×

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமும் , விவிபேட் விவகாரமும்.. ஏன் 100% ஒப்புகைச் சீட்டை எண்ண வேண்டும் ? முழு செய்தித் தொகுப்பு

சென்னை : மக்களவைத் தேர்தல் தேதி அறிவித்தது முதல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் இணைக்கப்பட்டுள்ள விவிபேட்டின் ஒப்புகை சீட்டை 100 சதவீதம் எண்ண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. இது தொடர்பான வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இதன் பின்னணி என்னவென்று பாப்போம்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் விவிபேட் சீட்டு விவகாரமும்

வாக்காளர் ஒருவர் வாக்களிக்கும் போது, தான் பதிவு செய்த சின்னத்தில் வாக்கு சரியாக பதிவாகியுள்ளதா என்பதை துல்லியமாகக் காட்டும் கருவியாக விவிபேட் இயந்திரம் அமைந்துள்ளது. ஒவ்வொரு வாக்குப் பதிவு இயந்திரத்திலிருந்தும் விவிபேட் இணைக்கப்பட்டுள்ளதால், வாக்காளர்கள் பதிவு செய்யும் வாக்குகள் காகித வடிவில் வாக்குச்சீட்டுகளாக மாறிவிடுவதால் அவற்றை பின்னர் திறந்து எண்ணும் போது, வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளும் அதற்கு இணையாக விவிபேட் இயந்திரத்தில் அச்சிடப்பட்டுள்ள சீட்டுகளும் சரியாக இருக்கிறதா? என்பதை அறிந்துகொள்ளலாம்.இதன்மூலம், வாக்குப்பதிவு இயந்திரத்தில் தவறுதலாக வேறு சின்னத்துக்கு தங்களுடைய ஓட்டு விழுந்திருந்தால் வாக்காளர்கள் அதை எளிதாக கண்டுபிடித்து புகார் அளிக்கவும் முடிகிறது. தற்போதைய நடைமுறைப்படி வாக்கு எண்ணிக்கையின்போது ஒவ்வொரு தொகுதியிலும் தலா 5 விவிபேட் இயந்திரங்களில் உள்ள ஒப்புகைச் சீட்டுகள் மட்டுமே எண்ணப்பட்டு சரிபார்க்கப்படுகிறது.

நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள்..

இந்நிலையில் ஜனநாயக சீர்த்திருத்த அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் ‛‛ மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் வாக்கு இயந்திரத்தில் எண்ணப்பட்டு விட்டதா என்பதை விவிபேட் இயந்திரம் மூலம் வாக்காளர் சரிபார்த்து உறுதிப்படுத்த தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசுக்கு வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டு இருந்தது.அதேபோல் சமூக ஆர்வலர் அருண் குமார் அகர்வால் சார்பில், ‛‛தேர்வு செய்யப்பட்ட 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள ஒப்புகை சீட்டுகளை மட்டும் மொத்த வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்ப்பதற்கு பதிலாக 100 சதவீத ஒப்புகை சீட்டுகளையும் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்’’ எனக்கூறி மனுத்தாக்கல் செய்தார். அதேபோல் இன்னும் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

ஏன் 100% ஒப்புகைச் சீட்டை எண்ண வேண்டும் ?

ஒப்புகை சீட்டு இயந்திரத்தை கடந்த 2017-ம் ஆண்டு இறுதி வடிவத்திற்கு கொண்டு வந்தபோது, அதில் வெளிப்படையாக தெரியும் கண்ணாடி பொருத்தப்பட்டிருந்தது. ஆனால் அதற்குப் பிறகு அதனை உள்ளிருந்து பல்பு எரிந்தால் மட்டுமே தெரியும் வகையிலான கண்ணாடியாக மாற்றி விட்டார்கள். தற்போது ஒப்புகைச்சீட்டு உள்ளே விழுகிறதா இல்லையா என்பது கூட வாக்காளர்களுக்கு தெரிவது இல்லை. பல ஐரோப்பிய நாடுகள் வாக்குச்சீட்டு முறைக்கே திரும்பி விட்டனர். மேலும் ஒரு தொகுதியில் 200 வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தும்போது 2 சதவீத ஒப்புகை சீட்டு இயந்திரங்கள் மட்டுமே சரிபார்க்கப்படுகின்றது.இதனால் நம்பகத்தன்மையில் கேள்விக்குறி உள்ளது. ஆகவே இந்தியாவில் தேர்தல் நியாயமாக நடைபெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் 100% ஒப்புகைச் சீட்டை எண்ண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

The post மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமும் , விவிபேட் விவகாரமும்.. ஏன் 100% ஒப்புகைச் சீட்டை எண்ண வேண்டும் ? முழு செய்தித் தொகுப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED தேர்தலில் பணப்பட்டுவாடா, போஸ்டர்...