×

சிறுநீரகக் கற்களுக்கு ஆயுர்வேதத் தீர்வு!

நன்றி குங்குமம் டாக்டர்

சிறுநீரக மண்டல கற்கள் சிறுநீரகக் கோளாறுகளில் மிகவும் பொதுவான ஆனால் மிகவும் கஷ்டப்படுத்தக்கூடிய நோய்களில் ஒன்றாகும். மேலும் தற்போது மக்களுக்கு வரும் குடல் அல்லாத வயிற்று வலிக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். சிறுநீரகக்கற்கள் அல்லது யூரோலிதியாசிஸ் என்பது சிறுநீர் மண்டலத்தில் (சிறுநீரகங்கள், சிறுநீர்க் குழாய்கள் (சிறுநீரகத்தையும் சிறுநீர்ப்பையையும் இணைக்கும் குழாய்கள்). சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர்த்தாரை (உடலின் வெளிப்புறத்துடன் சிறுநீர்ப்பையை இணைக்கும் குழாய் ஆகிய உறுப்புகளை உள்ளடக்கியது சிறுநீர் மண்டலம்) கல் இருப்பதைக் குறிக்கிறது. உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் சிறுநீரகமும் ஒன்று. இயற்கையாகவே நம் அனைவருக்கும் இரண்டு சிறுநீரகங்கள் இருக்கின்றன.

உடலில் தினசரி உண்டாகும் கழிவுகளை ரத்தத்திலிருந்து பிரித்து நீருடன் வெளியேற்றி உடலை தூய்மையாக வைத்துக் கொள்வது சிறுநீரக மண்டலத்தின் பணி, மேலும், உடலுக்கு தேவையான மற்றும் தேவையற்ற உப்பின் விகிதாச்சாரத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்வதும் சிறுநீரகத்தின் பணிகளில் முக்கியமான ஒன்று. கோடைக்கால நோய்களின் பட்டியலில் சிறுநீரக மண்டலத்தின் கற்கள் ஒரு முக்கியமான இடத்தை வகித்தாலும், சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகள் முன்பைவிடத் தற்போது அதிகரித்துவிட்டதற்கு நம் வாழ்க்கைமுறை மாற்றமும் ஒரு முக்கியமான காரணம்தான் என்று கூறினால் மிகையாகாது.

பொதுவாக சிறுநீரகத்தில் கல் உருவாகி அது அங்கிருந்து நகர்ந்து சிறுநீர்க்குழாய்கள், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர்த்தாரை ஆகிய உறுப்புகளுக்கு இடம் பெயர்ந்து அங்கு குறிக்குணங்களை ஏற்படுத்தினாலும் இது பொதுவாக சிறுநீரகக்கல் என்றே அழைக்கப்படுகிறது.ஆயுர்வேதத்தில் சிறுநீரகக்கற்கள், அஷ்மரி என்றும், சிறிய துகள்கள், சர்க்கரா என்றும் விவரிக்கின்றது. அஷ்மரி என்பது அஷ்மா மற்றும் அரி என்னும் இரண்டு வார்த்தைகளை உள்ளடக்கியது. அஷ்மா என்றால் கல் மற்றும் அரி என்றால் எதிரி. எதிரியால் கொடுக்கப்பட்ட கடுமையான வலி போல் வலி ஏற்படுவதால் அஷ்மரி என்று ஆயுர்வேதம் அழைக்கிறது.

சுஷ்ருதாச்சாரியார் என்னும் ஆயுர்வேத குரு, கல் உருவாகும் இரண்டு நிலைகளை விளக்குகிறார். ஒன்று, பல்வேறு காரணங்களினால் படிகத்தை உருவாக்கும் பொருட்கள் சிறுநீரகத்தில் தேங்குவது (கால்சியம், ஆக்சலேட் மற்றும் யூரிக்அமிலம்) இரண்டு, சிறுநீரில் படிகங்கள் ஒன்றாக ஒட்டிக்கொள்வதைத் தடுக்கும் பொருட்கள் இல்லாமல் இருப்பது ஆக இவை இரண்டும் சிறுநீரக கற்கள் உருவாக சிறந்த சூழலை உருவாக்குகின்றன.

