆரம்பம் முதலே கவலை தெரிவித்து வருகிறது. இதற்கிடையில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுமென்றே ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்ததாக அமலாக்க இயக்குனரகம் குற்றம்சாட்டியுள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுமென்றே மாம்பழம், இனிப்புகள், தேநீருடன் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரித்து வருவதாக அமலாக்க இயக்குனரகம் குற்றம்சாட்டியுள்ளது. இரத்த சர்க்கரை அளவு ஏற்ற இறக்கங்களைக் காரணம் காட்டி ஜாமீன் பெறுவதற்கான காரணங்களை உருவாக்க கெஜ்ரிவால் விரும்புவதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறையின் இந்த குற்றச்சாட்டை அடுத்து, கெஜ்ரிவாலின் உணவு அட்டவணையை திகார் சிறை நிர்வாகத்திடம் நீதிமன்றம் கேட்டுள்ளது.

இதையடுத்து டெல்லி மதுபான ஊழல் வழக்கில் எங்களால்தான் முதல்வர் கெஜ்ரிவால் காவலில் உள்ளார் என்று அமலாக்கத்துறை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். சர்க்கரை நோய் அதிகமாக இருப்பதாகக் கூறி, மாம்பழம், இனிப்புகள் மற்றும் சர்க்கரையை உட்கொண்டதால், வீட்டில் சமைத்த உணவை உண்ண அனுமதிக்கப்பட்டது கவலைக்குரியது என்று அமலாக்கத்துறை ஆலோசகர் ஜோஹைப் ஹுசைன் சிறப்பு நீதிபதி காவேரி பவேஜாயிடம் தெரிவித்தார்

அதே சமயம், கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விவேக் ஜெயின், அமலாக்கத்துறையின் வாதங்களுக்கு ஆட்சேபம் தெரிவித்ததுடன், ஊடகங்களுக்காக மட்டுமே விசாரணை நிறுவனம் இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கிறது எனவும் தற்போதுள்ள விண்ணப்பத்தை வாபஸ் பெறுவதாகவும், சிறந்த விண்ணப்பத்தை தாக்கல் செய்வதாகவும் கூறினார்.

The post இனிப்பு வகைகளை வேண்டுமென்றே சாப்பிட்டு தனது சர்க்கரை அளவை அதிகரிக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்: அமலாக்கத்துறை குற்றசாட்டு appeared first on Dinakaran.

Tags : ARVIND KEJRIWAL ,ENFORCEMENT DEPARTMENT ,Delhi ,Kejriwal ,Enforcement ,
× RELATED நீங்கள் பாஜகவுக்கு வாக்களித்தால்...