×

புழல் ஏரி உபநீர் மதகு அருகே ரூ.9 கோடி மதிப்பில் கான்கிரீட் தடுப்பு சுவர்: மழை காலத்திற்குள் பணிகளை முடிக்க திட்டம்

 

புழல்: புழல் ஏரி உபரிநீர் கால்வாய் மதகு அருகே ரூ.9 கோடி மதிப்பில் கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடியாக உள்ளது. மழைக் காலங்களில் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டி தண்ணீர் நிரம்பி வழியும்போது ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படும்.

அப்போது, மதகு வழியாக கால்வாய் மூலம் வெளியேறும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். அத்தகைய நேரங்களில் ஆர்ப்பரித்துச் செல்லும் வெள்ள நீர் திடீரென்று குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துவிடும். இதனால் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் ஏரி நிரம்பி வழியும்போது அப்பகுதி மக்கள் மழைநீர் வெள்ளத்தில் சிக்கித் தவித்து வந்தனர். இதுதொடர்பாக தமிழ்நாடு நீர்வளத்துறை அதிகாரிகள் புழல் ஏரி உபரிநீர் வெளியேறும் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, உபரிநீர் செல்லும் கால்வாய் மதகு அருகே தடுப்புச் சுவர் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டனர். அதற்கான ஆய்வுப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு திட்டமிடல் பணிகளும் நிறைவடைந்தது. மேலும், புழல் ஏரி உபரிநீர் கால்வாய் மதகு அருகே தடுப்பு சுவர்கள் அமைக்க ரூ.9 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் புழல் ஏரி உபரிநீர் செல்லும் மதகு அருகே சுமார் 300 மீட்டர் நீளத்தில், 12 அடி உயரத்தில் கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகள் வரும் பருவமழை காலத்திற்குள் முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post புழல் ஏரி உபநீர் மதகு அருகே ரூ.9 கோடி மதிப்பில் கான்கிரீட் தடுப்பு சுவர்: மழை காலத்திற்குள் பணிகளை முடிக்க திட்டம் appeared first on Dinakaran.

Tags : Puzhal Lake ,Puzhal ,Chennai ,
× RELATED புழல் ஏரி உபநீர் மதகு அருகே ரூ.9 கோடி...