சிறுநீர் கற்கள் உருவாவதற்கான காரணங்கள்

குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது.
சிறுநீரை அடக்குவது
நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் இருப்பது
தூக்கமின்மை
தைராய்டு நோய்
ஹார்மோன் தாக்கங்கள்
சிறுநீர்த் தொற்று நோய்கள்
தவறான உணவுமுறைகள்
துரித உணவுகளை அதிகமாக சாப்பிடுவது
எண்ணெயில் பொரித்த உணவுகளை
அதிகம் உண்ணுதல்

ஆகிய காரணங்களினால் கிலேதம் என்னும் அழுக்கு சிறுநீரகங்களில் படியும்போது சிறுநீரகத்தில் இது கல்லாக உருவாகுகிறது.இன்றளவில் பல பெண்கள் தங்கள் பள்ளி, கல்லூரிகளில் அல்லது பணியிடங்களில் கழிப்பறையை அடிக்கடி பயன்படுத்த தயங்கி அதனால் நீர் அருந்துவதை குறைத்துக் கொண்டதால் இன்றைய பெண்களுக்கும் சிறுநீரகக் கற்கள் பிரச்னைகள் அதிகமாகத்தான் உள்ளது.

மேலும், பின்வரும் ஆபத்துக் காரணிகள் சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன.உடல் பருமன் – அதிக உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ) மற்றும் எடை அதிகரிப்பு ஆகியவை சிறுநீரகக் கற்கள் அதிகரிக்கும் அபாயத்துடன் நேரடி தொடர்பைக் கொண்டுள்ளன.குடும்ப வரலாறு – குடும்பத்தில் இந்த நோயின் வரலாறு இருந்தால், சிறுநீரகக் கற்கள் வர அதிக வாய்ப்புள்ளது. நீரிழிப்பு மற்றும் போதுமான தண்ணீர் குடிக்காதது மற்றும் சூடான காலநிலை சிறுநீரகக் கற்கள் அபாயத்தை அதிகரிக்கிறது.

உணவுக்காரணிகள் – உணவில் அதிகபுரதம், அதிக சோடியம் ( உப்பு) மற்றும் அதிக சர்க்கரை ஆகியவை சிறுநீரக கற்களின் அபாயத்தை அதிகரிக்கலாம்.செரிமான நோய்கள் மற்றும் அறுவை சிகிச்சை – இரைப்பை பைபாஸ் அறுவை சிகிச்சை மற்றும் நாள்பட்ட வயிற்றுப் போக்கு போன்ற சில அறுவை சிகிச்சைகள் கால்சியத்தை உறிஞ்சுவதை பாதிக்கலாம். இதனால் கல் உருவாவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.சிறுநீரகக்குழாய் அமிலத்தன்மை, சிறுநீர்பாதை நோய்த் தொற்றுகள் மற்றும் சிஸ்டினுரியா போன்ற பிற மருத்துவ நிலைகள் கல் உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கலாம்.

சிறுநீரகக் கற்களின் வகைகள்

நவீன மருத்துவத்தில் சிறுநீரகக் கற்களின் வகைப்பாடு, அதன் வேதியியல் அமைப்பு மற்றும் அவற்றின் உருவ அமைப்பை அடிப்படையாகக் கொண்டது. எனவே, பல்வேறு வகையான சிறுநீர்கற்கள் விவரிக்கப்பட்டுள்ளன. அதாவது கால்சியம் கற்கள். ஸ்ட்ருட்வைட் கற்கள், யூரிக் அமில கற்கள், சிஸ்டைன் கற்கள் மற்றும் கலப்பு கற்கள்.ஆயுர்வேதத்தின்படி அஷ்மரிநான்கு வகைகளாகும். அதாவது வாதிகம், பைதிகம், ஷ்லைஷ்மிகம், மற்றும் சுக்ராஜம்.

வாதிகம், பைதிகம், ஷ்லைஷ்மிகம் அஷ்மாரி ஆகியவை முறையே கால்சியம் ஆக்சலேட், யூரிக் அமிலம் மற்றும் கால்சியம் பாஸ்பேட் கற்களைப் போல் குறிக்குணங்களை ஏற்படுத்தும். சிறுநீரகக் கல் ஒரு முள் முனையின் அளவாக இருக்கலாம். மேலும் சிறுநீர் மூலம் கவனிக்கப்படாமலே வெளியில் போகலாம் அல்லது அது ஒரு திராட்சைப்பழத்தின் விகிதத்தில் பெரியதாக இருந்து. சிறுநீர்பாதையை அடைத்து, சித்திரவதை மற்றும் கசிவை ஏற்படுத்தி சிறுநீரின் வேகத்தை சீர்குலைக்கலாம்.

