×

மாமல்லபுரம் பேரூராட்சியில் தபால் வாக்கு சேகரிப்பு தீவிரம்

மாமல்லபுரம், ஏப்.11: மாமல்லபுரம் பேரூராட்சியில் மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்கு சேகரிக்கப்பட்டது. தமிழகத்தில் வரும் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. அதனையொட்டி, 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் பிரசாரம், பேரணி என பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொகுதி முழுவதும் நடந்து வருகிறது. அதில், பொதுமக்கள், தன்னார்வலர்கள், மாற்றுத்திறனாளிகள், தூய்மை பணியாளர்கள், கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதனிடையே, மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் ஆகியோர் விடுப்பட்டு விடக்
கூடாது என்பதால் அவர்களின் வீடுகளுக்கே சென்று வாக்குகளை தேர்தல் அலுவலர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில், மாமல்லபுரம் பேரூராட்சியில் உள்ள மாற்றுத்திறனாளிகள், 85 வயதை கடந்த முதியவர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்க ஏதுவாக கடந்த 15 நாட்களுக்கு முன்பு வாக்குச்சாவடி நிலைய அலுவலர் மூலம் வீடு வீடாக சென்று 12டி படிவம் வழங்கப்பட்டது. இந்நிலையில், மாமல்லபுரம் பேரூராட்சியில் மாற்றுத்திறனாளிகள், 85 வயது முதியவர்கள் 10 பேரின் வீடுகளுக்கு வருவாய்த்துறையினர் நேரில் சென்று தபால் வாக்கு சேகரித்தனர். இதுகுறித்து வருவாய்த்துறையினர் கூறுகையில், ‘மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயது கடந்த முதியவர்கள் என 10 பேரிடம் தபால் வாக்கு சேகரித்துள்ளோம். இந்த தபால் வாக்கு பெட்டி திருப்போரூர் தேர்தல் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. பின்னர், அங்கிருந்து காஞ்சிபுரம் தேர்தல் அலுவலருக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படும்’ என்றனர்.

The post மாமல்லபுரம் பேரூராட்சியில் தபால் வாக்கு சேகரிப்பு தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,Tamil Nadu ,
× RELATED மின்சாரம் பாய்ந்து மயில் உயிரிழப்பு