நாடாளுமன்ற, இடைத்தேர்தல் செலவுக்கு ₹58.58 கோடி ஒதுக்கீடு: போலீசுக்கும் ₹23.72 கோடி அனுமதி

சென்னை: தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 11.4.2024ம் தேதியிட்ட கடிதத்தில், ஊதியம் வழங்குவது தொடர்பாக ஒருங்கிணைந்த அறிவுறுத்தல்களையும், ஊதிய விகிதங்களையும் வெளியிட்டுள்ளது. 2024 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் தமிழ்நாட்டில் காலியாக உள்ள விளவங்கோடு தொகுதிக்கான இடைத் தேர்தலுக்கு வரும் 19ம் தேதி வாக்குப் பதிவு நடக்க இருக்கிறது. அப்போது வாக்குப்பதிவு, வாக்கு எண்ணுதல், மற்றும் பிற குறிப்பிட்ட வகை பணியாளர்களுக்கு வழங்குவதற்கான நிதியின் தேவை குறித்து பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, ₹58 கோடியே 58 லட்சத்து 26 ஆயிரம் தற்காலிக முன்பணமாக பெறுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 4.4.2024ம் தேதி பொதுத்துறை( தேர்தல்-6) வெளியிட்ட அரசாணையில் ₹112 கோடி பொதுத் துறைக்கு(தேர்தல் மசோதாக்கள்) அனுமதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ₹58 கோடியே 58 லட்சத்து 26 ஆயிரம் அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும், மேலே தெரிவிக்கப்பட்ட வாக்குப்பதிவு, எண்ணுதல், உள்ளிட்ட செலவினங்களை செய்ய மறு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த செலவினங்களை செய்ய மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு அதிகாரம் உள்ளது. செலவினங்களுக்காக மாவட்ட தேர்தல் அலுவலர் எடுக்கும் தொகை மற்றும் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம், அலவன்ஸ்கள் குறித்த உண்மையான விவரங்களை மின்னஞ்சல், விரைவுத் தபால் மூலம் தெரிவிக்க வேண்டும்.

மொத்தமாக வழங்கப்படும் முன்பணம், தேர்தல் பணிக்காக வரைவு செய்யப்பட்ட பணியாளர்களுக்கு குறிப்பிட்ட ஒரே விகிதத்தில் ஒரே மாதிரியான ஊதியம் வழங்குவதற்காக மட்டுமே பயன்படுத்தபட வேண்டும். முன் பணம் வழங்குதல் தொடர்பாக தனிக் கணக்கை பராமரிக்க வேண்டும். இது தவிர வேறு தொகை எடுக்கப்பட்டால் வாக்கு எண்ணிக்கை முடிக்கப்பட்ட பிறகு ஒரு வாரத்துக்குள் குறிப்பிட்ட கணக்கு அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும். மாவட்ட தேர்தல் அதிகாரி பல்வேறு வகையில் செலவிட்ட விவரங்களை ஒரு வாரத்துக்குள் அறிக்கையாக அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும், தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு ஊதியம் மற்றும் உணவு உள்ளிட்டவை வழங்க ₹23 கோடியே 72 லட்சத்து 86 ஆயிரம் தற்காலிக முன்பணம் ஒதுக்கப்படுகிறது. மேற்கண்ட முன்பணத்தைக் கொண்டு 16ம் தேதி முதல் வாக்குப் பதிவு நடக்கும் நாளான 19ம் தேதி வரை உள்ள 4 நாட்களுக்கும், வாக்கு எண்ணிக்கை நடக்கும் நாளான ஜூன் 4ம் தேதியிலும் தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு ஊதியம் மற்றும் உணவு உள்ளிட்டவை செய்து கொடுக்க மேற்கண்ட தொகையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

The post நாடாளுமன்ற, இடைத்தேர்தல் செலவுக்கு ₹58.58 கோடி ஒதுக்கீடு: போலீசுக்கும் ₹23.72 கோடி அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: