×

தேனி நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கு காலமெல்லாம் நான் நன்றிக்கடன் பட்டவனாக இருப்பேன்: டிடிவி தினகரன்

தேனி: தேனி நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கு காலமெல்லாம் நான் நன்றிக்கடன் பட்டவனாக இருப்பேன் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். நான் உங்களில் ஒருவன்… உங்களுக்கானவன்… காவிரிக் கரையில் பிறந்த என்னை, இந்த வைகை மண்ணைச் சேர்ந்த மக்கள் வாரியெடுத்து மகிழ்வதும், கொண்டாடுவதும் நான் செய்த புண்ணியமாகவே கருதுகிறேன். சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு உங்கள் வீட்டுப் பிள்ளையாக, சகோதரனாக, நண்பனாகக் கருதி, அருவியைப் போல என் மீது அன்பை அள்ளி கொட்டும் எனது அருமை தேனி நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கு காலமெல்லாம் நான் நன்றிக்கடன் பட்டவன் ஆவேன்

வானத்தை நோக்கி எறியும் எந்த ஒரு பொருளும் புவி ஈர்ப்பு விசையின் காரணமாக பூமியை நோக்கி திரும்பி வருவது போல உங்களின் மீது நான் கொண்டிருக்கும் அன்பு கலந்த ஈர்ப்பால் மீண்டும் என் சொந்தங்களைத் தேடி வந்திருக்கிறேன். தேனி மண்ணில் விளையும் செங்கரும்பு திகட்டாத தித்திப்பை தரக்கூடியது. அதுபோலவே இங்கு வாழும் மக்களும் அளவில்லாமல் அள்ளிக் கொடுக்கும் அன்பை என்றென்றும் நினைவில் வைத்திருப்பேன்.

தேனியையும் வைகையையும் எப்படி பிரிக்க முடியாதோ, அதுபோல உங்களிடமிருந்து என்னைப் பிரிக்க முடியாது என சொல்லும் அளவிற்கு யாருக்கும் வாய்க்காத பந்தம் எனக்கு கிடைத்திருக்கிறது. என் மீது நீங்கள் காட்டும் அன்பைக் கண்டு எதிரிகளும் துரோகிகளும் அதிசயித்து கிடக்கிறார்கள். அன்பு, அறிவு, துணிவு, ஆளுமை என்பதற்கு ஒற்றை இலக்கணமாக திகழ்ந்தவர் இதயதெய்வம் அம்மா அவர்கள். மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஓர் அரசியல் ஆளுமை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்த இதய தெய்வம் அம்மா அவர்களால் வளர்க்கப்பட்ட கட்சி இன்று துரோகிகளின் கையில் சிக்கிக் கிடக்கிறது.

எந்த லட்சியத்தை முன்னிறுத்தி நம் இயக்கம் (அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்) தொடங்கப்பட்டதோ, அந்த இலக்கை எட்டும் வரையில் ஓயமாட்டோம் என்ற முழக்கத்துடன் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். நேர்மையான பாதையில் துடிப்பான தொண்டர்களுடன் பயணித்துக் கொண்டிருக்கும் நம்மை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது.

இயற்கை வளப் பாதுகாப்பு, சமூகநீதி, பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டு மக்கள் நலனுக்கான எண்ணற்ற கொள்கைகளை கொண்டிருக்கும் நமது இயக்கம் எட்டியிருக்கிறது. அதற்கான முதல் நாடாளுமன்றத் தேர்தலை வலுவான சந்திக்கின்றோம். வெற்றிக்கான பாதையை படியாக அமைந்திருக்கும். கூட்டணி அமைத்து பாரதப் பிரதமர் மோடி அவர்களை மூன்றாவது முறையாக பிரதமர் அரியணையில் அமரவைப்பதன் மூலம் உலகநாடுகள் மத்தியில் இந்தியாவை வலிமையான நாடாக மாற்றவும், பொருளாதார ரீதியாக நம் நாடு முன்னேற வழிவகுக்கவும் உதவும் என்பதை மக்கள் அனைவரும் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள்.

தேனி நாடாளுமன்றத் தொகுதியை தமிழகத்தின் தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றும் முனைப்பில் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்து தொலைநோக்குப் பார்வையுடன் தயாரிக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறேன்.

* டிடிவி தினகரனின் வாக்குறுதிகள்

* முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உச்சநீதிமன்ற உத்தரவின் படி 152 அடியாக உயர்த்தி நமது மாநில உரிமை மற்றும் விவசாயிகளின் நலனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* மத்திய அரசின் சிறப்பு நிதியுதவியைப் பெற்று வைகை அணையில் முறையான தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

* நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் தமிழகம் கேரளாவை இணைக்கும் வழித்தடமான தேவாரம் சாக்கலூத்து மெட்டு ரோடு திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்

* 1984 ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்ட ஆண்டிபட்டி- தெப்பம்பட்டி- திப்பரேவு அணைத்திட்டத்திற்கு புத்துயிர் அளிக்கப்படும்.

