×

பார்க்கின்சன் நோய் காரணமும் தீர்வும்!

நன்றி குங்குமம் டாக்டர்

பொதுவாக, மனிதர்கள் ஓடிக்கொண்டிருக்கும் வரைதான் உலகத்தோடு ஒன்றி வாழமுடியும். இல்லையென்றால் ஓரம் கட்டிவிடும் இந்த சமூகம். எனவே, எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகும். அப்படி உடலை சுறுசுறுப்பாக இயக்க மூளையின் செயல்பாடு அவசியமாகும். ஏனென்றால், மூளையில் ஏற்படும் சிறு பாதிப்பு கூட மனிதனைப் பெருமளவில் பாதித்து விடும்.

அப்படி மூளையில் ஏற்படும் ஒரு பிரச்னைதான் ‘பார்க்கின்சன்’. இந்தியாவில் கிட்டத்தட்ட ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாகவே, ஆண்டுதோறும் ஏப்ரல் 11-ஆம் தேதி அன்று உலக பார்க்கின்சன் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் பார்க்கின்சன் நோய் குறித்த விழிப்புணர்வு பரப்பப்படுகிறது. அந்தவகையில், இந்நோய் குறித்து நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

பார்க்கின்சன் என்றால் என்ன..

பார்க்கின்சன் நோய் என்பது நரம்புமண்டலத்தில் ஏற்படும் பாதிப்பாகும். அதாவது, நரம்பு மண்டலத்தில் உள்ள ஒருசில செல்களில் டோபமைன் (Dopamine) எனப்படும் ஹார்மோன் உற்பத்தியாகும். இந்த ஹார்மோனே உடலின் இயக்கங்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த ஹார்மோனின் சுரப்பு குறையும்போது உண்டாகும் நோயே பார்க்கின்சன். பார்க்கின்சன் நோய் ஏற்பட்ட ஒருவருக்கு, உடலின் தசை இயக்கத்தைப் பெருமளவில் இந்த நோய் பாதிக்கிறது. உதாரணமாக, பேசுவது, நடப்பது, அமர்ந்து எழுவது, எழுதுவது, பார்ப்பது போன்றவற்றிற்கு இந்நோயால் பாதிக்கப்பட்டவர், மிகவும் சிரமப்படுவார்.

யார் யாருக்கெல்லாம் இந்நோய் வரும்..
பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களையே பார்க்கின்சன் அதிகம் பாதிக்கிறது. இந்நோய் சிலருக்கு பரம்பரை காரணமாக ஏற்படுகிறது. சிலருக்கு எந்த நோய் தாக்குதலும் இல்லாமலும் வருகிறது. சிலசமயங்களில் 40 வயதுக்கு கீழுள்ள இளம் வயதினரையும் பாதிக்கிறது. முன்பெல்லாம் பாக்சிங் விளையாட்டில் இருப்பவர்களுக்கு தலையில் அடிபடும் வாய்ப்பு அதிகம் என்பதால், அவர்களே இந்நோயால் அதிகளவில் பாதிக்கப்பட்டனர். இதுதவிர, விபத்துகளினால் தலையில் அடிபடுவது, மூளைக்காய்ச்சல், மூளைத்தொற்று போன்றவற்றாலும் இந்நோய் தாக்கும் வாய்ப்பு அதிகம்.

காரணம்

இந்நோய்க்கான காரணம் சமீபத்தில்தான் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, மூளையின் நரம்பு மண்டலத்தில் உள்ள செல்களில் புரோட்டின் அளவின் சமநிலையின்மையே இந்த ஹார்மோன் குறைய காரணம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், சுற்றுச்சூழல், வயதாவதால் ஏற்படும் மாற்றம் மற்றும் அசாதாரணமான ஜீன்கள் போன்றவற்றாலும் இந்நோய் ஏற்படலாம் என கூறப்படுகிறது.

அறிகுறிகள்

இந்நோயை பொருத்தவரை நான்கு அறிகுறிகளே பொதுவாக பார்க்கப்படுகிறது. அவை TRAP என்று அழைக்கப்படுகிறது. அதாவது கை நடுக்கம், கை, கால்கள் மடக்க முடியாமல் இறுக்கமாவது, தசைகளின் செயல்பாடுகள் குறைந்து போவது, உடலில் பேலன்ஸ் இல்லாமல் இருப்பது. இவை நான்கும்தான் முக்கிய அறிகுறிகள். இது தவிர non motor symptoms என்று சொல்லப்படுகிறது. அதாவது, மன அழுத்தம், தூக்கமின்மை, தூக்கத்தில் வித்தியாசமான நடத்தைகள் ஏற்படுவது, கை – கால்களில் வலி, சிறுநீர், மலம் கழிப்பதில் சிக்கல், விழுங்குவதில் பிரச்னை என ஒவ்வொருவருக்கும் அவரவர் நோயின் தீவிரத்திற்கு ஏற்ப அறிகுறிகள் மாறுபடும்.

சிகிச்சைகள்

பார்க்கின்சன் நோய்க்கான சிகிச்சைகள் இரண்டு வகை உண்டு. ஒன்று மருந்து, மாத்திரைகளால் கட்டுப்படுத்துவது மற்றொன்று அறுவைசிகிச்சை மேற்கொள்வது. அதில் முதல் வகையான மருந்து மாத்திரைகளால், டோபமைன் அளவை கூட்டுவதாகும். இதன்மூலம், இந்நோயை ஓரளவு கட்டுப்படுத்த முடியும். இது தவிர, ஒவ்வொருவருக்கும் ஏற்படும் அறிகுறிகளைப் பொருத்து மாற்று மாத்திரைகள் கொடுத்து கட்டுப்படுத்தப்படும். ஆனால், இவைகளால் நோயை கட்டுப்படுத்த முடியுமே தவிர, முழுமையாக குணப்படுத்த முடியாது. இந்த மருந்து மாத்திரைகளை வாழ்நாள் முழுவதும் எடுத்துக் கொள்ள வேண்டியது இருக்கும். இதனைக் கொண்டு வாழ்க்கையைச் சுலபமாக நடத்த முடியும். மேலும் நோய் அடுத்த கட்டத்திற்கு செல்லாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

இதில் இன்னொரு பிரச்னை என்னவென்றால், நோயைக் கட்டுப்படுத்த எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளே சில நேரங்களில் சிக்கல்கள் ஆகலாம். நோயின் தீவிரத்தை கூட்டவும் செய்யலாம். இந்நிலையில் இருப்பவர்களுக்குதான் அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. இதுவும் கூட அனைவருக்கும் மேற்கொள்ள முடியாது. அவரவர் நோய் தீவிரம் மற்றும் உடல் தகுதிக்கு ஏற்பதான் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ள முடியும்.இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ள இந்தியாவில் குறைந்தபட்சம் 15- 25 லட்சங்கள் வரை செலவாகும். அதுபோன்று பார்க்கின்சன் நோயில் பல்வேறு வகைகள் உண்டு. அந்தந்த வகைக்கு ஏற்றவாறு சிகிச்சைகளும், மருந்து மாத்திரைகளும் மாறுபடும்.

தற்காத்துக் கொள்ளும் வழிகள்

தலையில் அடிபடாமல் பார்த்துக் கொள்வது அவசியமாகும். இருச்சக்கர வாகனங்களில் செல்லும்போது ஹெல்மெட் அணிந்து பாதுகாப்பாக செல்வது நல்லது. அதுபோன்று, பெரும்பாலும் நமது சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்துக் கொண்டு தொற்று நோய்கள் ஏற்படாமல் தற்காத்துக் கொள்ள வேண்டும். உணவு வகைகள் என்று எடுத்துக் கொண்டால் மூளையின் செயல்பாட்டுக்கு உகந்த சாத்வீகமான உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. அசைவ உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். அதுபோன்று பல ஆண்டுகளாக மலச்சிக்கல் உள்ளவர்களுக்கும் பார்க்கின்சன் வரலாம். எனவே, மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள் தங்களது உணவு பழக்கங்களை ஆரோக்கியமானதாக கடைபிடிப்பது அவசியமாகும்.

தினசரி உடற்பயிற்சி மேற்கொண்டு உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வது நல்லது. அதுபோன்று யோகா, தியானம் போன்றவற்றினால் மனதை அமைதியாக வைத்துக் கொள்வதும் நல்லது. பார்க்கின்சன் உள்ளவர்கள் பெரும்பாலும் தனிமையைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. உடலை மட்டுல்லாமல், மனதையும் மிகவும் பாதிக்கிறது, இந்நோய். எனவே நண்பர்கள், உறவினர்கள் என மற்றவர்களோடு பேசுவதும், பழகுவதுமாக இருக்க வேண்டும். அப்போதுதான் தன்னம்பிக்கையை இழக்காமல் பார்த்துக்கொள்ள முடியும் அதுபோன்று இந்நோய் வந்துவிட்டதே என்று ஓரிடத்தில் முடங்கிவிடாமல், தங்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியமானது.

அதுபோன்று இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவே, தற்போது நிறைய உபகரணங்கள் வந்துவிட்டது. அவற்றை மருத்துவரின் ஆலோசனை பெற்று தங்களின் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம். பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிறந்த நியூராலஜிஸ்ட், பிஸியோதெரபிஸ்ட்டை அணுகி அவர்களது ஆலோசனை பெறுவது நல்லது. இதில் முக்கியமாக பார்க்க வேண்டியது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் உடன் இருப்பவர்கள், அவர்களை சுற்றி இருப்பவர்களும் இவர்களின் நிலையை புரிந்து கொண்டு அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்

The post பார்க்கின்சன் நோய் காரணமும் தீர்வும்! appeared first on Dinakaran.

Tags : Kumkum ,Dinakaran ,
× RELATED தியாகிகளா அம்மாக்கள்!