×

தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளதால் அரசியல் தலைவர்களின் பதிவுகளை நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

புதுடெல்லி: தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய சில அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களின் பதிவுகளை நீக்க எக்ஸ் தளத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. நாளை மறுநாள் முதல்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் நடைபெறவுள்ளது. ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவுகள் நடைபெறவுள்ளன. ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், அதுவரை நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்.

இந்நிலையில், பிரபல சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை குறிப்பிட்டு, தேர்தல் நடத்தை மீறியுள்ளதால் அதனை நீக்குமாறு எக்ஸ் நிர்வாகத்துக்கு தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்ட இரண்டு பதிவுகளையும், ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீகார் துணை முதல்வர் சம்ராத் செளத்ரி ஆகியோரின் இரண்டு பதிவுகளை நீக்கக் கோரி, ஏப்ரல் 2 மற்றும் 3ம் தேதிகளில் எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியுள்ளது.

அதில், தேர்தல் நடத்தை விதிமுறை பகுதி 1-ஐ மீறி குறிப்பிட்ட 4 பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளதால் அதனை உடனடியாக நீக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த பதிவுகளை நீக்கவில்லை என்றால் எக்ஸ் தளத்தின் மீது தன்னார்வ நெறிமுறைகளை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, நான்கு பதிவுகளையும் தேர்தல் முடியும் வரை இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ள எக்ஸ் நிர்வாகம், தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவில் உடன்பாடு இல்லை என்றும், வெளிப்படைத்தன்மை கருதி ஆணையத்தின் உத்தரவுகளை பொதுவெளியில் வெளியிடுவதாகவும் தெரிவித்துள்ளது.

The post தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளதால் அரசியல் தலைவர்களின் பதிவுகளை நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Election Commission ,New Delhi ,Election Commission of India ,Lok ,Sabha ,Dinakaran ,
× RELATED மதம், சாதி அடிப்படையில் பிரிவினையை...