சிறுநீர் கற்கள் இருப்பதற்கான அறிகுறிகள்

சிறுநீர்ப்பை, விதைப்பை மற்றும் ஆண்குறியில் கடுமையான வலி.

அடர்த்தியான மற்றும் கொந்தளிப்பான சிறுநீர்.

கோமேதகம் (ஹெசோனைட் கல்) போன்ற சிறுநீரின் நாற்றம்

காய்ச்சல், உடல் வலி, பசியின்மை

குதித்தல், நீந்துதல், ஓடுதல், சவாரி செய்தல், நடப்பது போன்றவற்றால் அஷ்மரியின் வலி அதிகரிக்கிறது என்று ஆச்சார்யா சுஷ்ருதா விளக்குகிறார்.

மேலும்

சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல்

இடுப்பு முதல் சிறுநீர் பாதை வரை வலி

சிறுநீர் கழிக்கும்போது அல்லது கழித்து முடித்த பிறகு வலது அல்லது இடது அடிவயிறு பகுதியில் வலி

இது சமயங்களில் பின்புறத்திலிருந்து முன்னோக்கி பரவும் வலி

மஞ்சள் அல்லது சிவப்பு மஞ்சள் நிற சிறுநீர்

சிறுநீர் கழிப்பதில் சிரமம்

சிறுநீருடன் ரத்தம் வெளியேறுதல்

சிறுநீர் வெளியேறும்போது ஆட்டுச் சிறுநீர் போலக் கெட்ட நாற்றம் வீசுவது.

உடல் சோர்வு

தலைவலி

சுவையின்மை

வாந்தி

குளிர்க்காய்ச்சல்

இவையெல்லாம் சிறுநீரகத்தில்கல் இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும். இந்த அறிகுறிகளை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்துவிட்டால் சிகிச்சை அளிப்பது எளிதாகும். மற்றும் நோய் தீவிரமடைவதை தடுக்க முடியும்.

சிகிச்சை

பொதுவாக சிறுநீரகக் கற்களுக்கு அறுவை சிகிச்சைகளோ, லேசர் சிகிச்சையோ பரிந்துரைக்கப்பட்டாலும் கூட அவ்வாறு அறுவை சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் மீண்டும் மீண்டும் கற்கள் உருவாவதற்கு 50 சதவிகிதத்திற்கு மேல் வாய்ப்புகள் இருப்பதாக பல மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.இந்த சந்தர்ப்பத்தில், ஆயுர்வேத வைத்தியம் மற்றும் சிகிச்சை செய்வதன் மூலம் கற்கள் மீண்டும் வருவதற்கான வாய்ப்புகளை பெரிதும் தவிர்க்கலாம். சிறுநீர்க் கற்களுக்கான ஆயுர்வேத சிகிச்சை, கற்களை நிரந்தரமாக நீக்கும் தன்மையுடையது சிறுநீரகக்கற்களை எளிதாக நீக்குவது மட்டுமல்லாது கற்கள் மீண்டும் உருவாகாமல் தடுக்கவும் வல்லது.

ஆயுர்வேத மேலாண்மை

சிறுநீரகக் கற்களுக்கான மருந்துகள் மற்றும் அறுவைசிகிச்சை முறை பற்றி சுஷ்ருத சம்ஹிதா மற்றும் அஷ்டாங்க ஹிருதயம் போன்ற பழமையான ஆயுர்வேத புத்தகங்களில் தெளிவாக மற்றும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.ஆயுர்வேத வைத்தியம் மற்றும் பஞ்சகர்ம சிகிச்சை மூலம் சிறு நீரகக்கற்களை 95 சதவீதத்துக்கும் அதிகமாக அறுவை சிகிச்சையின்றி உடைத்து வெளியேற்றலாம். பஞ்சகர்மா என்பது ஒரு நேர்த்தியான சுத்திகரிப்பு செயல்முறையாகும். இது உடலில் தேங்கிய நச்சுகளை வெளியேற்றுவதுடன் உடலின் உள்ளார்ந்த குணப்படுத்தும் திறனையும்
மீட்டெடுக்கிறது.

