×

மீனவருக்கு அளித்த வாக்குறுதிகளை பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை: திமுக குற்றச்சாட்டு

சென்னை: மோடி உறுதி அளித்து 10 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் மீனவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன என திமுக குற்றம் சாடியுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; அ.தி.மு.க. ஆட்சியில் சென்னை கடற்கரையிலும், தூத்துக்குடியிலும் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். ராமநாதபுரம் கூட்டத்தில் இலங்கையால் மீனவர்கள் தாக்கப்படாமல் பாதுகாப்பேன் என வாக்குறுதி அளித்த மோடி- எதையும் செய்யவில்லை. மீன்பிடி குறைவு காலத்திற்கான சிறப்பு உதவி தொகை ரூ.5,000 என்பது ரூ.6,000 ஆக உயர்ந்துள்ளது. 5, 51, 609 மீனவர் குடும்பங்களுக்கு ரூ.331 கோடி வழங்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மீனவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் விவசாயம் நெசவு தொழில்களுக்கு அடுத்தப் படியாக பாரம்பரிய தொழிலாக மீன்பிடித் தொழில் அமைந்துள்ளது. இந்த மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு துன்பத் துயரங்களை ஏற்றுப் புயல் மழை காலங்களில் பாதிப்புகளுக்கு ஆளாகி வரும் மீனவர்களைக் காப்பதில் திராவிட முன்னேற்றக் கழக அரசு தொடக்க காலத்திலிருந்து சிறப்புக் கவனம் செலுத்தி வந்துள்ளது. 1989-ல் மீனவ சமுதாய மக்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்து மீனவ சமுதாய இளைஞர்கள் உயர் கல்வி கற்று வேலை வாய்ப்புகள் பெற வழி வகுக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு ஒரு துன்பம் என்றால் அது தமக்கு வந்த துன்பம் எனக் கருதி திமுக அரசு பல்வேறு வகையில் அவர்கள் நலம் காத்துள்ளது. 2003ம் ஆண்டில் அதிமுக ஆட்சிக் காலத்தில் சென்னை கடற்கரையை தூய்மைப்படுத்துகிறோம் எனும் பெயரில் மீனவர்களின் படகுகளைக் குப்பை லாரியில் அள்ளிக் கொட்டும் கொடுமை கண்டு கொதித்தெழுந்த மீனவர்கள் அதைத் தடுக்க முனைந்தபோது அன்றைய அதிமுக அரசு துப்பாக்கியால் சுட்டத்தில் 9 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அதேபோல தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் அல்லவா அந்தத் துப்பாக்கி சூடு தொடர்பாக தொலைக்காட்சியைப் பார்த்துத் தான் தெரிந்து கொண்டேன் என்று பொறுப்பற்ற முதலமைச்சராக பழனிச்சாமி கூறினார்களே, அந்தத் துப்பாக்கி சூட்டில் இறந்த 13 பேரில் 4 பேர் மீனவர்கள்.

2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் இராமநாதபுரம் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மோடி இலங்கையால் மீனவர்கள் தாக்கப்படுவதை தடுப்பதற்கு இந்தியாவில் என்னைப்போல் துணிச்சலான பிரதமர் ஒருவர் இல்லை. நான் பிரதமரானால் தமிழ்நாட்டு மீனவர்களை பாதுகாப்பேன் என்றார். அவர் சொல்லி 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்போது தாக்கப்பட்டதைவிட 10 ஆண்டு காலத்தில் மீனவர்கள் அதிகமாக தாக்கப்பபட்டு, அவர்கள் உடைமைகள் எல்லாம்சிறைபிடிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன. ஒருவார்த்தை கூட இலங்கையைக் கண்டித்து தமிழ்நாட்டு மீனவர்களைக் காக்க ஒரு சிறு துரும்பைக்கூட அசைக்கவில்லை மோடி.

இப்படி மீனவர்கள் சுட்டுக் கொன்ற அ.திமு.க போல் அல்லாமல் – மீனவர்களைக் காப்பேன் என்று வாய்ஜாலாம் காட்டிய மோடியைப் போல் அல்லாமல், மீனவச் சமுதாயத்தின் நலன் காப்பதில் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய ஆட்சியில் எப்போதும் முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பயனாகத்தான் மீன் வளர்ச்சித்துறை என்பதை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை என்று இந்த திராவிட மாடல் அரசு பெயர் சூட்டி மீனவர் நலன் காப்பதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. 2021-இல் ஆட்சிப் பெறுப்பேற்ற பிறகு இந்த அரசு மீனவர் நலன்களுக்காக நிறைவேற்றிய முக்கியமான பணிகள் சில;

* மீன்பிடிக்கச் சென்று இலங்கை அரசால் பிடிக்கப்பட்டு பல்வேறு கடற்படைத் தளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 129 விசைப்படகு உரிமையாளர்களுக்கும் 26 நாட்டு படகு உரிமையாளர்களுக்கு தலா 1.50 லட்சம் ரூபாய் என மொத்தம் ‘ரூ.6 கோடியே 84 இலட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.

* மீன்பிடிக்க சென்று காணாமல் போகும் மீனவர்களின் குடும்பத்திற்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூ.250 என்பது ரூ.350 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

* காப்பீடு இல்லதாத காலத்தில் மீன் பிடிக்கச் சென்று உயிர் இழந்த 205 மீனவர் குடும்பங்களுக்கு விபத்து காப்பீடு நிவாரணத் தொகை தலா ரூபாய் 2 இலட்சம் வீதம் 172 மீனவர்களின் குடும்பங்களுக்கும், நிரந்தர ஊனமடைந்த ஒரு மீனவருக்கு ரூபாய் 1 லட்சமும் ஆக ரூபாய் 3 கோடியே 45 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.

* 2016 முதல் 2021 வரை அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மீன்பிடிக்கச் சென்று விபத்தில் சிக்கி இறந்த குடும்பங்களுக்கு வழங்கப்படாமல் இருந்த நிவாரணத் தொகை தலா ரூபாய் 2 லட்சம் வீதம் 25 மீனவ குடும்பங்களுக்கு 2023-இல் ரூபாய் 50 லட்சம் வழங்கப்பட்டது.

* இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதி உயிரிழந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்கிரண் குடும்பத்திற்கு ரூபாய் 1 இலட்சம் நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டது.

* இந்திய கடற்படை ரோந்து பணியின் போது துப்பாக்கியால் சுட்டத்தில் காயமடைந்த 6 மீனவர்களுக்கு நிவாரணமாக ரூபாய் 1 இலட்சத்து 20 ஆயிரம் வழங்கப்பட்டது.

* அதேபோல, ரோந்து படை துப்பாக்கியால் சுட்டதில் படுகாயமடைந்த மயிலாடுதுறை மாவட்ட மீனவர் திரு.வீரவேல் என்பவருக்கு ரூபாய் 2 இலட்சம் நிவாரணமாக வழங்கப்பட்டது.

* இந்தோனிசிய கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டு 20.5.2022 அன்று சிறையில் மரணமடைந்த குமரி மாவட்ட மீனவர் ஜெசின்தாஸ் குடும்பத்திற்கு ரூபாய் 3 இலட்சம் நிவாரணமாக வழங்கப்பட்டது.

* நாகை மாவட்டம் கீச்சாம் குப்பம் கிராமத்தை சேர்ந்த மீனவர் முகிந்தன் மீன்பிடிக்க சென்று படகு கவிழ்ந்து மூழ்கி உயிரிழந்தார் அவர் குடும்பத்திற்கு ரூபாய் 1 இலட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.

* அதேபோல மஸ்கட் நாட்டில் ஆழ்கடலில் மீன்பிடித்தப்பொழுது கடலில் தவறி விழுந்து மரணமடைந்த குமரி மாவட்ட ஏழுதேசம் கிராமத்தை சேர்ந்த லிறன்ஷோ, என்பவர் குடும்பத்திற்கு ரூபாய் 2 இலட்சம் நிவாரணமாக வழங்கப்பட்டது.

* தமிழ்நாடு மீனவ இளைஞர்கள் ஐ.ஏ.எஸ். தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான 6 மாத சிறப்பு பயிற்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 2 இலட்சத்து 93 ஆயிரம் செலவில் 26 மீனவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

* 2021-இல் இந்த ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை ரூ. 5 லட்சம் என்பது ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டது. இதுவரை 3 அண்டுகளில் 4 லட்சத்து 69 ஆயிரத்து 230 மீனவ குடும்பங்களுக்கு 258 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது.

* மீன்பிடி குறைவு காலத்திற்கான சிறப்பு உதவி தொகை ரூபாய் 5 ஆயிரம் என்பது ரூபாய் 6 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டு 5 லட்சத்து 51 ஆயிரத்து 609 மீனவர் குடும்பங்களுக்கு ரூபாய் 331 கோடி வழங்கப்பட்டுள்ளது.

* தேசிய கடல் மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டம் 2022 – 2023ம் ஆண்டு முதல் மாநில அரசு திட்டமாக ஏற்கப்பட்டு ரூபாய் 6 இலட்சத்து 18 ஆயிரத்து 760 மீனவர்களுக்கு 187 கோடி ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

* தமிழ்நாடு கடல் மீனவ மகளிர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டத்தின் கீழ் ரூபாய் 191 கோடியே 6 லட்சத்து 92 ஆயிரம் மீனவர்களுக்கு நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது.

