×

பேராவூரணி அருகே 70 அடி ஆழ கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு

 

பேராவூரணி, ஏப்.13: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே 70 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்த பசுமாடு தீயணைப்பு வீரர்களின் தீவிர முயற்சியால் உயிருடன் மீட்கப்பட்டது. பேராவூரணி அருகே உள்ள பெருமகளூர் ஆனைகட்டி கொல்லைப் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி வீரமனோகர். இவர் பசுமாடுகளை வைத்து பராமரித்து வருகிறார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு மேய்ச்சலுக்குச் சென்ற அவரது பசு மாடு வீடு திரும்பவில்லை.

பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தபோது, அங்கிருந்த 70 அடி ஆழ கிணற்றுக்குள் பசுமாடு தவறி விழுந்து கத்திக் கொண்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து உடனடியாக பேராவூரணி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலர் ரஜினி தலைமையில், சுப்பையன் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி, கயிறு கட்டி, நீண்ட போராட்டத்துக்கு பிறகு பசு மாட்டை பத்திரமாக உயிருடன் மீட்டு மேலே கொண்டு வந்தனர். பசுமாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு கிராமத்தினர் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.

 

The post பேராவூரணி அருகே 70 அடி ஆழ கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Peravurani ,AP.13 ,THANJAVUR DISTRICT ,Veeramanogar ,Perumagalur Anayigati Kollai ,Peravoorani ,Dinakaran ,
× RELATED இளம் சிறார்கள் ஓட்டுவதற்கு வாகனம் வழங்கிய 2 பேர் மீது வழக்கு