×

அமலாக்கத்துறை கைது செய்ததற்கு எதிரான கெஜ்ரிவால் வழக்கு தள்ளுபடி: முதல்வர் என்பதற்காக சலுகை வழங்க முடியாது என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: டெல்லி புதிய மதுபானக் கொள்கை முறைகேடு விவகாரத்தில் முதல்வர் என்பதற்காக எந்தவித சலுகையும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்க முடியாது என்று தீர்ப்பு வழங்கிய டெல்லி உயர்நீதிமன்றம், அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக அவர் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. டெல்லி புதிய மதுபான கொள்கை வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாைலை அமலாக்கத்துறை கடந்த மாதம் 21ம் தேதி கைது செய்தது.

தற்போது கெஜ்ரிவால் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமீன் கோரியும், அமலாக்கத்துறை கைது நடவடிக்கை சட்டவிரோதம் என்று அறிவிக்க வேண்டும் என்று கோரியும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்வர்ணகாந்த் சர்மா நேற்று தீர்ப்பளித்தார். அதில், ”கெஜ்ரிவால் தனது தனிப்பட்ட அதிகாரம் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் என்ற நிலையில் இருந்து கொண்டு டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு விவகாரத்தில் நேரடியாக ஈடுபட்டிருக்கிறார் என்று அமலாக்கத்துறை ஆதாரங்களுடன் குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் இந்த வழக்கில் அப்ரூவராக மாறியவர்கள் கொடுக்கும் வாக்குமூலங்களை சந்தேகிக்க முடியாது. தற்போது இருக்கும் நிலவரத்தின்படி பார்த்தால், விசாரணை நீதிமன்றத்தின் செயல்பாடுகளில் நாங்கள் தலையிட முடியாது. மேலும் முதல்வர் என்ற காரணத்திற்காக எந்த ஒரு சிறப்பு சலுகையும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொடுக்கவோ அல்லது காட்டவோ முடியாது.

மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது மற்றும் அவரை காவலுக்கு அனுப்பியது என்பது சட்டத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவே தவிர, கண்டிப்பாக தேர்தல் நேரம் என்பதால் எடுக்கப்பட்டது கிடையாது. மேலும் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தேர்தல் நேரம் என்பதால் விசாரணைக்கு வர முடியாது என அரவிந்த் கெஜ்ரிவால் முன்னதாக கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அரசியல் செயல்பாடுகள் நீதிமன்றத்தின் முன்பு செல்லத்தக்க ஒன்று கிடையாது. குறிப்பாக இந்த நீதிமன்றத்தின் முன்பாக இருக்கக்கூடிய விவகாரம் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஒன்றிய அரசுக்கு இடையிலான சண்டை கிடையாது. இது அமலாக்கத்துறைக்கும் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையிலான ஒன்றாகும். மேலும் வழக்கு விசாரணையின் போது அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து விவரங்களும் நம்பகத்தன்மை அற்றவையாகும். எனவே முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கையை சட்டவிரோதம் என்று அறிவிக்க முடியாது என்று கூறி கெஜ்ரிவாலின் மனுவை தள்ளுபடி செய்தார்.

* உச்சநீதிமன்றம் விடுவிக்கும் ஆம் ஆத்மி நம்பிக்கை
அமலாக்கத்துறை கைது நடவடிக்கையை எதிர்த்து கெஜ்ரிவால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்த நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் கூறி உள்ளனர். அண்மையில் ஆம்ஆத்மி எம்பி சஞ்சய் சிங்குக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அதுபோல, கெஜ்ரிவாலையும் உச்ச நீதிமன்றம் விடுதலை செய்யும் என்று ஆம் ஆத்மி தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

The post அமலாக்கத்துறை கைது செய்ததற்கு எதிரான கெஜ்ரிவால் வழக்கு தள்ளுபடி: முதல்வர் என்பதற்காக சலுகை வழங்க முடியாது என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Kejriwal ,Delhi High Court ,NEW DELHI ,Arvind Kejriwal ,Delhi ,Dinakaran ,
× RELATED கெஜ்ரிவால் மேல்முறையீடு...