* எண்டபுளி பஞ்சாயத்து பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான வவ்வால்துறையில் புதிய அணை கட்டி அதன் மூலம் சுமார் 3000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதற்கும், அப்பகுதியில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை போக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

* கண்ணகி கோட்டம் முழுமையாக தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்து நவீன வசதிகளுடன் சுற்றுலாத்தளமாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

* தேனியில் உலகத்தரம் வாய்ந்த மத்தியப் பல்கலைக்கழகம் (Central University), ஒன்றிய அரசின் கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT) மற்றும் மத்திய அரசின் உதவியோடு சித்தா, ஆயுர்வேதக் கல்லூரிகள் நிறுவ முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

* கேந்திரிய வித்யாலயா பள்ளியை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வருவதோடு, மத்திய அரசின் PM Shri மற்றும் நவோதயா (Navodaya) பள்ளிகளையும் நமது தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

* உசிலம்பட்டியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் மூக்கையாத் தேவர் ஆகியோரின் சிலைகளுக்கு அருகே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும்

* ஒன்றிய அரசின் உதான் (Udaan) திட்டத்தின் மூலம் தேனியில் விமான நிலையம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

* தென்மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான திண்டுக்கல்- சபரிமலை ரயில் போக்குவரத்து, சென்னை – போடி வரையில் தினசரி ரயில் சேவை, மதுரை போடிநாயக்கனூர் வரையிலான ரயில் போக்குவரத்தை கூடலூர் வரை நீட்டிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

* போடி முதல் மூணாறு வரையிலான சாலைப் போக்குவரத்தை அகலப்படுத்துதல், கண்ணகி கோயிலுக்கு முறையான சாலைவசதியை ஏற்படுத்துதல் மற்றும் உசிலம்பட்டி புறவழிச்சாலைக்கான பணிகளை உடனடியாக தொடங்கவும், தேவைப்படும் இடங்களில் நான்கு வழிச்சாலைகளை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

* தேனி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படுவதோடு, தொகுதி மக்கள் அனைவரும் நிலையான வருமானம் ஈட்டுவதற்கு தேவையான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். தேனி நாடாளுமன்றத் தொகுதியில் நிலவும் மின் தட்டுப்பாட்டைப் போக்கவும், தடையற்ற மின்சாரம் வழங்கவும் தேவையான இடங்களில் துணைமின் நிலையங்கள் அமைத்துத் தர முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

* ஆண்டிபட்டி ஜக்கம்பட்டியில் பாதியில் நிறுத்தப்பட்டிருக்கும் நெசவாளர் பூங்கா அமைக்கும் பணியை மீண்டும் தொடங்கி விரைவில் அப்பூங்கா நெசவாளர் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்

* மா மற்றும் தென்னை விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் வழங்கவும், திராட்சை, ஏலக்காய்க்கு உரிய விலை நிர்ணயம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

* உசிலம்பட்டி 58ஆம் கால்வாய்த் திட்டத்திற்கு உரிய அரசாணை பிறப்பித்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

* சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தெ.மேட்டுப்பட்டி- கச்சைகட்டி- தெத்தூர் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளில் 1975ஆம் ஆண்டு அன்றைய ஆளுநர் பிரபுதாஸ் பட்வாரி அவர்களின் பரிந்துரையின் பேரில் 1200 ஏக்கரில் தொடங்கப்பட்ட சர்வசேவா கூட்டுப் பண்ணையின் மூலம் 40 சதவிகித விவசாயிகளுக்கு மட்டுமே பட்டா வழங்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சியவர்களுக்கும் பட்டா வழங்குவதற்கு தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

* வைகை அணையை கட்டுவதற்கு தங்களின் சொந்த நிலங்களை தானமாக வழங்கிய கரட்டுப்பட்டி, கோவில்பட்டி, சாவடிப்பட்டி, சக்கரைப்பட்டி உள்ளிட்ட19 கிராமங்களைச் சேர்ந்த மக்களின் கோரிக்கையின் படி, 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்த வைகை அணையில் மீன்பிடி உரிமத்தை பறித்து தனியாருக்கு விடப்பட்ட ஏலத்தை ரத்து செய்து மீண்டும் அந்த கிராம மக்களுக்கே மீன்பிடி உரிமம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

