தமிழ்நாட்டில் 19ம் தேதி வரை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்: 106 டிகிரி வரை வெயில் கொளுத்தும்

சென்னை: தமிழ்நாட்டில் இன்னும் 19 நாட்களில் கத்திரி வெயில் காலம் தொடங்க உள்ளது. அப்போது வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, நேற்றைய வெப்ப அளவைப் பொறுத்தவரை பொதுவாக இயல்பை ஒட்டியே இருந்தது. வட தமிழக மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 99 முதல் 102 டிகிரி வரை இருந்தது. வட தமிழக கடலோரப் பகுதிகள், தென் தமிழக மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 91 முதல் 99 டிகிரி வரை இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை ஈரோட்டில் 103 டிகிரி வரை இருந்தது. சென்னை மீனம்பாக்கத்தில் 95 டிகிரியாக இருந்தது.

இந்நிலையில், மன்னார்வளைகுடா பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. வட தமிழகத்தில் வறண்ட வானிலை காணப்படும். 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவையில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

வெப்பநிலையை பொறுத்தவரையில் 19ம் தேதி வரை 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் வாய்ப்புள்ளது. உள் மாவட்டங்களில் 2-4 டிகிரி செல்சியஸ் வரை உயரும் வாய்ப்புள்ளது. உள் மாவட்டங்களில் சமவெளிப் பகுதிகளில் அநேக இடங்களில் 100 டிகிரி முதல் 106 டிகிரி வரையும் இருக்கும்.

The post தமிழ்நாட்டில் 19ம் தேதி வரை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்: 106 டிகிரி வரை வெயில் கொளுத்தும் appeared first on Dinakaran.

Related Stories: