×

தி மெஜீஷியன்ஸ் எலிபன்ட் (ஆங்கிலம்)

தற்போது பள்ளி குழந்தைகளுக்கான கோடை விடுமுறை காலம் என்பதால் அவர்களை மகிழ்விக்கும் வகையில் ஓடிடி தளங்கள் தரமான அனிமேஷன் படங்களை வெளியிட்டுள்ளன. அந்த வரிசையில் நெட்பிளிக்சில் வெளியாகி இருக்கும் படம் இது.
பிரபல எழுத்தாளர் கேட் டிக்காமிலோ எழுதிய நாவல் அதே பெயரில் படமாகி உள்ளது. போரில் தனது பெற்றோர்களை இழந்த ஒரு சிறுவனையும், சிறுமியையும் காப்பாற்ற வேண்டிய நிலை அந்த ராணுவ வீரருக்கு. ஆனால் அவர் தன்னால் ஒருவரைத்தான் காப்பாற்ற முடியும் என்று கூறி சிறுவனை எடுத்துக்கொண்டு, சிறுமியை உள்ளூர் பெண் ஒருத்தியிடம் கொடுத்து விட்டு வருகிறார். சிறுவனுக்கு பீட்டர் என்று பெயரிட்டு வளர்க்கிறார்.

பீட்டருக்கு தன் தங்கை உயிருடன் இருப்பதாக தோன்றும் ஒரு நாள் அவன் ஒரு ஜோதிட பெண்ணை சந்திக்கிறான். அவள் “யானையை பின் தொடர்ந்து சென்றால் உன் தங்கையை கண்டுபிடிக்கலாம்” என்கிறாள். ஆனால் அந்த ஊரில் யானை இல்லை. யானை வளர்க்கவும் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அந்த ஊருக்கு வரும் மேஜிக்மேன் ஒருவர் தனது மேஜிக் மூலம் பூச்செடியை வரவழைக்க முயற்சி செய்ய யானை வந்து விடுகிறது. இதனால் மேஜிக்மேன் சிறையில் அடைக்கப்படுகிறார்.

பீட்டர் அந்த யானையை தனக்கு தருமாறு கேட்கிறான். அதற்கு மன்னர் சாத்தியமில்லாத 3 விஷயங்களை நீ சாதித்து காட்ட வேண்டும் என்கிறார். வானத்தில் பறக்க வேண்டும், பெரிய மாவீரனை சண்டையில் ஜெயிக்க வேண்டும், சிரிக்காத ராணியை சிரிக்க வைக்க வேண்டும். என்பதுதான் அது. அதை பீட்டர் செய்தானா, யானை அவனுக்கு தங்கையை காட்டியதா என்பதுதான் படத்தின் கதை.

அம்புலிமாமா டைப் கதையாக இருந்தாரும் மன்னரின் சவால்களை அவன் வெல்வது லாஜிக்காகவே இருக்கிறது. போர் எப்படி குடும்பங்களை கலைத்து போடுகிறது. அன்பால் எப்படி எல்லோரையும் வெல்லலாம். விலங்குகளுக்கு அதற்கான உரிமையை கொடுக்க வேண்டும் என்கிற விஷயங்களை குழந்தைகளுக்கு கற்றுத் தருகிறது படம். வெட்ரி ரோகர்ஸ் இயக்கி உள்ள இந்த படம், நல்ல காட்சி அனுபவத்துடன் கருத்தையும் தருகிறது. குடும்பத்தோடு பார்த்து ரசிக்கலாம். தமிழிலும் பார்க்கலாம்.

Tags : OTD ,Netflix ,Kate DiCamillo ,
× RELATED ஓடிடியில் வெளியாகிறது பிளாக்பஸ்டர் படமான பிரேமலு!