×

சிங்கம்புணரி அருகே குயிலமுத நாயகி அம்மன் திருக்கல்யாண விழா

சிங்கம்புணரி, ஏப்.18: சிங்கம்புணரி அருகே பாரி ஆண்ட பரம்பு மலை என்னும் பிரான்மலை உள்ளது. இம்மலை அடிவாரத்தில் குன்றக்குடி தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட திருக்கொடுங்குன்ற நாதர் குயிலமுத நாயகி அம்மன் கோயில் ஆகாயம், மத்திபம், பாதாளம் என மூன்று நிலைகளில் சிவன் கட்சியளிக்கிறார். எங்கும் இல்லாத சிறப்பாக மங்கை பாகர் தேனம்மை திருமண கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

இக்கோயிலில் கடந்த 13ம் தேதி சித்திரை திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் மண்டகப்படி நிகழ்ச்சியாக நடைபெறும் இத்திருவிழாவில் ஐந்தாம் நாள் விழாவாக திருக்கல்யாண விழா நேற்று காலை நடைபெற்றது. இதில் காலை 9.30 மணிக்கு திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளிய திருக்கொடுங்குன்றநாதர் குயிலமுதநாயகி அம்மனுக்கு சிறப்பு யாக பூஜைகள் செய்யப்பட்டு சீர்வரிசை பொருட்கள் கொண்டு வரப்பட்டது. இதைத்தொடர்ந்து 10.30 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, சுவாமிக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சியும் கொடுங்குன்றநாதர் குயிலமுத நாயகி அம்மனுக்கு மங்கள நாண் பூட்டும் திருக்கல்யாண விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த பெண்கள் மஞ்சள் கயிற்றை மாற்றி சுவாமியை வழிபட்டனர். இதில் பிரான்மலை மற்றும் சுற்று கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து ஏழாம் நாள் திருவிழாவாக முல்லைக்குத் தேர் கொடுத்த பாரிவிழாவும், ஒன்பதாம் நாள் திருவிழாவாக திருத்தேரோட்ட விழாவும் நடைபெறும். பத்தாம் நாள் விழாவாக பஞ்சமூர்த்தி புறப்பாடு மற்றும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும். நிகழ்ச்சி ஏற்பாடுகளை குன்றக்குடி தேவஸ்தானம் செய்திருந்தது.

The post சிங்கம்புணரி அருகே குயிலமுத நாயகி அம்மன் திருக்கல்யாண விழா appeared first on Dinakaran.

Tags : Kuilamutha Nayaki Amman Thirukalyana festival ,Singampunari ,Bari Anda Parambu Hill ,Thirukkodungunra Nath Kuilamutha Nayaki Amman ,Shiva ,Kuilamutha Naaki Amman Thirukalyana festival ,
× RELATED வாக்குச்சாவடிக்குள் வலிப்பு வந்து...