×

நாட்டின் கடைக்கோடி மக்களவை தொகுதி: கன்னியாகுமரியில் கரை சேரப்போவது யார்?

இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள இந்த மக்களவை தொகுதி, மாநில கட்சிகளைவிட தேசிய கட்சிகளின் ஆதிக்கம் கோலோச்சும் பகுதியாக உள்ளது. மீன்பிடி தொழிலும், ரப்பர் உற்பத்தியும் மாவட்டத்தின் பொருளாதாரத்தை மீட்கும் சக்தியாக விளங்குகின்றன. வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். தமிழ்நாட்டில் 100 சதவீதம் எழுத்தறிவு பெற்ற மாவட்டம், சிறுபான்மையினர் ஏறக்குறைய 50 சதவீதம் வாழும் மாவட்டம். தொகுதிகள் மறுவரையறைக்கு முன்பு இருந்த நாகர்கோவிலும், அதன் பின்னர் பெயர் மாற்றம் பெற்ற கன்னியாகுமரியும் தேசிய கட்சிகளுக்கு சாதகமாகவே அமைந்துள்ளது.

காங்கிரஸ் அதிக முறை வென்ற தொகுதி. பாஜவும், மார்க்சிஸ்ட்டும், திமுகவும் இங்கு வென்றுள்ளன. கடந்த 2019ல் நடந்த பொதுத்தேர்தலில் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட எச்.வசந்தகுமார் வெற்றிபெற்றார். 2020ல் அவரது மறைவை தொடர்ந்து 2021ல் இடைத்தேர்தலை சந்தித்தது கன்னியாகுமரி. அப்போது அவரது மகன் விஜய்வசந்த் போட்டியிட்டு 1 லட்சத்து 37 ஆயிரத்து 950 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். விஜய் வசந்த், குமரி மாவட்டத்தில் கிடப்பில் போடப்பட்ட 4 வழி சாலை திட்டத்திற்கு மீண்டும் உயிர்கொடுத்து ரூ.1041கோடி நிதி ஒதுக்கீடு பெற்று திட்டத்தை செயல்படுத்த முக்கிய காரணமாக விளங்கினார்.

அதேபோல், கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இரட்டை ரயில்பாதை திட்ட பணிகளை வேகப்படுத்தியது, வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தியது உட்பட பல நலத்திட்டங்களை அவர் திறம்பட செய்து முடித்துள்ளார். இதுதவிர, அணுகுவதற்கு எளிமையானவர். தனது தந்தை விட்டு சென்ற பணிகளை தொடர குறைந்த காலமே தனக்கு கிடைத்தது என்பதன் அடிப்படையில் முழுமையான எம்.பி.யாக வாய்ப்பு கேட்டு மீண்டும் கன்னியாகுமரி மக்களவை தேர்தல் களத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். அதேபோல், பாஜ சார்பில் முன்னாள் ஒன்றிய இணை அமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் களத்தில் உள்ளார்.

பாஜ ஆட்சி காலத்தில் மட்டுமே மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளது, வளர்ச்சியை விரும்பும் மக்கள் தனக்கு வாக்களிக்க வேண்டும் என்பது அவரது பிரசாரங்களில் முன்வைக்கும் கருத்தாக உள்ளது. மேலும், அதிமுக சார்பில் பசிலியான் நசரேத், நாம் தமிழர் கட்சி சார்பில் மரிய ஜெனிபர் உட்பட 22 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மூன்றாண்டுகளில் மீண்டும் மக்களவைக்கு உறுப்பினரை தேர்வு செய்ய கன்னியாகுமரி மக்கள் தயாராகியுள்ளனர். வாக்கு வங்கிகளை குறி வைத்து வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும், வேட்பாளர்களின் வாக்குறுதிகளும் மக்களிடம் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பது ஏப்ரல் 19ம் தேதி மக்கள் அளிக்கின்ற வாக்குகளின் மூலம் ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகளில் தெரிந்துவிடும்.

