×

திமுக வேட்பாளர் செல்வத்தை 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்: க.சுந்தர் எம்எல்ஏ இறுதிகட்ட பிரசாரத்தில் பேச்சு

உத்திரமேரூர், ஏப்.18: நாட்டை பாழ்படுத்திய மோடியை வீட்டுக்கு அனுப்ப, காஞ்சிபுரம் தொகுதி திமுக வேட்பாளர் செல்வத்தை 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என இறுதிக்கட்ட நிறைவு பிரசாரத்தில் க.சுந்தர் எம்எல்ஏ கூறினார். காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக க.செல்வம் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். கடந்த மாதம் 27ம் தேதி செய்யூர் தொகுதியில் உள்ள லத்தூர் ஒன்றியம் கடலூர் மீனவ கிராமத்தில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, வேட்பாளர் செல்வத்தின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்தார்.

அன்றிலிருந்து காஞ்சிபுரம், உத்திரமேரூர், மதுராந்தகம், செய்யூர், செங்கல்பட்டு, திருப்போரூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் திறந்த ஜீப்பில் நின்றபடி பல லட்சக்கணக்கான வாக்காளர்களை நேரில் சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்த நிலையில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ வேட்பாளர் செல்வத்திற்கு ஆதரவாக உத்திரமேரூர் பேரூராட்சிக்குட்பட்ட 10 வார்டுகளில் 500க்கும் மேற்பட்ட இளைஞர்களின் இருசக்கர வாகன அணிவகுப்புடன் இறுதி கட்ட பிரசாரத்தை நிறைவு செய்தார்.

அப்போது, எம்எல்ஏ சுந்தர் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்தியா கூட்டணியை வலுவாக அமைத்துள்ளார். இதன் காரணமாக தமிழ்நாட்டில் 40க்கு 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். மோடியின் ஆட்சியால் இந்தியாவுக்கும் எந்த நன்மையும் இல்லை. தமிழ்நாட்டுக்கும் எந்த நன்மையும் செய்யவில்லை. ஆனால், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமை திட்டம், பெண்கள் இலவச விடியல் பயணம், முதியோர் உதவித்தொகை, புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட திட்டங்களால் பல குடும்பங்கள் ₹5 ஆயிரம் வரை பலன் பெறுகிறது. இப்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கான ஆட்சியை செய்து வருகிறார். பத்து ஆண்டுகளாக இந்திய நாட்டை பாழ்படுத்திய நரேந்திர மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செல்வத்திற்கு உதயசூரியன் சின்னத்தில் கடந்த முறை 1.87 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தீர்கள். அதேபோன்று இந்த முறை 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதேபோல், மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா திமுக வேட்பாளர் செல்வத்திற்கு ஆதராவாக உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இந்நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், செயற்குழு உறுப்பினர் இரா.நாகன், பொதுக்குழு உறுப்பினர் சசிகுமார், பேரூர் செயலாளர் பாரிவள்ளல், விசிக மாவட்ட செயலாளர் எழிலரசன் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post திமுக வேட்பாளர் செல்வத்தை 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்: க.சுந்தர் எம்எல்ஏ இறுதிகட்ட பிரசாரத்தில் பேச்சு appeared first on Dinakaran.

Tags : DMK ,Selva ,K. Sundar MLA ,Uthramerur ,Modi ,Kanchipuram Constituency ,Kanchipuram Parliamentary Constituency ,
× RELATED சாலை விபத்தில் படுகாயமடைந்த திருமழிசை திமுக பேரூராட்சி தலைவர் காலமானார்