×

நினைத்தது நடக்கவில்லை என்பதால் பழித்து பேசுகிறார் ஜூன் 4ம் தேதிக்கு பிறகு அண்ணாமலை பொறுப்பில் இருப்பாரா என பார்ப்போம்: எடப்பாடி சொல்கிறார்

சென்னை: அண்ணாமலை நினைத்தது நடக்கவில்லை. அதனால் அவர் அதிமுகவை பழித்து பேசுகிறார். ஜூன் 4ம் தேதிக்கு பிறகு அவர் அந்த பொறுப்பில் இருப்பாரா என பார்ப்போம் என எடப்பாடி பழனிசாமி கூறினார். சென்னை புரசைவாக்கம் தானா தெருவில் நேற்று மாலை அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் தேமுதிகவை சேர்ந்த பார்த்தசாரதியை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு திரட்டினார். அப்போது அவர் பேசியதாவது:

நீட் தேர்வுக்கு அதிமுக எப்போதும் தனது எதிர்ப்பை காண்பித்து வந்துள்ளது. தொடர்ந்து அதிமுக தான் நீட் தேர்வு கொண்டு வந்தது என கூறுகிறார்கள். ஆனால் அதில் உண்மையில்லை. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு பிரமுகரின் மனைவிதான் அந்த வழக்குக்காக வாதாடினார். நீட் தேர்வுக்கு எதிராக அதிமுக என்றும் குரல் கொடுக்கும். தற்போது தமிழகத்தில் ஒருவர் பேசி வருகிறார். அவர் கட்சிக்கு வந்தே இன்னும் முழுமையாக 5 வருடம் ஆகவில்லை. ஐந்து வருடம் நிரம்பாத குழந்தை மாதிரி இருப்பவர் அதிமுகவை பற்றி பேசுகிறார்.

2026ல் கட்சி காணாமல் போய்விடும் எனக் கூறுகிறார். நீ வேண்டுமானால் கண்டுபிடித்து கொடு, நீ போலீஸ் தானே. தம்பி உன்னை போல எத்தனை பேரை இந்த கட்சி பார்த்திருக்கும். எத்தனையோ எதிர்ப்புகள், எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய போது கடுமையான எதிர்ப்புகளை சந்தித்தார். மக்கள் துணையோடு அதனை முறியடித்து அவருடைய மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையில் இந்த கட்சியை காப்பாற்றினார்.

இரு பெரும் தலைவர்களின் அருள் ஆசியோடு தொண்டர்களின் ஆதரவோடு இன்று கட்சி முழுமையாக காப்பாற்றப்பட்டுள்ளது. அது தெரியாமல் வரலாறு தெரியாமல் ஏதேதோ பேசுகிறார். அவர் கண்ட கனவு வேறு, தற்போது தமிழகத்தில் நடப்பது வேறு, அதனால் புலம்பி வருகிறார். விரக்தியின் விளிம்பிற்கு அண்ணாமலை சென்றுவிட்டார். அதனால் இதுபோன்ற பேச்சுக்கள் வருகிறது. அதனால் தம்பி நீ கொஞ்சம் பொறுமையா பேசு, அதிமுக ஒரு மாதிரியான கட்சி என ஏற்கனவே நான் கூறியுள்ளேன்.

பாஜ மாதிரி விரல் விட்டு எண்ணக்கூடிய தொண்டர்கள் எங்களிடம் கிடையாது. இரண்டு கோடி தொண்டர்களுக்கு மேல் உள்ளார்கள். அதனால் பேசும்போது பார்த்து பேசுங்கள். உங்கள் கட்சி மோசமாக இருந்தால் அதற்காக எங்களை ஏன் பழித்து பேசுகிறீர்கள். எங்களுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. நாங்கள் தான் உங்களது நடவடிக்கை சரி இல்லை என்றுதான் வெளியே வந்து விட்டோம்.

அதிமுகவை அழிக்க வேண்டும் என யார் எண்ணுகிறார்களோ அவர்கள் அழிந்து போவார்கள். உங்கள் கட்சி போன்று டெல்லியில் இருந்து அபாயின்ட்மெண்ட் பண்ணுகின்ற கட்சி அதிமுக கிடையாது. அப்படிப்பட்ட கட்சியில் நீ இருக்கிறாய், உன்னை தற்போது அபாயின்மெண்ட் பண்ணி உள்ளார்கள். ஜூன் 4ம் தேதிக்கு பிறகு இருப்பியா, இல்லையா என்பதை பிறகு பார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.

The post நினைத்தது நடக்கவில்லை என்பதால் பழித்து பேசுகிறார் ஜூன் 4ம் தேதிக்கு பிறகு அண்ணாமலை பொறுப்பில் இருப்பாரா என பார்ப்போம்: எடப்பாடி சொல்கிறார் appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Edappadi ,Chennai ,AIADMK ,Edappadi Palaniswami ,Thana Street ,Purasaivakkam, Chennai ,Dinakaran ,
× RELATED அரசியல் லாபத்துக்காக ஜெயலலிதா...