தொகுதி வாக்காளர்
எண்ணிக்கை
பாலினம் வாக்காளர்கள்
ஆண் 7,76,127
பெண் 7,78,834
3ம் பாலினம் 135
மொத்தம் 15,55,096

சட்டமன்ற தொகுதிகள் யார் வசம்?
தொகுதி உறுப்பினர்கள்
கன்னியாகுமரி என்.தளவாய்சுந்தரம் (அதிமுக)
நாகர்கோவில் எம்.ஆர்.காந்தி (பாஜ)
குளச்சல் ஜே.ஜி.பிரின்ஸ் (காங்கிரஸ்)
பத்மநாபபுரம் டி.மனோதங்கராஜ் (திமுக)
விளவங்கோடு காலியிடம்(முன்பு காங்.)
கிள்ளியூர் எஸ்.ராஜேஷ்குமார் (காங்கிரஸ்)

2021 இடைத்தேர்தல் (மக்களவை) நிலவரம்
வேட்பாளர் கட்சி வாக்குகள் சதவீதம்
விஜய்வசந்த் காங்கிரஸ் 5,76,037 52.33%
பொன்.ராதாகிருஷ்ணன் பாஜ 4,38,087 40.10%
அனிட்டர் ஆல்வின் நாதக 58,593 5.36%
சுபா சார்லஸ் மநீம 8,536 0.78%

தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பு
நாகர்கோவிலில் வென்றவர்கள்
ஆண்டு வென்றவர் கட்சி
1951 ஏ.நேசமணி காங்கிரஸ்
1957 பி.தாணுலிங்க நாடார் காங்கிரஸ்
1962 ஏ.நேசமணி காங்கிரஸ்
1967 ஏ.நேசமணி காங்கிரஸ்
1969 காமராஜர் காங்கிரஸ்
1971 காமராஜர் காங்கிரஸ்
1977 குமரி அனந்தன் ஸ்தாபன
காங்கிரஸ்
1980 என்.டென்னிஸ் காங்கிரஸ்
1984 என்.டென்னிஸ் காங்கிரஸ்
1989 என்.டென்னிஸ் காங்கிரஸ்
1991 என்.டென்னிஸ் காங்கிரஸ்
1996 என்.டென்னிஸ் தமாகா
1998 என்.டென்னிஸ் தமாகா
1999 பொன்.ராதாகிருஷ்ணன் பாஜ
2004 ஏ.வி.பெல்லார்மின் மார்க்சிஸ்ட்
தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர்
‘கன்னியாகுமரி’யில் வென்றவர்கள்
2009 ஜெ.ஹெலன் டேவிட்சன் திமுக
2014 பொன்.ராதாகிருஷ்ணன் பாஜ
2019 எச்.வசந்தகுமார் காங்கிரஸ்
2021 விஜய்வசந்த்
(இடைத்தேர்தல்) காங்கிரஸ்

* விளவங்கோடு இடைத்தேர்தல்
கன்னியாகுமரி நாடாளுமன்ற தேர்தலுடன், விளவங்கோடு இடைத்தேர்தலும் நடத்தப்பட உள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றான விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாக இருந்த விஜயதரணி பாஜவில் இணைந்ததன் காரணமாக இங்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் தாரகை கத்பர்ட், பாஜக சார்பில் நந்தினி, அதிமுக சார்பில் ராணி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெமினி உட்பட 10 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதுவரை நடந்த விளவங்கோடு சட்டமன்ற தேர்தலில் 10 முறை காங்கிரஸ், 5 முறை மாக்சிஸ்ட் கட்சி வெற்றியை பதிவு செய்துள்ளன. மேலும், பாஜவுக்கும் இந்த தொகுதியில் தனிப்பட்ட செல்வாக்கு இருப்பதால் காங்கிரஸ் மற்றும் பாஜ இடையே கடும் போட்டி நிலவும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

The post நாட்டின் கடைக்கோடி மக்களவை தொகுதி: கன்னியாகுமரியில் கரை சேரப்போவது யார்? appeared first on Dinakaran.

Tags : Kadakodi ,Lok Sabha ,Kanyakumari ,southern ,of ,India ,
× RELATED மக்களவைத் தேர்தல்: உண்மையான...