×

பறக்கும் படையினர் பறிமுதல் செய்த ரூ.2.53 கோடி உரிமையாளர்களிடம் வழங்கல்

 

ஈரோடு, ஏப். 13: தேர்தல் பறக்கும்படையினர் சோதனையில் ஈரோடு மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தொகையில் ரூ. 2.53 கோடி உரிமையாளர்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட கடந்த மாதம் 16ம் தேதி பிற்பகல் 3 மணி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.

இதையடுத்து, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் விநியோகம் செய்வதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நாள் முதல் நேற்று காலை வரையில் தேர்தல் பறக்கும் படைக் கண்காணிப்புக் குழுவினர் ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்டதாக இதுவரை ரூ. 3 கோடியே 92 லட்சத்து 48 ஆயிரத்து 663 பறிமுதல் செய்திருந்தனர்.

அதில், உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து ரூ. 2 கோடியே 53 லட்சத்து 66 ஆயிரத்து 593 உரிமையாளர்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதியுள்ள ரூ. 1 கோடியே 38 லட்சத்து 82 ஆயிரத்து 70 மாவட்டக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post பறக்கும் படையினர் பறிமுதல் செய்த ரூ.2.53 கோடி உரிமையாளர்களிடம் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode district ,Election Flying Squad ,
× RELATED காதலனிடம் கொடுத்த நகைகளை மறைக்க...