* பாரம்பரிய மீன்பிடிக் கலன்களை இயந்திரமாக்கும் திட்டத்தின் கீழ் 3,591 வெளிப் பொருத்தும் இயந்திரங்களுக்கு 40 விழுக்காடு மானியத்தில் ரூபாய் 22 கோடி மதிப்பீட்டில் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.
மீன்பிடி துறைமுகங்களில் உட்கட்டமைப்பு வசதிகள்

* நாகை மீன்பிடி துறைமுகத்தில் கூடுத்ல் படகு அனையும் தளம், படகு பழுது பார்க்கும் தளம் போன்ற கட்டமைப்பு வசதிகள் 81 கோடி ஒதுக்கீட்டில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

* திருவள்ளூர் மாவட்டம் அரங்கங்குப்பம், கூனங்குப்பம் , தாழங்குப்பம், நெட்டுகுப்பம், குமரி மாவட்டம் குளைச்சல் மீன்பிடி துறைமுகம் ஆகியவற்றை தூர் வாரி ஆழப்படுத்தி சீரமைக்கும் பணிகள் 30 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகின்றன.

* குமரி மாவட்டம் விவேகானந்தர் பாறை படகு நிறுத்தம் முனையத்தில் கூடுதல் படகு அனையும் தளம் அமைக்கும் பணி ரூபாய் 7 கோடி செலவில் நடைபெற்று வருகின்றன.

* ராமேஸ்வரம், தங்கச்சிமடம், மீன்பிடி துறைமுகம் அமைக்க ரூபாய் 20 லட்சம் செலவில் ஆய்வுப் பணிகளும் பாம்பன் வடக்கு மீனவர் கிராமத்தில் தூண்டில் வளைவு அமைக்க ரூபாய் 20 லட்சம் செலவில் ஆய்வுப்பணிகள் குந்தக்கால் மீன் இறங்கு தளத்தில் அலைத் தடுப்பு சுவர் அமைக்க ரூபாய் 50 லட்சம் செலவில் ஆய்வுப் பணிகள் என மொத்தம் ரூபாய் 90 லட்சம் செலவில் பணிகள் தொடங்கப்படவுள்ளன.

* தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகம் சார்பில் வரி விலக்க அளிக்கப்பட்ட 1 இலட்சத்து 53 ஆயிரத்து 556 கிலோ லிட்டர் உயர் வேக டீசல் எரி எண்ணெய் , மானிய விலையில் 3,647 கடல் மீனவர்களுக்கு 19,869 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டுள்ளது.

* 2,404 நாட்டு படகுகளுக்கு 14 மண்ணெண்ணெய் விற்பனை நிலையங்கள் மூலம் 19 ஆயிரத்து 320 கிலோ லிட்டர் மண்ணென்ணெய் ரூபாய் 95 கோடி மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது.

* 4,348 மீன்படி விசைப்படகுகளுக்கு 762 நாட்டு படகுகளுக்கும் மொத்தம் 67,917 கிலோ லிட்டர் டீசல் மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளது.

* தமிழ்நாடு மீனவர் நலவாரியத்தின் மூலம் 12,312 நல வாரிய உறுப்பினர்களுக்கு 16 கோடியே 9 லட்சம் ரூபாய் உதவித் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன.

மீனவர் வீட்டு வசதித் திட்டம்
* 1975-ம் ஆண்டில் மீனவர்களுக்கு வீட்டுவசதித் திட்டத்தைக் கொண்டு வந்த தி.மு.க. அரசு அத்திட்டத்திற்கு மீனவர்குல மாமேதை சிங்காரவேலர் வீட்டுவசதித்திட்டம் என பெயர் சூட்டிப் பெருமைபடுத்தியது.

* சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சிங்காரவேலர் மாளிகை என பெயர் சூட்டி அதன் முகப்பில் சிங்காரவேலருக்குச் சிலை அமைத்து சிறப்புகள் செய்துள்ளது. இப்படி மீனவச் சமுதாயத்திற்கு என்றும் நலன் காக்கும் கவசமாக திகழ்கிறது தி.மு.க. அரசு. இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

 

The post மீனவருக்கு அளித்த வாக்குறுதிகளை பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை: திமுக குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Chennai ,Modi ,M. ,K. ,Tuthukudi ,Ramanathapuram ,Dimuka ,Dinakaran ,
× RELATED பிரதமர் மோடி அள்ளி வீசி வரும் பொய்...