* தேனி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட அனைத்து காவல்நிலையங்களிலும் நீண்டகாலமாக கரும்புள்ளி பட்டியலில் இருக்கும் கிராமங்களின் பெயர்கள் அப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இயல்புநிலைக்குத் திரும்ப தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்

* சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 15-B மேட்டுப்பட்டியில் 6 ஆண்டுகளாக மூடியிருக்கும் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சக்கரை ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சாத்தையாறு அணை முறையாக தூர்வாரப்பட்டு பராமரிக்கப்படுவதோடு, முல்லைப்பெரியாறு வாய்க்கால் நீரை சாத்தையாறு அணையில் தேக்கி அப்பகுதி விவசாயத் தேவைகளுக்கு பயன்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

* தேனி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் கூட்டுக் குடிநீர் திட்டம், அனைத்து கிராமங்களிலும் சுத்தமான குடிநீர், பேருந்து வசதி, சாலைவசதி, கழிப்பறை வசதி மற்றும் சுகாதார வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்.

* கிராமப்புறங்களில் சுயதொழில் தொடங்கும் பெண்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலமாக வட்டியில்லா கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

* மேகமலை, தும்மக்குண்டு மற்றும் வாலிப்பாறை பகுதிகளில் பூர்வகுடிகளாக வாழ்ந்து வரும் 18 கிராம மக்களை வெளியேற்ற முயற்சிக்கும் தமிழக அரசின் நடவடிக்கையை மனிதாபிமான அடிப்படையில் அணுகி, மத்திய அரசின் மூலம் அவர்கள் அங்கேயே வசிக்க வழிவகை செய்யப்படும்.

* சோழவந்தான், கடமலை மயிலை, கம்பம் உள்ளிட்ட தேவைப்படும் இடங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தொடங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

* மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வினை கிராமப்புற இளைஞர்கள் எளிதாக எதிர்கொள்ளும் வகையில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதோடு 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் அதிநவீன வசதிகளுடன் கூடிய பொது நூலகங்கள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும்

* தேனி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட விளையாட்டு வீரர்கள் மாநில, தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வகையில் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் சர்வதேச அளவிலான விளையாட்டு மைதானங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் அமைத்துத் தரப்படும்.

மேகமலை, வைகை அணைப் பூங்கா, சோத்துப்பாறை, மஞ்சளாறு, கும்பக்கரை, தேக்கடி, சின்ன சுருளி ஆகிய இடங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி சிறந்த சுற்றுலாத்தளங்களாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இப்படி தேர்தல் வாக்குறுதிகள் மட்டுமல்லாமல், பிரச்சாரத்தின் போது மக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள் அத்தனையும் பரிசீலித்து நிறைவேற்றப்படும் என தேனி நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கு உறுதியான உத்தரவாதத்தை இந்நேரத்தில் தருகிறேன். நம் ஒவ்வொருவரின் வாக்கும் நமது தொகுதியின் வளர்ச்சி மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கு அளிக்கக் கூடிய பாதுகாப்பு என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

உங்களிடமே சுரண்டி இறுதிகட்ட அன்பளிப்பு என்ற பெயரில் உங்களுக்கே 300, 500 என கொடுக்க முயற்சிக்கும் சூழ்ச்சியை ஆளும் கட்சியினரும், ஆண்ட கட்சியினரும் முன்னெடுத்து செய்து வருகிறார்கள். அவற்றுக்கு இடமளித்து ஏமாற வேண்டாம் என தேனி நாடாளுமன்றத் தொகுதி வாக்காளர்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

தேனி நாடாளுமன்றத் தொகுதியின் வாக்காளர்களை வெறும் வாக்குகளாகவே பார்க்கும் எதிர்க்கட்சியினர் மத்தியில், இந்தத் தொகுதியின் வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு உங்கள் முன் நிற்கும் உங்கள் வீட்டுப்பிள்ளையான எனக்கு குக்கர் சின்னத்திலே வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

குக்கர் சின்னத்திற்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் நம் எதிரிகளையும், துரோகிகளையும் ஒருசேர வீழ்த்தும் ஆயுதங்களாக இருக்கட்டும். இரவு பகல் பாராமல் இறுதிகட்ட தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அனைத்து நிலையிலான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளைச் சார்ந்த தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

The post தேனி நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கு காலமெல்லாம் நான் நன்றிக்கடன் பட்டவனாக இருப்பேன்: டிடிவி தினகரன் appeared first on Dinakaran.

Tags : Theni ,TTV Dhinakaran ,Kaveri ,Vaigai ,DTV Dinakaran ,
× RELATED தேனி தொகுதியில் போட்டியிடும் அமமுக...