×

தேனியில் 2500 அரசு அலுவலர்கள் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேனி, ஏப்.16: தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 2500க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்கள் கலந்து கொண்ட தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தேனி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் 100 சதவீத வாக்களிப்பை பதிவு செய்வதற்காக தொடர் விழிப்புணர்வு பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு இடங்களில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதன்படி நேற்று மாலை தேனியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வருவாய்த்துறை, காவல்துறை, வனத்துறை, தீயணைப்புத்துறை, நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் துறை, ஊரகவளர்ச்சித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், மின்சார வாரியத்துறை, மகளிர் திட்ட அலுவலர்கள், பள்ளிக்கல்வித்துறை, விளையாட்டுத்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை,

சுகாதாரத்துறை, போக்குவரத்துத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்கள், கல்லூரி மாணவர்கள் இணைந்து ‘என் வாக்கு என் உரிமை, வாருங்கள் வாக்களிப்போம்’ என்ற விழிப்புணர்வு வாசக வடிவிலும், தேர்தல் ஆணையத்தின் ஸ்வீப் லோகோ இலச்சினை வடிவத்திலும் 2500-க்கும் மேற்பட்டோர் நின்று தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஷஜீவனா தலைமை வகித்தார். நிகழ்ச்சி நிறைவாக அரசு அலுவலர்கள் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்கள் தங்களது கைப்பேசியின் விளக்கை ஒளிரச்செய்து நாங்கள் வாக்களிப்பது மட்டுமல்லாமல் பிறரையும் வாக்களிக்க செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்வோம் என உறுதிகூறும் வகையில் கைப்பேசி விளக்கை உயர்த்தி காண்பித்து, வாக்காளர்கள் என்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம் என்று குறிப்பிட்டனர். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி உள்ளிட்ட அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post தேனியில் 2500 அரசு அலுவலர்கள் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Theni ,Theni District Sports Ground ,Dinakaran ,
× RELATED தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு