×

கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் புறநகர் பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும்: கட்சி பிரதிநிதிகளிடம் குடியிருப்போர் சங்கம் கோரிக்கை

திருப்போரூர்: தாழம்பூரில் நடைபெற்ற அனைத்து கட்சி வேட்பாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்போர் சங்கத்தினர், கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் தென் சென்னைக்கு மட்டுமே வழங்கப்படும் குடிநீரை புறநகர் பகுதி மக்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் வரும் 19ம்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த, தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் தங்களது பிரசாரங்களை செய்து வருகின்றனர். அதேபோன்று, பல்வேறு குடியிருப்போர் சங்கங்கள், வாடகைதாரர்கள் சங்கங்களின் சார்பில் வேட்பாளர்களுடன் சந்திப்பு நடத்தி, தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு பேசி வருகின்றனர்.

ஓஎம்ஆர் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பாளர் சங்கங்களின் கூட்டமைப்பு (போம்ரா) சார்பில் அனைத்து கட்சி வேட்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் தாழம்பூரில் நேற்று நடைபெற்றது. காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக, அதிமுக, பாமக, நாம் தமிழர் கட்சி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட 11 வேட்பாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கூட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சந்தோஷ்குமார், அதிமுக வேட்பாளர் ராஜசேகர் சார்பில் அவரது மகன், திமுக வேட்பாளரின் சார்பில் திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, ஒன்றியக்குழு தலைவர் எல்.இதயவர்மன், திமுக நிர்வாகிகள் நாவலூர் ராஜாராம், தாழம்பூர் கருணாகரன், முட்டுக்காடு மயில்வாகனன், சிறுசேரி ஏகாம்பரம் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

கூட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்பாளர் சங்கங்களின் நிர்வாகிகள் பேசியதாவது: அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து முறையாக குப்பைகள் அகற்றப்படவில்லை. கிழக்கு கடற்கரை சாலையில் குப்பைகள் எரிக்கப்படுகின்றன. தாழம்பூர், சிறுசேரி போன்ற ஊராட்சிகளில் சில இடங்களில் மட்டும் சாலையின் அகலம் மிகவும் குறுகலாக உள்ளது. கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் பெறப்படும் குடிநீர் தென் சென்னைக்கு மட்டும் வழங்கப்படுகிறது., இந்த குடிநீரை நாவலூர், தாழம்பூர், சிறுசேரி, முட்டுக்காடு, படூர் போன்ற ஊராட்சிகளுக்கும் வழங்க வேண்டும். கழிவுநீர் கால்வாய்களை ஒன்றிணைத்து கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

இவற்றுக்கு பதிலளித்து பேசிய திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, ஒன்றியக்குழு தலைவர் எல்.இதயவர்மன் ஆகியோர், சென்னையை ஒட்டிய புறநகர் பகுதியாக இருக்கும் தாழம்பூர், சிறுசேரி, முட்டுக்காடு, கோவளம் ஆகியவற்றுக்கு மட்டும் ரூ.42 கோடி செலவில் கோவளம் வடி நிலத்திட்டத்தின் கீழ் மழைநீர் வடிகால்வாய் பணிகள் நடைபெற்று வருகின்றன. குப்பைகளை அகற்றுவதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன. ஆகவே, புறநகர் பகுதிக்கென தனியாக திடக்கழிவு மேலாண்மை திட்ட வளாகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கழிவுநீர் கால்வாய்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால்தான் அவை வெளியேறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உள்ளோம்.குறிப்பாக திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக தனி துறையையே உருவாக்க முதலமைச்சரிடம் நேரில் வலியுறுத்தி உள்ளோம், கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் உரிய தொகையை செலுத்துவதில் நிதி நெருக்கடி உள்ளதால், அதிலிருந்து விலக்கு அளித்து புறநகர் பகுதிகளுக்கு குடிநீர் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. வருகிற நிதியாண்டில் இந்த கோரிக்கையும் நிறைவேறும் என்று உறுதியளித்தனர். இதற்கு குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் பாராட்டும் நன்றியும் தெரிவித்தனர்.

The post கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் புறநகர் பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும்: கட்சி பிரதிநிதிகளிடம் குடியிருப்போர் சங்கம் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tiruporur ,Thalampur ,South Chennai ,Dinakaran ,
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...