×

திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்த வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவு!!

சென்னை: திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்த வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணைய விதிகளின்படி தேர்தல் விளம்பரங்களுக்கு அனைத்து கட்சிகளும் தேர்தல் ஆணையத்திடம் முன் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அனுமதி கேட்கும் விளம்பரங்கள் தொடர்பான விண்ணப்பங்களை இரண்டு நாட்களில் பரிசீலித்து அனுமதி தர வேண்டும் என்று விதி உள்ளது. மக்களவை தேர்தலை ஒட்டி “இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன்” என்ற தலைப்பில், திமுக சார்பில் விளம்பரங்கள் வெளியிடப்படுகிறது. திமுகவின் தேர்தல் விளம்பரங்கள் சிலவற்றுக்கு அற்ப காரணங்களை கூறி தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்துள்ளது எனக்கூறி, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

திமுக விளம்பரங்களுக்கு முன் அனுமதி அளிப்பதில் தேர்தல் ஆணையம் ஆறு நாட்கள் வரை கால தாமதம் செய்து வருகிறது. தேர்தல் ஆணையம் நியாயமாகவும் நேர்மையாகவும் செயல்பட வேண்டும். திமுகவின் விளம்பரங்கள் தொடர்பான முன் அனுமதி விண்ணப்பங்களை நிராகரித்த தமிழக தேர்தல் அதிகாரியின் உத்தரவுகளை ரத்து செய்து, விளம்பரங்களை அனுமதிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி மறுக்கும் மாநில அளவிலான குழுவின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தான் வழக்கு தொடர முடியும் என்ற விதிமுறை முந்தைய தேர்தல்களில் பின்பற்றப்பட்டதா என்று ஏப்ரல் 17ம் தேதி விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்.எஸ். பாரதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் விளம்பரங்களை முறைப்படுத்துவதற்கு எந்த விதிகளும் இல்லை என்று சொல்லி தான் தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி மறுத்த உத்தரவுகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும் என்று 2004ம் ஆண்டு உச்சநீதிமன்றம் இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்து இருந்தது. 2004ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உச்சநீதிமன்ற உத்தரவு தற்போது அமலில் இல்லை,”இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து தேர்தல் ஆணையம் தரப்பில், கேபிள் டிவி ஒழுங்குமுறை சட்ட விதிகளின்படி, தேர்தல் விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. மேலும் தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி மறுத்த உத்தரவுகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்,”என்று சுட்டிக் காட்டப்பட்டது. 2004ம் ஆண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றும் மறு உத்தரவு வரும் வரை உத்தரவு நீடிக்கும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்ததையும் தேர்தல் ஆணையம் கூறியது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் நகலை நாளை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

The post திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்த வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவு!! appeared first on Dinakaran.

Tags : Election Commission ,DMK ,CHENNAI ,High Court ,Dinakaran ,
× RELATED திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு...