மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நாளான ஏப். 19-ம் தேதி தமிழ்நாட்டில் திரையரங்குகளில் பகல்நேர காட்சிகள் ரத்து என அறிவிப்பு

சென்னை : மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நாளான ஏப். 19-ம் தேதி தமிழ்நாட்டில் திரையரங்குகளில் பகல்நேர காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு வருகிற 19ம் தேதி (வெள்ளி) தொடங்கி ஜூன் 1ம் தேதி இறுதிகட்ட (7வது கட்ட) தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் கட்டத்திலேயே தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றம் மற்றும் விளவங்கோடு சட்டமன்றத்துக்கான இடைத்தேர்தல் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கு வருகிற 19ம் தேதி (வெள்ளி) தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 20ம் தேதி தொடங்கி 27ம் தேதி வேட்புமனு தாக்கல் முடிந்தது.

தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜ தலைமையில் தனித்தனி கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் தேர்தலை சந்திக்கிறது. அதன்படி தமிழகத்தில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். தமிழ்நாடு மற்றும் புதுவையில் வருகிற 19ம் தேதி (வெள்ளி) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை இடைவிடாமல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்த நிலையில் தேர்தல் நாளன்று தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்யப் பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்களில் 1,168 திரைகளிலும் முற்பகல் மற்றும் பிற்பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. முற்பகல் மற்றும் பிற்பகல் காட்சிகள் ரத்துசெய்யப்படுவதாக திரையரங்க உரிமையாளர் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏப்.19-ம் தேதி மாலை மற்றும் இரவு நேர காட்சிகள் வழக்கம்போல் திரையிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தென் இந்திய திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் சார்பாக மக்கள் தேர்தலில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது.

The post மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நாளான ஏப். 19-ம் தேதி தமிழ்நாட்டில் திரையரங்குகளில் பகல்நேர காட்சிகள் ரத்து என அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: