×

சென்னையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்: காஞ்சிபுரம், பெரும்புதூர் வேட்பாளர்களை ஆதரித்து பிரமாண்ட பொதுக்கூட்டத்திலும் பங்கேற்பு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று காலை பிரசாரத்தில் ஈடுபடுகிறார். தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வருகிற 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. பிரசாரத்திற்கு நாளை ஒரு நாள் மட்டும் தான் எஞ்சியுள்ளது. அதாவது நாளை மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. இதனால் அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கடந்த மாதம் 22ம் தேதி திருச்சியில் சூறாவளி சுற்றுப்பயணத்தை தொடங்கினார். அப்போது திருச்சி, பெரம்பலூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசினார்.

தொடர்ந்து தொகுதி வாரியாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரின் பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்று வருகின்றனர். அவரின் எழுச்சியுரை வாக்காளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை மாதவரம் மஞ்சம்பாக்கத்தில் நேற்று நடந்த பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அங்கு அவர் திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், வடசென்னை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி ஆகியோரை ஆதரித்து பேசினார். தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 7 மணியளவில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள ஜி.கே.எம்.காலனிக்கு உட்பட்ட 32 தெருக்களில் திறந்த வாகனத்தில் வடசென்னை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். தொடர்ந்து இன்று மாலை காஞ்சிபுரம் தொகுதி வேட்பாளர் க.செல்வம், பெரும்புதூர் தொகுதி வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இன்று மாலை காஞ்சிபுரம் மாவட்டம் கரசங்காலில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

நாளை(புதன் கிழமை)-தென்சென்னை தொகுதி வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் தயாநிதிமாறன் ஆகியோரை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார். காலையில் நடைபயணம் மூலம் மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிக்கவும் திட்டமிட்டுள்ளார். தொடர்ந்து அவர் மத்திய சென்னை தொகுதி, தென்சென்னை தொகுதியை இணைக்கும் மைய பகுதியான, பெசன்ட்நகரில் பிரசாரத்தை முடிக்க திட்டமிட்டுள்ளார். அங்கு நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மு.க.ஸ்டாலின் எழுச்சியுரையாற்றுகிறார்.

இதே போல திமுக இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று நீலகிரி, திருப்பூர் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். இன்று அவர் ஈரோடு, பொள்ளாச்சி தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். பிரசாரத்தின் இறுதி நாளான நாளை கோவையில் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். கோவை சிவானந்தா காலனியில் தனது பிரசாரத்தை நிறைவு செய்கிறார். இதே போல திமுக முன்னணியினர், கூட்டணி கட்சியை சார்ந்த காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை பெரும்புதூர் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோவையிலும், விசிக தலைவர் திருமாவளன் சிதம்பரத்திலும், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மதுரையிலும், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கோவில்பட்டியிலும் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். இதே போல மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ இன்று மாலை சிதம்பரம் தொகுதி வேட்பாளர் திருமாவளவனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இதே போல திமுக நட்சத்திர பேச்சாளர்கள், நடிகர், நடிகைகளும் அனல் பறக்கும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

The post சென்னையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்: காஞ்சிபுரம், பெரும்புதூர் வேட்பாளர்களை ஆதரித்து பிரமாண்ட பொதுக்கூட்டத்திலும் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Chennai ,Kanchipuram ,Perumbudur ,M.K.Stalin ,Tamil Nadu ,Puducherry ,
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...