சிறுநீரகக் கற்கள் உருவாகும் காரணத்தை அறிந்து அதற்கான காரணங்களை தவிர்க்க ஆயுர்வேதம் முதலில் அறிவுரைக்கின்றது.தோஷங்களின் ஏற்றத்தாழ்வுகளுக்கு ஏற்ப தொடர்ச்சியான சுத்திகரிப்பு, சிறுநீர்ப்பை மற்றும் குடல் வரை எனிமாக்கள் போன்றவற்றை உள்ளடக்கிய தனிப்பயனாக்கப்பட்ட பஞ்சகர்மா சிகிச்சைகளை திட்டமிடுவது பற்றிய ஆலோசனையைப் பெற தகுதி வாய்ந்த ஆயுர்வேத மருத்துவரை அணுகலாம்.

ஆயுர்வேத மூலிகைகள் மற்றும் மருந்துகள்

சிறுநீரக கற்களுக்கான ஆயுர்வேத சிகிச்சையானது தாவர அடிப்படையிலான மருத்துவம், உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளை உள்ளடக்கியது. சிறுநீரின் உயிர்வேதியியல் தரத்தை மாற்றுவது கற்களின் சிகிச்சைக்கும் கற்கள் வராமல் தடுப்பதற்கும் உதவுகிறது. மேலும், ஆயுர்வேதத்தில் பல மூலிகைகள் கற்களை உடைக்கவும் அவற்றை வெளியேற்றவும் உதவுகின்றன. ஆயுர்வேத நூல்களில் சிறுநீரக கற்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக முத்ராவிரேச்சனியம் (டையூரிடிக்) அஷ்மரிக்னம் (வித்தோட்ரிப்டிக்) மற்றும் க்ஷார கர்மம் (கார சிகிச்சை) ஆகிய மூன்று வகையான மருந்துகள் முக்கியமாக குறிப்பிடப்பட்டுள்ளன.

சிறுநீரக கற்களுக்கான ஆயுர்வேத மூலிகைகள்

மூக்கிரட்டை (புனர்னவம்), வருணம் (மாவிலங்கப்பட்டை), முருங்கை (ஷிக்ரு), கல்கரைச்சி (பாஷானபேதம்), பூசணி (குஷ்மாண்டம்) விதைகள், கண்டங்கத்திரி (கந்த்காரி), மகிழம்பூ (பாகுல்), மல்லிகை, கொத்துமல்லி ஆகிய மூலிகைகள் சிறுநீரக கற்களை வெளியேற்ற பெரிதும் உதவுகின்றன.நெருஞ்சில் மற்றும் சுக்கு கஷாயம் செய்து குடித்து வர சிறுநீர் கழிக்கும்போது உண்டாகும் வலி குணமடையும்.

வெள்ளரி விதையை அரைத்து 10 கிராம் அளவு எடுத்து அதை இந்துப்பு சேர்த்து கஞ்சியில் சாப்பிடலாம். வாழைத்தண்டு மற்றும் முள்ளங்கிச்சாறு தலா100 மி.கி. எடுத்து இரண்டையும் ஒன்றாக கலந்தோ தனித்தனியாகவோ தொடர்ந்து சாப்பிட்டு வர சுண்ணாம்புக் கற்கள் வேகமாக கரையும்.பார்லி வேக வைத்த தண்ணீரை குடித்து வந்தால் அதிக சிறுநீர் வெளியேறி சிறுநீரகத்தில் உப்பு சேர்வது தடுக்கப்படும். தினசரி இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.

கோடைக்காலத்தில் வாரம் இரண்டுமுறை இளநீர் குடித்து வருவது சிறுநீரகக் கற்கள் வராமல் தடுப்பதற்கு உதவும்.வாழைப்பூ, வாழைத்தண்டு போன்ற நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.முக்கிரட்டைக் கீரை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

தொகுப்பு: உஷா நாராயணன்

The post சிறுநீரகக் கற்களுக்கு ஆயுர்வேதத் தீர்வு! appeared first on Dinakaran.

Tags : Kumkum ,Dinakaran ,
× RELATED தர்பூசணியின் நன்மைகள்!