×

வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்படும் 64 வகையான பொருட்கள் அனுப்பும் பணி துவக்கம்

 

ஈரோடு,ஏப்.16: வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் 64 வகையான பொருள்கள் அனுப்பும் பணி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதியில் 2,222 வாக்குச்சாவடிகள் உள்ளன.வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில்,ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தேவையான வாக்காளர் பட்டியல்,டம்மி பேலட் ஷீட்,

வாக்குப் பதிவுக்கான தடுப்பு அட்டைகள்,ஸ்டாம்ப் பேட்,தீப்பெட்டி,தேர்வு எழுதும் அட்டை,‘உள்ளே, வெளியே, போலிங் அதிகாரிகள், ஆண், பெண்’ எனும் வாசகங்கள் அச்சிடப்பட்ட அட்டைகள், பிளேடு, கயிறு,பசை,நூல்,சீல் வைக்க தேவையான பொருள்கள், பென்சில்,இரும்பு ஸ்கேல்,கார்பன் பேப்பர்,கிளிப்,ரப்பர்கள்,கவர்,பேக்கிங் செய்ய தேவையான பொருட்கள் என, 64 வகை பொருள்கள் பெட்டி மற்றும் பைகளில் வைக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து,அவற்றைத் தொகுத்து, ஒரே சாக்கில் கட்டி, தயார் நிலையில் வைத்துள்ளனர்.அவற்றை நேற்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஒரு சிறிய கன்டெய்னர் லாரி மூலமாக போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. ஒவ்வொரு தொகுதிக்கும் கூடுதலாக 30க்கும் சாக்குகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இவை அனைத்தும், அந்தந்த தொகுதிக்கு உள்பட்ட தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, வாக்குப்பதிவுக்கு முதல் நாளான 18ம் தேதி, ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வி.வி.பேட் ஆகியவையுடன் இணைத்து அனுப்பப்படும்.

The post வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்படும் 64 வகையான பொருட்கள் அனுப்பும் பணி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode district ,
× RELATED ஈரோடு மாவட்டத்தில் யானையைக் கொன்று, தந்தத்தை வெட்டி சென்ற நபர் கைது