×

மாறும் மாதவிடாய் சுழற்சி…

நன்றி குங்குமம் தோழி

மாற்றலாம் இப்படி!

கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்

நம் அம்மா, பாட்டி என யாரிடம் மாதவிடாய் ரத்தப்போக்கு பற்றி கேட்டாலும் ‘ஒவ்வொரு மாதமும் தவறாமல் மூன்று நாட்கள் சீராய் வரும்’ என மட்டுமே சொல்வார்கள். ஆனால், இப்போது பத்தில் மூன்று பெண்களுக்குதான் சரியான முறையில் மாதவிடாய் சுழற்சி நிகழ்கிறது. மாதா மாதம் இதனால் பிரச்னை ஏற்படுவது மட்டுமல்லாமல், கருத்தரிப்பிலும் சிக்கல்களை உருவாக்குகின்றது. எனவே, மாதவிடாய் சுழற்சி முறை குறித்தும், அதற்கும் இயன்முறை மருத்துவத்திற்கும் என்ன தொடர்பு என்பது பற்றியும் இங்கே தெரிந்துகொள்வோம்.

மாதவிடாய் சுழற்சி…

*மாதா மாதம் ஒன்று அல்லது இரண்டு கருமுட்டை சினைப்பையில் இருந்து முதிர்ந்து வெளியே கருப்பைக்கு வந்து சேரும். அவ்வாறு வந்து சேரும் கருமுட்டை விந்தணுவுடன் சேர்ந்தால் கருத்தரிப்பு உண்டாகும். இல்லையெனில் உதிரப்போக்குடனும், கருப்பை உட்சுவர் திசுக்களுடனும் வெளியே வரும். இதனையே மாதவிடாய் என சொல்கிறோம். இந்த செயல்பாடுகள் நிகழ 28 நாட்கள் ஆகும். இதுதான் ஒரு முழு சுழற்சி. ஆனால், இப்பொழுது 24 நாட்கள் முதல் 35 நாட்கள் வரையிலும் சராசரியான மாதவிடாய் என எடுத்துக் கொள்ளலாம்.

*சாதாரண மாதவிடாய் என்பது மூன்று முதல் ஏழு நாட்களுக்குள் அடங்கியதாகும்.

* ஒரு மாதவிடாய் உதிரப்போக்கில் 30 முதல் 80 மில்லி கிராம் அளவு மட்டுமே ரத்தம் வெளியேற வேண்டும். அதாவது, ஐந்து டேபிள் ஸ்பூன் அளவிற்கு ரத்தம் வெளியேற வேண்டும்.

ஹார்மோன்களின் முக்கியத்துவம்…

*இயல்பாகவே ஒவ்வொரு கட்ட மாதவிடாய் சுழற்சியிலும் ஹார்மோன்கள் ஏறுவதும், இறங்குவதுமாக இருக்கும். எனவே, தக்க நேரத்தில் சரியான அளவில் ஹார்மோன்கள் சுரந்தால் மட்டுமே மாதவிடாயை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

*கருமுட்டை முதிர்ந்து பெரிதாவதற்கும், அது தொடர்ந்து சினைப்பையில் இருந்து வெளியே வந்து கருப்பைக்கு வரவும் கர்ப்பப்பையில் விந்தணுவுடன் சேர்ந்து கர்ப்பப்பையின் உட்சுவரில் பதிவதற்கும், உட்சுவர் திசுக்கள் அடர்த்தியாக வளர செய்யவும் இவை எல்லாவற்றிற்கும் ஹார்மோன்கள் அவசியமாகிறது.

*ப்ரோஜெஸ்டிரோன்(Progesterone), ஈஸ்ட்ரோஜன்(Estrogen), க்ரோத் ஹார்மோன்(Growth hormone), ஃபாலிகுலார் ஸ்டிமியுலேட்டிங் ஹார்மோன் (Follicular Stimulating hormone) என இனப்பெருக்க உறுப்புக்கள் சார்ந்த ஹார்மோன்கள் அனைத்தும் இந்த 28 நாட்களில் சரியாக சுரந்தால் இனப்பெருக்க உறுப்புகளால் இயல்பாய் இயங்க முடியும்.

*மேலே சொன்ன ஹார்மோன்கள் மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி, சினைப்பை போன்ற உறுப்புகளில் இருந்து சுரக்க வேண்டும்.

*மூளையில் உள்ள ஹைப்போதலாமஸ், பிட்யூட்டரி மற்றும் சினைப்பை இந்த மூன்று உறுப்புகளும் ஒருங்கே சேர்ந்து இயங்குகிற தொடர்புடையது. இதுவே இனப்பெருக்க உறுப்புகளை சரியாக இயங்க உதவுகிறது. இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டது என்பதால், ஒரு பகுதியின் மாற்றம் மற்ற பகுதிகளை பாதிக்கும். இதனால் மாதவிடாய் சுழற்சி பாதிப்படையும்.

*மாதவிடாய் சுழற்சியில் தைராய்டு ஹார்மோன்களுக்கும் பங்கு உண்டு என்பதால், சமநிலையற்ற தைராய்டு சுரப்புகள் சீரற்ற மாதவிடாய்க்கு வழிவகுக்கும்.

ஒழுங்கற்ற மாதவிடாய்…

*மூன்று மாதங்களுக்கு மேல் மாதவிடாய் வராமல் இருப்பது.

*அதிகமான உதிரப்போக்கு அல்லது மிகவும் குறைவான உதிரப்போக்கு ஆவது.

*ஒரு மாதவிடாய்க்கும் இன்னொரு மாதவிடாய்க்கும் இடையில் 21 நாட்கள் கூட இல்லாமல் இருப்பது.

*அதிக ரத்தக் கட்டிகளுடன் ரத்தம் வெளியேறுவது.

*அதேபோல் 35 நாட்களைத் தாண்டியும் மாதவிடாய் வராமல் இருப்பதும் சீரற்றது.

*ஒவ்வொரு மாதவிடாய் சுழற்சிக்கும் நடுவில் உதிரப்போக்கோ அல்லது மிகக் குறைவான ரத்த சொட்டுக்களோ (Spotting) வருவதும் சீரற்ற முறையை உணர்த்துகிறது.

பக்க விளைவுகள்…

*பி.சி.ஓ.டி (சினைப்பை கட்டிகள்).

*ஃபைப்ராய்டு (fibroid) கட்டிகள்.

*கருத்தரிப்பதில் சிரமம்.

*தரித்த கரு எளிதில் களையும் அபாயம்.

*ஆரோக்கியமான முட்டையினால் தரித்த கருவாக இல்லையெனில் ஆரோக்கியமற்ற சிதைந்த மரபணு மாற்றங்களே நிகழும்.

*அதிக உதிரப்போக்கினால் இரும்புச் சத்து குறைபாடு வரும்.

*உடல் எடை அதிகரித்துக்கொண்டே போவது.

*ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு அதிகரிப்பது.

*தூக்கமின்மை, உடல் சோர்வு, மனச் சோர்வு மற்றும் உடல் பலவீனம் ஏற்படுவது.

*உடலில் இன்சுலின் ஹார்மோன் அதிகமாவது.

காரணங்கள்…

*பி.சி.ஓ.டி.

*ஃபைப்ராய்டு (fibroid) கட்டிகள்.
*அதிக உடற்பருமன்
*போதிய ஊட்டச்சத்து குறைபாடு.
*தைராய்டு ஹார்மோன்களின் சமநிலை இல்லாமல் சுரப்பது
*மற்ற இனப்பெருக்க ஹார்மோன்களின் சமநிலை.
*ஹைப்போதலாமஸ், பிட்யூட்டரி சுரப்பி, சினைப்பை இவை மூன்றுக்கும் இருக்கும் சமநிலையில் மாற்றம்.
*புகைப்பிடித்தல்.
*மது அருந்துவது.
*போதிய உடல் உழைப்பு இல்லாத வாழ்வியல் முறை மற்றும் பணி முறை.
*தூக்கமின்மை.
*போதிய தண்ணீர் குடிக்காமல் இருப்பது.

இயன்முறை மருத்துவத்தின் பங்கு…

ஒழுங்கற்ற மாதவிடாயினை பெரும்பாலான பெண்கள் திருமணம் ஆன பிறகுதான் குழந்தை பிறப்பதற்காக சரி செய்துகொள்ள நினைக்கிறார்கள். ஆனால், அவ்வாறு காலம் கடத்தாமல் உடனடியாக சரி செய்து கொள்வது நல்லது.மருத்துவம் மூலம் போதிய சிகிச்சை எடுத்துக்கொண்டால் சில சிக்கல்களை எளிதில் சரிசெய்யலாம். உதாரணமாக, அதீத உதிரப்போக்கினை கட்டுக்குள் வைப்பது.

ஆனால், மாதவிடாய் பிரச்னை வராமல் இருக்கவும், வந்த மாதவிடாய் பிரச்னைகளை கட்டுக்குள் வைக்கவும் இயன்முறை மருத்துவ உடற்பயிற்சிகள் அவசியம் தேவை.
ஒவ்வொருவரின் உடல் எடை, தசை வலிமைக்கேற்ப உடற்பயிற்சிகள் வேறுபடும் என்பதால், இயன்முறை மருத்துவரை அணுகி உரிய ஆலோசனைகள் பெற வேண்டும். உடல் எடையை கட்டுக்குள் வைத்து சரிவர உடற்பயிற்சிகள் செய்து வருவதினால், ஹார்மோன்கள் அனைத்தும் சீராய் சுரக்கும். இதனால் மாதவிடாய் சுழற்சி சரியான முறையில் இருக்கும்.

வருமுன் காப்போம்…

*தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

*தொடர் எட்டு மணி நேரத் தூக்கம்.

*சரிவிகித உணவு முறையில் உண்பது.

*புகை மற்றும் மது பிடிப்பதை தவிர்ப்பது.

*யோகாசனம், நீச்சல், நடனம் என ஏதேனும் ஒரு உடல் அசைவு சார்ந்த பொழுதுபோக்கில் ஈடுபடுவது.

*அதிகநேரம் தொலைபேசி பயன்படுத்துவதை தவிர்ப்பது.

*கொழுப்புச் சத்து நிறைந்த உணவினை தினமும் உடலில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கருப்பை ஹார்மோன்கள் உற்பத்தியாக கொழுப்புச்சத்து தேவை.

*பதப்படுத்தப்பட்ட உணவுகள், பேக்கிரி உணவுகள், அதிக கலர் சேர்க்கும் உணவுகளை தவிர்ப்பது நல்லது.

*போதிய தண்ணீர் குடிப்பதை பழக்கமாக்கி கொள்ள வேண்டும். இதனால் தேவைக்கு அதிகமான அளவில் சுரக்கும் ஹார்மோன்கள் எளிதில் உடலினை விட்டு வெளியேறிவிடும். மொத்தத்தில் நம் கருமுட்டைகள் என்பது நம்முடைய அடுத்த தலைமுறைகளை உருவாக்கப் போவது என்பதால், ஆரம்பம் முதலே உரிய முறையில் உடலினை பேணிக்காப்பது நல்லது.

The post மாறும் மாதவிடாய் சுழற்சி… appeared first on Dinakaran.

Tags : kumkum ,Gomati Isaikar ,Dinakaran ,
× RELATED தியாகிகளா அம்மாக்கள்!