×

நகைக்கடை உரிமையாளரை கட்டிப்போட்டு துப்பாக்கி முனையில் ரூ.1.5 கோடி நகை கொள்ளை

* ரூ.5 லட்சம் ரொக்கத்தையும் சுருட்டி சென்றனர்

* ஆவடி அருகே பட்டப்பகலில் துணிகர சம்பவம்

சென்னை: ஆவடி அருகே பட்டப்பகலில் நகைக்கடை உரிமையாளரை கட்டிப்போட்டு, துப்பாக்கி முனையில் ரூ.1.5 கோடி நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து, 5 தனிப்படைகள் அமைத்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர். ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை, எல்லையம்மன் நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (33). இவர் கடந்த 4 ஆண்டுகளாக, வீட்டின் கீழ் தளத்தில் கிருஷ்ணா ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை மற்றும் அடகுக்கடை நடத்தி வருகிறார்.

நேற்று பகல் 12 மணியளவில், பிரகாஷ் தனது நகைக்கடையில் தனியாக இருந்துள்ளார். அப்போது, அங்கு ஒரு கார் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய 5 பேர், வாடிக்கையாளர்கள் போல் அந்த நகைக்கடைக்குள் சென்றுள்ளனர். அங்கு, நகை வாங்குவது போல் நடித்த அவர்கள், திடீரென 2 கை துப்பாக்கிகளை எடுத்து, சத்தம் போட்டால் சுட்டு விடுவோம், என பிரகாஷை மிரட்டியதுடன், கடையின் ஷட்டரை மூடினர். இதை தொடர்ந்து, சிசிடிவி கேமரா இணைப்பை துண்டித்த அந்த கும்பல், பிரகாஷை சரமாரி தாக்கி, அவரது கை, கால்களை கட்டிப் போட்டுள்ளனர்.

மேலும், அவரது வாயில் துணியை வைத்து அடைத்துள்ளனர். பின்னர், கடையில் இருந்த ரூ.1.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.5 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துக் கொண்டு, நகைக்கடை ஷட்டரை மூடிவிட்டு, காரில் தப்பிச் சென்றனர். இந்நிலையில், பிரகாஷின் உறவினர் ஒருவர் கடைக்கு வந்தபோது, கடை மூடி இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். சந்தேகத்தின்பேரில், உள்ளே சென்று பார்த்தபோது, பிரகாஷை கட்டிப் போட்டு, கடைக்குள் இந்த நகைகள் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்த ஆவடி முத்தா புதுப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, விசாரணை நடத்தினர். மேலும், வழக்குப்பதிவு செய்து, ஆவடி போலீஸ் துணை கமிஷனர் தலைமையில், 5 தனிப்படைகள் அமைத்து, மர்ம நபர்கள் வந்த கார் பதிவு எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

* வடமாநில கொள்ளையர்கள்
நகைக்கடை கொள்ளை குறித்து ஆவடி கூடுதல் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறுகையில், முதற்கட்ட விசாரணையில் வடமாநிலத்தைச் சேர்ந்த 4 பேர், கடைக்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்துச் சென்றதாக கூறப்படுகிறது. கடையில் அடகு வைத்த நகைகள் இருந்ததால், கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் குறித்து முழு விவரங்கள் இன்னும் தெரியவில்லை. மர்ம நபர்கள் வந்த கார் பதிவெண் கொண்டு விசாரித்து வருகிறோம், என்றார்.

The post நகைக்கடை உரிமையாளரை கட்டிப்போட்டு துப்பாக்கி முனையில் ரூ.1.5 கோடி நகை கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Avadi ,Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை ஆவடியில் சித்த மருத்துவர்...