தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பம் மேலும் அதிகரிக்கும்; தென்மாவட்டங்களில் 18ம் தேதி மழை பெய்யும்.! வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே வெயில் பட்டையை கிளப்பி வருகிறது. இதனால் மக்கள் மதிய நேரங்களில் வெளியில் போவதை முழுமையாக தவிர்த்து வருகின்றனர். குறிப்பாக சென்னையில் மக்கள் நடமாட முடியாத அளவுக்கு வெப்பம் தகிக்கிறது. வெயில் கொடுமையை போக்க ஆங்காங்கே விற்கப்படும் நீர்ச்சத்து பழங்களை வாங்கி மக்கள் சாப்பிட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் கோடை வெப்பத்தைத் தணிக்கும் வகையில் கடந்த சில நாட்களாக தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த 3 நாட்களுக்கு படிப்படியாக வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் இந்தியப் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரம், வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 16ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவித்துள்ளது. அதை தொடர்ந்து வரும் 18ம் தேதி, மேற்கு தொடர்ச்சி மலை அருகே உள்ள மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

வரும் 19ம்தேதி முதல் 20ம்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் படிப்படியாக வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்போது, அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் படிப்படியாக 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பம் மேலும் அதிகரிக்கும்; தென்மாவட்டங்களில் 18ம் தேதி மழை பெய்யும்.! வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: