×

தமிழ்நாட்டு மக்கள் மீது பாஜக விருப்பத்தை திணிக்கிறது: மோடி தலைமையிலான அரசு மீது காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்!!

டெல்லி: தமிழ்நாட்டு மக்கள் மீது பாஜக தனது விருப்பத்தை வலுக்கட்டாயமாக திணிக்க முயற்சித்து வருவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அக்கட்சி பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்; பிரதமர் மோடி தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். பிரதமர் தமிழ்நாட்டு மக்களின் வஞ்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். பிரதமர் தமிழ்நாட்டு மக்களை பிரதிநிதித்துவப்படுத்த விரும்புகிறாரா அல்லது அவர்களை ஆட்சி செய்ய விரும்புகிறாரா என்று கேள்விகள் எழுவதாக ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

2017ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நீட் தேர்வு ஏழை, பிறப்படுத்தப்பட்ட சமூக மாணவர்களுக்கு அநீதி விளைவிக்கும் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டதை போலவே தமிழ்நாட்டில் நடந்தேறியதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், தனியார் பயிற்சி மையத்தில் பல லட்சம் செலவிட்ட 2 விழுக்காடு மாணவர்களுக்கே அது சாத்தியமானதாக கூறினார். குறிப்பாக தமிழ் வழியில், அரசு பள்ளியில் படித்து மருத்துவம் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 2017ம் ஆண்டுக்கு பிறகு படிப்படியாக குறைந்து 2019ம் ஆண்டில் பூஜ்யமாகி விட்டதாக ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

இந்த அநீதிக்கு எதிராகவும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு நீட் விலக்கு கோரியும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டும் குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்காமல் இருந்து வருவதாக அவர் தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமின்றி மிக்ஜாம் புயலால் பாதித்த தமிழ்நாட்டிற்கு பேரிடர் நிவாரண நிதி வழங்காமல் ஒன்றிய அரசு நிறுத்தி வைத்திருப்பதாகவும் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

பெருவெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு இதுவரை ரூ.3,406 கோடி செலவிட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், பேரிடரை சமாளிக்க தேவையான தேசிய பேரிடர் நிதியை கோரும் உரிமை மாநிலத்திற்கு இருந்தும் இதுவரை தமிழ்நாடு கோரிய ரூ.18,214 கோடி வழங்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டு மக்களின் மீது அலட்சியம் காட்டி மோடி ஏன் இந்த பழிவாங்கும் செயலில் ஈடுபட வேண்டும்? என்றும் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து மோடி மீது குற்றச்சாட்டுகளை அடுக்கிய ஜெய்ராம் ரமேஷ், தமிழ்நாட்டிற்கு நிதி பகிர்வதிலும் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுவதாக குற்றம் சாட்டியிருக்கிறார். ஒன்றிய அரசு தமிழ்நாடு மூலம் கிடைக்கும் வரி வருவாயில் ஒரு ரூபாய்க்கு 29 பைசா மட்டுமே திரும்ப வாழங்கப்படுவதாக மாநில நிதியமைச்சரின் பேச்சை சுட்டிக்காட்டியுள்ள அவர், நாட்டின் மக்கள் தொகையில் தமிழ்நாடு 6 சதவீதம் இருந்தும், வரி பங்களிப்பானது 5.3% லிருந்து 4%ஆக குறைக்கப்பட்டு இருப்பதாக ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு மக்களின் இந்த பிரச்சனைகளுக்கு பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

The post தமிழ்நாட்டு மக்கள் மீது பாஜக விருப்பத்தை திணிக்கிறது: மோடி தலைமையிலான அரசு மீது காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்!! appeared first on Dinakaran.

Tags : BJP ,TAMIL NADU ,CONGRESS ,GENERAL SECRETARY ,JAIRAM RAMESH ,MODI ,Delhi ,Akkad ,Secretary General ,
× RELATED சொல்லிட்டாங்க…